யுகங்கள் தாண்டும் சிறகுகள் 20

இந்த நிலவு மட்டும் இல்லையென்றால் உலகத்தில் கவிதைகளின் கனம் பாதியாக குறைந்துபோயிருக்கும். காதல் துவக்கி வைக்கும் பெரும்பான்மையான கவிதைகளை நிலவுதான் நகர்த்தி செல்கிறது. ஒரு நவநகரவாசியைப் போல வளர்ந்து தேய்ந்து மறைந்து வளர்ந்து, இருக்கும் ஒரே உலகத்தையே மீண்டும் மீண்டும் சுற்றிக்கொண்டிருக்கும் நிலவுக்குத்தான் முதல் குறியை வைக்கின்றனர், கரையுடைத்துப் பெருகும் காதலுணர்ச்சியை வடிக்க கவிதை மட்டுமே ஒரே வழி என்றெண்ணி பேனா தூக்கும் எவரும். வென்றாலும் நிலா, தோற்றாலும் நிலா, வென்றால் வெள்ளி நிலா, தோற்றால் தேய் நிலா, வென்றால் நிலவைத் தேனால் நிரப்புபவர்கள், தோற்றால் நிலவுக்கும் சேர்த்து தாடி வளர்க்கின்றனர். நிலவை நிலவாக இருக்கவிடுவதில்லை எவரும், விழி நிலவாகிறது, விழி காக்கும் இமை நிலவாகிறது, இமை தாண்டி படர்ந்து நீளும் புருவம் நிலவாகிறது, இதழ் நிலவாகிறது, இதழ் விரிக்கும் புன்னகை நிலவாகிறது, அட நாசிக்கூர்கூட பிறைநிலவின் முனையாகிறது, இந்த குட்டி நிலவுகள் அனைத்தும் சேர்ந்த மொத்த முகமும் ஒரு குழுநிலவாகிறது. இப்படியாக கவிதைகளில் காதலுக்கு அடுத்தபடியாய் பேராதிக்கம் செலுத்தும் நிலவின் இந்த நகர்வலத்திலேயே, இந்த கவிதாயினியின் கவிராஜ்ஜியம் கருக்கொள்கிறது.

"இரவில் தினந்தோறும்
நகர்வலம் வருகிறது
நிலா!
தொலைந்த தன்
காதலனைத் தேடி ..”

ஓர் இனிய துவக்கம் என்பதைத் தவிர இந்தக் கவிதையைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. வேண்டுமென்றால் எழுத்து.காமில் அதிகம் உபயோகப்படுத்தப்படும் சொல்லான “அருமை”யை ஒரு ஊக்குவிப்புக்காக சொல்லி வைத்துவிட்டு ஒதுங்கிப்போய்விடலாம். இருந்தாலும், இந்தக் கவிதைதான் ஒரு மாபெரும் விருட்சத்தை தன்னகப்படுத்தியிருந்த விதை. அன்று இந்த அருமையை சிலர் உண்மையாகவோ அல்லது ஊக்குவிப்புக்காகவோ சொல்லிவிட்டு சென்றிருந்தாலும் அது அவர்கள் விட்ட நீர். அதற்கான நன்றியாக இக்கவிதையை வைத்தே இந்தக்கட்டுரையை துவங்குகிறேன்.

தினமும் கடந்து போகும் சாலைதான் அது. தினமும் கடப்பதாலேயே அந்த சாலை நாமாகிறது, நம்மோடு நடக்கிறது, ஓடுகிறது, அதிவேகமாய் மகிழுந்தில் ஒரு ஜன்னல் காட்சியாய் பறந்து போகிறது. நாம் நிற்கும்போது சாலையும் நிற்கிறது, நாம் நிற்கும்போதுதான் அது சாலையாகிறது. அந்த சாலை நமக்கானது மட்டுமல்ல என்று உறைக்கிறது. அதுவரை அந்த சாலையாகவே கண்டுவிட்டிருந்த சாலைவாழ் மக்களும் சகமனிதர்கள்தான் என்பதுவும் புலப்படுகிறது. சிறு புன்னகை கூட சுயநலமாகிவிட்டிருக்கும் எந்திரவாழ்க்கையின் கொடூரம் கண்முன் விரிகிறது. அந்த பூக்கார கிழவியும், பிளாட்பார சிறுமியும், வண்டி இழுக்கும் பெரியவரும் அந்த சாலையை நகர்த்துபவர்கள்தான், பரிதாபம் வேண்டாம் புன்னகையைப் பரிசளியுங்கள். எல்லைக்கோடுகள் நகர்ந்து கொண்டேயிருக்கும் ஓட்டப்பந்தயமாகிவிட்ட வாழ்க்கையில் தனியாக ஓடுதல் தூரத்தை அதிகரிக்குமேயன்றி ஓட்டத்தை சுவாரசியமாக்கப் போவதில்லை. இதில் யாரும் வெற்றியாளருமில்லை, போட்டியாளருமில்லை, சகபயணிகள்தாம், அவ்வப்போது புன்னகைத்து, கைதட்டி, கைகொடுத்து ஓடிப்பாருங்கள், பயணம் இனிமையாக இருக்கும்.

