எழுதப் படாத மரண வாக்கு மூலம்

(ஆந்திர மாநிலக் காட்டுக்குள் அநியாயமாய் மனிதத் தன்மையற்ற காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழ் நெஞ்சங்களின் நினைவாய் எழுதியது)

எழுதப்படாத மரண வாக்குமூலம்~ஆதர்ஷ்ஜி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பொங்கியெழும் என் தமிழ்ச் சமூகமே
எங்களுக்காக இரு நிமிடம் தா.
அழுது அஞ்சலித்து மறந்துவிட அல்ல,
எழுதப்படா எங்கள் வாக்கு மூலம் படிக்க ...!

விறகு எரியவில்லையே வீட்டில் என
விறகு வெட்டப்போனோம்..
விறகுடனே விறகாய் சேர்ந்தெரியத் திரும்பி வந்தோம் .

"எங்கள் கோடாரியல்ல" என்று நாங்கள் சொன்னதற்கு
தங்கக் கோடாரி தர தேவதைகளா அவர்கள் ?
எங்கும் குருதி நக்கும் இருகால் ஓநாய்கள் அன்றோ ?
அங்கம் துளைத்திட்ட தோட்டாக்கள் தந்தனரே ...!

மங்கிய பார்வையிலே மரணத்தின் வாயிலிலே
தாங்கி வளர்த்திட்ட தாய் தந்தை வந்தாரே
தங்கமே பார்க்காத என் தங்கம்மா வந்தாளே ...
சிங்கமாய்ப் பிறந்த என் சிறுமகனும் வந்தானே ...
எங்கு காண்போமோ என நினைத்து வீழ்ந்தோமே !
அங்கேயே செத்தோமே ஆந்திரத்து எல்லையிலே !

பொங்கியெழும் என் தமிழ்ச் சமூகமே
புலம்பி அடங்குவதை இனியாவது விட்டு விடு !
நாங்கள் பிழைத்திருக்கையிலேயே பிழைத்திடவே வழி கொடு !
உழைப்பைத் தருபவர் யாருக்கும் உயிர் கொடு !
பிழைப்பைத் தடுப்பவர் யாரையும் பலியிடு !

~ஆதர்ஷ்ஜி
(ஆந்திர மாநிலக் காட்டுக்குள் அநியாயமாய் மனிதத் தன்மையற்ற காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழ் நெஞ்சங்களின் நினைவாய் எழுதியது)

எழுதியவர் : ஆதர்ஷ்ஜி (12-Apr-15, 1:28 am)
பார்வை : 289

மேலே