தோழிகளின் டைரியிலிருந்து

கடந்த
சில நாட்களாக
அதிகமாய் படிக்கும்
எழுதும் இருவரிகள்

"நினைக்க மறந்தாலும்
மறக்க நினைக்காதே"

கல்லூரி இறுதியாண்டின்
விளிம்பில் இருக்கும்
அவர்களுக்கு நட்பின்
பிரிவு கவிதையானது...

"கீப் இன் டச்"
என்று பகிர
அப்பா, அண்ணாவின்
எண்கள் மட்டுமே
உதவியது..

உன்னிடம் பிடிக்கும்
பிடிக்காதென்று
அழுதும் சிரித்தும்
பசியையாற்றிக்
கொண்டது நம்
டைரிகள்....

கடைசியாய்
"செண்ட் யுவர் டும் டும் கார்டு"
மஞ்சள் நிறத்தில்
தவறாமல் இடம்
பெற்றது

சூழ்நிலைகள்
அவ்வெழுத்துக்களையே
அட்சதையாய் மாற்றக்கூடும்..

அரவணைத்து அழுதப்பின்
"இதுக்கப்பறம் பேச முடியாதா
திரும்ப எப்ப டி நாம பாக்கப்போறோம்"

ஒட்டு மொத்த
உயிர் தோழிகளின்
வரலாற்றை எல்லாம்
கிழித்துவிட்டு

கைகளை இறுகப்பற்றி
குழந்தையாய் கேட்டுக்
கொள்ளும் தோழிகளிடம்

அத்தனை விஞ்ஞானமும்
தோற்றுப்போகட்டும்....!!!

எழுதியவர் : மணிமேகலை (14-Apr-15, 8:41 pm)
Tanglish : uyir tholikal
பார்வை : 148

மேலே