காதலின் கடைசி கோரிக்கை

மேகம்
மழைத்தூறலாய்
மண்மேல் போட்ட
கோலத்தை
ரசிக்க தெரியாமல்
காலால் களைந்து
கடந்து போன
நாட்கள் பல!
பெண்மையை மயக்கும்
மென்மையான மலர்கள்
என்னை வசீகரிக்க
முயன்றும் அவற்றை
கிள்ளி எறிந்து
என் ராட்சச
காம்பில் பெண்
மலராய் பூத்த
காலங்கள் பல!
கொடுங்கோல் அரசனின்
மனதிலும் தாய்மையின்
பாசத்தை பொங்க
செய்யும் மழலையின்
புன்சிரிப்பை கண்டும்
சிரிக்கத் தெரியாமல்
அள்ளி கொஞ்ச நினைக்காமல்
என் இதழ்கள் மௌன
ராகத்தை மீட்டிய
சந்தர்ப்பங்கள் பல!
வானம் திரைமேடையாக
அதில் மேகம் பல
காட்சிகளை சித்தரிக்க
எண்ணி எண்ணி
சலித்தும் அந்த
விண்மீன் ரகசியத்தை
கட்டவிழ்க்க போராடும்
இரவு நிலவின் துணை
வேண்டி மண்டியிட
தென்றல் மதுவாக
இதமான உறவாட
இவற்றை அணைத்துக்கொள்ள
மனமின்றி தொட்டாஞ்சினுங்கியாய்
கண்மூடி உறங்கிய
இருள்கள் பல!
பெண்மை துவளும்
சோக புயலை
கண்டும் காணாமல்
அதை என்
சுவாசகாற்றில் கரைத்து
காற்றோடு கலந்த
பெண் வாசனையாய்
நான் வாழ்ந்த
காலங்கள் பல!
என் மனதை
கற்களால் கட்டிய
கோட்டையாய் அதில்
நான் என்றும்
தோற்று போகாத
ராஜாங்கமான ராணியாய்
பரிவட்டம் கட்டிய
காலங்கள் பல!
ஆனால் இன்றோ
உன் சுவாசகாற்றின்
தீண்டலால் உன்
ஒற்றை மின்னல்
பார்வையால் நொறுங்கிவிட்டேன்
ஒட்டுமொத்தமாக!
இனி நான் வாழும்
காலத்தில் உன் உருவத்தை
தொடரும் நிழலாய் வாழ
பாதுகாக்க நினைக்கிறேன்
என் தேகம் பிணைத்து
வைத்த ஜீவனை
சில நாட்களுக்காக!
என் வெறுமை வார்த்தைகளை
ஊற்றாய் கொட்டி இறைத்த
என் இதழ்கள்
உன்னிடம் கூற துடிக்கும்
அன்பு துளிகளுக்கு
மட்டும் மௌனமாய்
பிறவி ஊமையாய்
மாறிவிட்டது!
இதுவரை நான்
நடமாடும் கல்லாய்
இருந்தேன் அன்று
நான் கலங்கவில்லை
என்னை பலர்
வெறுமையின் சித்திரமாய்
வடித்ததை கண்டு !
ஆனால் இன்று
நான் உறைந்துவிட்டேன்
உன் கண்கள் சிறிதும்
என்னை ஏறெடுத்து
பார்க்கவில்லை என்று!
நான் எப்படி கூறுவேன்
என் காதலை?
ஓரிரு வார்த்தைகளில்
கூறிவிட என் காதல்
முடிவல்ல!தொடரும்
என் ஜென்மத்தின் பயணம்!
உன்னோடு உறவாட
துடிக்கும் என் இதயமல்லவா
என் காதல்!
ஆம்! அதற்கு
துடிக்கத்தான் தெரியும்
ஆசைகளை மௌனமாய்
புதைத்து புதைத்து
விழிகளால் கண்ணீர்
வடிக்கும் மேக
கடல் தானே!
உனக்கு தெரியுமா?
உன்னை கண்டபின்
என் இதயத்தின்
ஒவ்வொரு செல்லும்
தன் கட்டுபாட்டை மீறி
உன் நினைவின் கீதத்தை
பாடி பாடி தன்
உயிர் துடிப்பை
மறந்து போனது என்று!
நான் கூறியும்
நீ என் காதலை
மறுத்துவிட்டால்?
என்னை மன்னித்துவிடு
நான் கூற மாட்டேன்
என் காதலை !
இதுவரை மௌனமாய்
என் காலத்தை தள்ளிய
நான் இனி உன் மௌன
ஸ்பரிசத்தை சுவாசித்தே
என் ஆசைகளை
தள்ளி விடுவேன்!
என்றாவது
நீ என் காதலை
அறிந்தால் உன்
ஒற்றை வார்த்தையை
மட்டும் எனக்கு
அஞ்சலியாய் செலுத்துவாயா?
உன் சம்மதம் இல்லை
என்றாலும் மருத்தாவது
ஒரு வார்த்தை
கூறிவிடு!
இதுதான் என்
மரணத்தின் போதும்
என் இதழ்
திறந்து கேட்கும்
என் கடைசி கோரிக்கை!...