இரசிகமணி டிகேசி என்ற தெகசி---------படித்ததில் பிடித்தது

இரசிகமணி டி.கே.சி என்ற தெ.க.சி.


தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான் அவர்கள் எழுதியிருக்கும் ‘ரசிகமணி டி.கே.சி’ என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கின்றேன்.

அதில் தென்காசியைச் சேர்ந்த களங்காடு என்ற ஊரினரான திரு.சிதம்பரநாத முதலியாரவர்கள், பத்திரங்களில் அவ்வாறு குறிக்கப்பட்ட காரணங்களினால் தெ.க.சி என்று அழைக்கப்படிருக்கலாம் என்றும் என்ன இருந்தாலும் இலக்கிய உலகத்தில் அவர் டி.கேசி என்றே பிரபலமானவர் என்று குறிப்பிடுகிறார்.

வேறுஓரிடத்தில் ஸ்காட்லாந்து தேசத்துப்பாதிரியாரும், வினோபாபாவேயும், சொஃபியா வாடியா (மும்பை), டாக்டர் அருண்டேலும் (ஆஸ்திரேலியர்) தமிழ் தெரியாத ஆரியர்கள் என்றாலும் டி.கேசி.யின் இதய ஒலி அவர்களுடைய இதயத்துக்குள் மொட்டுகளாகிறது. ஆனால் நமது தமிழ் அன்பர்கள் பலரால் இன்னும் டி.கேசி யார் என்று தெரிந்து கொள்ளவும் முடியவில்லை. அவரது இதய ஒலியைக் கேட்கும் காதுகளையும் அவர்கள் பெறக்காணோம் என்று வருந்தியுள்ளார். அப்பொழுது அவர் டி.கேசி பற்றிக் குறிப்பிட்டுள்ள ஒரு நிகழ்ச்சி சுவையானது என்று நான் நம்புவதால் இங்கு பதிகிறேன்:

“டி.கேசி. கிறிஸ்துவக் கல்லூரி மாணவர். அந்தப் பள்ளியில் பழைய மாணவர் விழா ஒன்று நடந்தது. அதற்கு டி.கேசி பக்கத்தில் ஒரு ஸ்காட்லண்டு பாதிரியார் உட்கார்ந்திருந்தார்.அவரிடன் டி.கேசி யை அறிமுகப்படுத்தி வைத்தார்கள். பாதிரியாரோ இந்தியர்களைப் பற்றியெல்லாம் நல்ல எண்ணம் கொண்டவரல்லர். அவரிடம் பல விஷயங்களைப் பற்றி டி.கேசி பேசிக்கொண்டிருந்தார். பாதிரியார் சொன்னார்: ஸ்காட்லண்டு தேசத்தவர்களாகிய எங்களுக்கு மரங்கள் என்றால் நிரம்பப் பிரியம். இந்தியர்களாகிய உங்களுக்கு எப்படியோ? (we love trees, do you?) என்று கேட்டார் பாதிரியார். இதற்கு டி.கேசி சொன்ன பதில் இதுதான்: மரங்களிடத்தில் எங்களுக்குப் பிரியம் கிடையது, பக்தியே செலுத்துகிறோம்.(we do not love trees, but we worship them.) என்பதுதான் இவர் சொன்னது. மேலும் சொன்னார். இங்கு எங்கள் தமிழ் நாட்டிலே ஒவ்வொரு கோயிலும் ஒரு மரத்தைச் சுற்றியே எழுந்திருக்கிறது. அதனையே நங்கள் தலவிருட்சம் என்கிறோம். குற்றாலத்தில் ஒரு குறும்பலா, மதுரையிலே கடம்பமரம், திருவானைக்காவிலே நாவல்மரம்,திருப்பெருந்துறையிலே குருந்தமரம் என்றெல்லாம் வைத்து வளர்த்து அந்த மரங்களையே வணங்கி வந்திருக்கிறோம். எல்லாப் பொருள்களிலேயும் இறைவனைக் காணும் தமிழ் அறிஞர்கள் மரத்தையே இறைவனாகக் கண்டதில் வியப்பில்லைதானே!. ஒரு மரம், துளிர்ப்பதும், பூப்பதும்,காய்ப்பதும், கனிவதும் கண்டு அதிசயத்திருக்கிறார்கள். ஒவ்வொரு மரத்துக்குள்ளே இருக்கும் ரஸாயன விந்தைகள், இஞ்சினீயரிங் ஜாலங்கள், சிற்ப மர்மங்கள் இவற்றைக் கண்டு அனுபவித்திருக்கிறார்கள். இந்தத் தாவர வர்க்கங்களுக்குள்ள அரிய ஞாபக சக்தியையும், உயிர் தத்துவத்தையும் கண்டு வியந்திருக்கிறர்கள். இவற்றையெல்லாம் தெரிந்து, மரத்திற்குள்ளிருந்து தொழிற்படும் இறைவனையே வணங்கியிருக்கிறார்கள்’ என்று விளக்கம் கூறினார் டி.கேசி. இதனைக் கேட்ட ஸ்காட்லண்டு பாதிரியார் அரண்டே போனார்..”என்பதே.
அதே போல், சில வருடங்களுக்கு முன் டி.கேசி பம்பாய் சென்றிருந்த பொழுது மேடம் சோஃபியா வாடியா அம்மையாரின் வீட்டிற்கு விருந்துக்குச் சென்றிருந்தார். சோஃபியா அம்மியார் இந்தியன் P.E.N.சங்கத்தின் தலைவர்; பெரிய இலக்கிய மேதை. பிரான்ஸ் தேசத்தவர். பன்மொழிப் புலமை வாய்ந்தவரானாலும் தமிழ் தெரியாதவர். அவரிடம் அளவளாவிக்கொண்டிருந்த பொழுது திருவாசகத்திலிருந்து ஒரு பாட்டை ஒருதரம் பாடிக் காட்டி விளக்கம் கூறினார். அதாவது:

அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே
ஒப்பாக ஒப்புவிக்க உள்ளத்தார் உள்ளிருக்கும்
அப்பாலுக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய்

என்பது பாடலின் வரிகள். அவர் கூறிய விளக்கம்:

‘ ஒரு குடத்துத் தண்ணீரை வீட்டுக்குக் கொண்டுவந்து வீட்டிலும் மச்சுப் படியேறி மாடிக்குக் கொண்டு சேர்ப்பதற்கும் திணறிப் போகிறோம நாம். ஆனால் இறைவனோ கடலிலுள்ள நீரையெல்லாம் ஆவியாக மாற்றுகிறான்; அந்த வானத்தில் கொண்டுபோய்ச் சேமித்து வைத்துப் பருவகாலம் வந்தால் மழையாகக் கொட்டுகிறான்; இந்த அரிய சக்தியையும் கருணையையும் உணர்ந்து வியந்த நம் முன்னோர்கள் சிவபெருமான் தலைமேலே கங்கையையே குடமாக வைத்து இருக்கிறார் என்ற கற்பனை செய்திருக்கிறார்கள்; அப்பு ஆர் சடையப்பா! என்று அவனைப் பாராட்டியிருக்கிறார்கள்.தம்மையே அவனிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள். அப்படிப்பட்ட ஞானிகளுடைய உள்ளத்திலே அபன் சப்பணமிட்டு உட்கார்ந்திருக்கிறான். அதே சமயத்தில் இத்தகைய ஞானம் இல்லாதவர்களால் அறியப்படாதவனாயும், அண்டமும் கடந்து, அகண்டமும் கடந்த எங்கேயோ தூரதொலைவில் உள்ள பேர்வழியாகவும் இருக்கிறார்.” என்பதே.
இதயெல்லாம் கேட்ட் சோஃபியா அம்மையார் மணிவாசகரது பாடலை பலமுறை சொல்லச் சொல்லிக் கேட்டு அனுபவித்து ‘தமிழ் பாஷையில் ஓர் அபூர்வ மந்திர சக்தி இருக்கிறது. பாட்டின் ஒலியைக் கேட்கும்போதே ஓர் ஆனந்த மயக்கம் ஏற்படுகிறது என்றார் என்பதுவுமேயாம்.

எழுதியவர் : தொ.மு.பாஸ்கரதொண்டைமான்- (க (13-Apr-15, 11:21 pm)
பார்வை : 377

சிறந்த கட்டுரைகள்

மேலே