சர்வ சமய சமரசக் கீர்த்தனைகளில் பெண்மை -ஆ ஷைலா ஹெலின்

சர்வ சமய சமரசக் கீர்த்தனைகளில் பெண்மை -ஆ. ஷைலா ஹெலின்

பெண்மை காவலர்களின் வரிசையில் முதலிடம் பெறுபவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையும் ஒருவர். அவர் பெண்கள் சமுதாயத்தைப் பற்றி நன்கு சிந்தித்து,உயர்த்த விரும்பியவர்களான தந்தை பெரியார்,தமிழ்த்தென்றல் திரு.வி.க, மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் போன்றோர்களின் வரிசையில் முதன்மையானவர். அவர் கண்ட பெண்ணின் சிறப்பையும், பெண்மை சிறக்க வேண்டும் என்று விரும்பிய அவர் விழைவையும்,அவர் வகுத்த பெண்மையின் இலக்கணங்களையும் சர்வசமய சமரசக் கீர்த்ததனைகளில் வழி நின்று ஆய்வதே நோக்கமாகும்.

வேதநாயகம் பிள்ளை பெண்மையை உயர்த்த முயன்ற முன்னோடி. அதற்காகவே பெண்மதி மாலை பெண்கல்வி, பெண்மானம் ஆகிய நூல்களை இயற்றினார். நீதிநூல்,சர்வசமய சமரசக் கீர்த்தனைகள் ஆகிய நூல்களில் சில பகுதிகளைப் பெண்மைக்கு ஒதுக்கினார். பிரதாப முதலியார் சரித்திரம்> சுகுண சுந்தரி சரித்திரம் ஆகியவற்றில் பெண்மையின் உயர்வைப் பின்புலமாக்கினார்.
வேதநாயகரின் சர்வசமய சமரசக் கீர்த்தனைகள் எனும் நூல் சமயத்தைப் பொது நோக்குடன் பார்க்கும் பார்வையைக் குறிக்கிறது. சமய சார்புடைய அந்நூலிலும் இவர் பெண்களுக்கெனச் சில கீர்த்தனைகளைப் பாடியுள்ளார். இவர் எழுதிய நீதிநூலிலும்,பெண் கல்வியிலும் காணப்படாத புதிய பார்வைகள் இந்நூலில் காணப்படுகின்றன. இவருடைய கீர்த்தனைகள் இசையோடும், தாளத்தோடும் பாடும் சிறப்பின. ஒவ்வொரு கீர்த்தனைக்கும் பாடப்பட வேண்டிய இராகமும் தாளமும் கொடுக்கப்பட்டுள்ளன.

பெண்ணின் பண்பு நலன்கள்
சர்வ சமய சமரச் கீர்த்தனைகளில் நல்ல பெண்ணின் இலக்கணத்தை கூறுகிறார்.
உத்தம குணங்களே ஆபரணம் -ரத்ன
ஓலைமுதல் நகைகள் ஒருதிரணம்
பத்தாவை பிரிவது வேமரணம் - வரும்
பந்து ஜனங்கட்கெல்லாம் ஆதரணம்
சுத்தம் சித்தம் உடையாள் - தூய அன்ன நடையாள்
துதி கொள் சுந்தரி -சுபநிரந்தரி
மதியில்சுந்தரி –வசன தந்திரி (கீர்த்தனை 179)

பெண்கள் கொண்டு வரும் சீதனம்,ஜாதகப் பொருத்தம்,நிறம்,புறத்தோற்றம் ஆகியன கொண்டுதான் மணப் பெண்ணைத் தேர்ந்தெடுக் கிறார்களே தவிர,ஒரு பெண்ணில் குண நலன்களை நினைத்துத் தேர்ந்தெடுப்பதில்லை என்பதை வேதநாயகர் குறிப்பிடுகின்றார்.
ஒருவன் தன் நண்பனை அனுப்பிப் பெண்பார்த்து வரச் சொல்லுகிறான். எந்த பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், எந்த பெண்ணை தேர்ந்தெடுக்க் கூடாது என்றும் அவன் கூறுவதாக அவர் அமைத்த கீர்த்தனைகளின் வரிகள்,
அழகுங்குணமுள் ளவள்நல்லஜோடு
அழகில்லையாயினும் குணத்தையேதேடு
பழகுநற்குணமில்லா அழகியின் வீடு
பாம்பு புலி கரடி வாழ்ந்திடுங் காடு

நல்லவள் ஏழை யானாலுந்தட்டாதே
நானூறு போனாலும் நீபின்னிடாதே! (கீர்த்தனை 180)

என்று பணத்தை விடக் குணமே பெரிது என்றும், பணத்தை கொடுத்தாகிலும் நல்ல பெண்ணைக் கொள்ள வேண்டும் என்று வேதநாயகர் குறிப்பிடுகின்றார்.
தீயப்பெண்களின் குணங்கள்
சங்க சமய சமரசக் கீர்த்தனைகளி;ல் பெண்ணுக்குள்ள இழி குணங்கள் கூறப்படுகின்றன.

