நயமிகு பாடகர் நாகூர் ஹனீபா

1939 ஆம் ஆண்டு...
தமிழினத்தலைவர்கள் முன்னெடுத்த இந்தி எதிர்ப்பு போராட்டக்களத்தில் கால் வைத்தபோது அந்த சிறுவருக்கு வயது 13. மொழிப்பற்றும், இனப்பற்றும் அந்த 13 வது சிறுவரை போராட்டக்களம் நோக்கி போகச்செய்தது...அந்த சிறுவர்தான் இசைமுரசு ஹாஜி, நாகூர் E. M. ஹனீபா.

நீதிக்கட்சியின் ஆரம்ப காலகட்டம் முதல் இன்றுவரை நேர்மை, நெஞ்சுரம் மாறாமல் கொள்கைப்பிடிப்போடு வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்களுள் ஒருவர் இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்கள்.

மாற்று கட்சியினரும் மதிக்கும் மாண்பாளர். மாற்று முகாமைச்சேர்ந்த முகவர்கள் ஹனீபாவை தமது கட்சிக்கு அழைத்தபோது “எனக்கு ஒரே இறைவன், ஒரே கட்சி” - என்று நயம்பட உரைத்த நெறியாளர். “அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, இலட்சியத்தில் உறுதி” என்ற அண்ணாவின் போட்பாட்டை இறுதிவரை அடிமனதில் தாங்கி அனுவளவும் வழுவாது வாழ்ந்த வரலாறு நாகூர் ஹனீபா அவர்கள்.

1940 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக அயராது, ஆத்மார்த்தத்தோடு பாடியவர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாகூர் ஹனீபாவின் இஸ்லாமிய கீதம் ஒலிக்காத முஸ்லீம் பெருமக்கள் வீடுகள் மிகக்குறைவே. இஸ்லாமிய கீதம் என்றாலே இன்றளவும் எல்லோருக்கும் உடன் நினைவு வருவது நாகூர் ஹனிபாதான். அப்படியொரு ஈர்ப்பு அந்த பெருமகன் குரலில்.

மேடையில் தான் எந்த பாடலை பாடினாலும், “இந்த பாடலை இயற்றியவர் நாகூர் சலீம், புலவர், ஆபிதீன்” என்று பாடலை இயற்றிய கவிஞர்களை அடையாளப்படுத்தும் அழகிய குணம் உடையவர்.

காயிதே மில்லத் இஸ்மாயில் சாகேப், பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, இவர்களின் அன்புக்கும், பெருமதிப்பிற்கும் உரியவராக திகழ்ந்தவர். கலைஞரை மு.க. என்று பெயர் சொல்லி அழைக்கும் நெருங்கிய நட்புடையவர். இத்துனை இருந்தும் யாரிடத்தும், எதையும் இரவாத இனிய பண்பாளர். கலைஞர் ஆட்சியின்போது M.L.C. மற்றும் இஸ்லாமிய வக்பு வாரியத் தலைவராக பொறுப்பு வகித்தவர். “கலைமாமணி” விருது கலைஞரால் கொடுத்து கெளரவிக்கப்பட்டவர்.

இவரின் மீது பெருமதிப்பு வைத்திருந்த் மதுரை ஆதினம் அவர்கள் ஹனிபா அவர்களின் வீட்டிற்கு சென்று உடல்நலம் விசாரித்து வந்தது இவரின் மேல் மாற்று மதத்தினருக்கும் உள்ள நன்மதிப்பைக் காட்டுகிறது.

நாகூர் ஹனிபா அவர்களின் இழப்பு, தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

காலம் உள்ளவரை அன்னாரின் கானங்கள் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

ஹனிபா...நீங்கள் பாடிய பாக்கள் எல்லாம் ஹனி...பா..(Honey பா)

அன்பன், கவிஞர், தஞ்சாவூரான்

எழுதியவர் : கவிஞர், தஞ்சாவூரான் (11-Apr-15, 12:46 pm)
சேர்த்தது : தஞ்சாவூரான்
பார்வை : 165

மேலே