எழுத்துவாசம் அறியாதவள் மட்டி
ஏதும் அறியாள் அவள் சுரண்டுவாள் சட்டி
கழுத்திலோ அவளுக்குத் தாலியைக் கட்டி
காரியமிலை அது காசுக்கு நஷ்டி

உடைமைகளுடன் பணங் காசின்மேல் இச்சை
உள்ளவள் சண்டைக்கும் கட்டுவாள் கச்சை
இடைவிடாமல் கெடுமே என் லச்சை
இவளைக் கொள்ளுவதிலும் எடுக்கலாம் பிச்சை (கீர்த்தனை 180)

என்று தீயப்பெண்ணின் குணங்களைக் கூறி திருமணம் ஆயிரங்காலத்துப் பயிராகையால் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுக்குமாறு வேதநாயகன் குறிப்பிடுகின்றார்.
பெண்ணின் பெருமை
பெண்ணின் பண்பு நலனை – குறிப்பாகக் கற்பு பெருமையை அவர் வர்ணிக்கும் போக்கு சிறப்பாக அமைகிறது.

வெள்ளியும் தங்கமும் அள்ளிக்கொடுத்தாலும்
வேறொருவர் முகம் பாராள் - நல்ல
மேன்மை துரைமகள் ஆனாலும் வீட்டு
வேலைக்குப் பின்னிட்டுப் சேராள் -நிதம்

ஆபத்து வேளையில் அறிவு சொல் மந்திரி
அரும்பிணிக்கவளே சஞ்சீவி – துன்பம்
அணுகும்போதாறுதல் தரித்திர காலத்தில்
அருநிதியாம் அந்தத் தேவி - உம்மைப்
பாபத்தில் வீழாமல் போதிக்கும்சற்குரு (கீர்த்தனை 181)
பெண்கல்வி
முதன் முதலாக பெண்கல்வியை வற்புறுத்தியவர் வேதநாயகர். பெண்கள் சுதந்திரம் பெற வேண்டுமென்றால் பெண்கல்வி இன்றியமையாதது என்று வற்புறுத்துகிறார். வேதநாயகர் காலமான> 19-ஆம் நூற்றாண்டின் இறுதி காலகட்டத்தில் ஆண்கள் வெள்ளையர்களிடம் அடிமைகளாக இருந்தனர். அன்று ஆண்களிடம் பெண்கள் அடிமைப்பட்டிருந்தனர். படிப்பிருந்தால் மனம் பண்படுவதோடு சிந்தனை துளிர் வரும். எனவே இருபாலருக்கும் முக்கியமானது கல்வி என்பதை விளங்கச் செய்தவர் வேதநாயகர்.
ஆடவர்களை நோக்கி பெண்கள் கூறுவதாக இயற்றிய வேதநாயகரின் கீர்த்தனை வரிகளாவன:
விந்தையைப் படியுங்கள் - தயைசெய்து
விந்தையைப் படியுங்கள்
படியாத ஆண்களுடனேசம் - சற்றும்
பண்ண நீர் சம்மதியீர் லவலேசம்
மடம் உறும் எங்களுடன் சகவாசம் - செய்ய
மட்டும் உமக்கில்லையே சங்கோசம் - இது (கீர்த்தனை 188)
மற்றும் ஆடவர்கள் பெண்களுக்கு கல்வி கொடுத்திட வேண்டும் என்று எச்சரிக்கிறார் வேதநாயகர்.
குடும்ப சூழலில் பெண்
மாமி நாத்தியின் கொடுமையைப் பற்றி ஒரு பெண் முறையிடுவது போன்ற உருக்கமான கீர்த்தனைப் பாடல்களை அமைத்துள்ளார்.
ஒத்திருந்தால் அவட்கேன் மனஸ்தாபம்
ஓகோ சகியே இதுவென்ன பாபம்?.....
கலியாணம் செய்தும் உண்டோ சன்னியாசம்
கடனும் வாங்கியும் ஏன் உபவாசம்? (கீர்த்தனை 186)
என்று கூறியிருப்பினும் பின் ஒரு கீர்த்தனையில் வேதநாயகர் மகளுக்கு தந்தையாக இருந்து அறிவுரை கூறுவது போன்று,
மாமி நாத்திகளை மதித்துறவாடு
மகளுந் தாயும் போல மகிழ்ந்து நீகூடு (கீர்த்தனை 178)
என பாடியுள்ளார்.
பெண்ணின் பெருமையை மற்றவர் மனதில் நன்கு பதிய, இசையோடு பாடும் முறையில் சர்வ சமய சமரசக் கீர்த்தனைகளைப் பாடியுள்ளார். இவர் காலத்தில் பெண்கல்வி என்பது கனவிலும் கருதக்கூடாததாய் இருந்து வந்தது. இதைத் தமிழகத்தில் துணிந்து வற்புறுத்தியவர் வேதநாயகரே. எனவே இப் பேராண்மையாளரை பெண்ணுலகம் போற்றக் கடைமைப்பட்டுள்ளோம்.

எழுதியவர் : ஆ. ஷைலா ஹெலின் (10-Apr-15, 8:56 pm)
பார்வை : 548

மேலே