"விடிகாலை நான்கு மணிக்கே
எழுந்து பூக்களை
மலர வைத்து
கடை விரிக்கிறாள் பாட்டி
ஒரு புன்னகை வாங்குங்கள் ...
விலையேதுமில்லை !
எப்படியும் பூச்சரங்களை வாழ
வைத்துவிடுவாள் …”

காதல்.காதல்.காதல். காதல் பற்றி எழுதிய பக்கங்களெல்லாம் தாகம் தீராது தன்னையே விரித்துக்கொள்கின்றன. அங்கே மொழி காதலை விரிக்கிறது, காதலால் மொழி விரிகிறது. இங்கே ஒருத்தி தான் வேண்டியவன் தனை வேண்டுவதற்காக காத்திருக்கிறாள்.
கொள்ளை கொண்டவனுக்கான காத்திருப்பில் நிலவையும்,மலரையும், பனித்துளிகளையும் சேடிகளாய் துணை சேர்த்துக்கொண்டு அவளாடும் கவிநடனத்தில் உலகம் விரிகிறது.நாணத்தாழுடைத்து இதயமெங்கும் விரவி வழியும் அவன் நினைவினாலான காதலை அச்சேடிகளிடம் சேமிக்கிறாள். அவனுக்கென, அவன் ரசிப்பிற்கென தனை மொத்தமும் மாற்றிக்கொண்டு, அவனின் பிம்ப விவரனங்களேனும் தன் கண்ணில் விரியாதாவென காத்திருக்கிறாள். இமைக்காது வழிபார்த்து நின்று தனலேற்றிக் கொண்ட விழிக்கூட்டில் குளிரூற்றுவதற்காய் தவணை முறையிலேனும் அவன் வருகை வேண்டுமென இதயம் சுரந்து நிற்கிறாள்.

"தகி தகிக்கும் விழிச் சூட்டை
ஆற்ற தவணை முறையிலாவது
உன் வருகை வேண்டும்

வானவில் தூவிய
நட்சத்திரப் பூச்சிதறல்களில்
நான் மட்டும் தனித்தபோது
வெள்ளை நிலவாய் எனைக்
கொள்ளையிட்டுக் கொண்டாய் நீ!!"

அலுவலகத்திற்கும் வீட்டிற்குமான தொலைவு அவனுக்கு வேண்டுமானால் அரைமணி நேரமாக இருக்கலாம் ஆனால் அவளுக்கோ அது ஆடை பொசுக்கி சதை கருக்கும் நரகத்தீயின் வழியான யுகப்போராட்டம். என்னதான் இழுத்து போர்த்திக்கொண்டு சென்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக அவளை கொத்தித் தின்னும் பார்வைகளை கண்டால் கழுகுகள்கூட வெட்கிச் செத்து விடும். தன்னால் படைக்கப்பட்டவர்கள் என்பதாலேயே ஆண்கள் மீது அதீத பற்றும் பாசமும் வைத்து எதிர்பார்ப்பையும் அதிகமாக்கிக்கொள்ளும் பெண்களுக்கு அதே பாசமும் எதிர்பார்ப்புமே சிறையாக மாறி அதிலேயே அடைபட்டு சுயத்தை இழந்தனர். தனது நிலை இதுதானென தன்னுள்ளே முடங்கிக்கொண்டனர். இந்நிலை சில காலங்களாய் மாறி வருவது மகிழ்ச்சிக்குரிய விடயம். இன்றும் அதே அளவு பற்றும் பாசமும் எதிர்பார்ப்பும் கொள்ளும் பெண்கள், ஆண்கள் எல்லை மீறினால் அதை உடைத்தெரியும் துணிவும் பெற்றுள்ளனர்.

தொன்மையான கலாச்சாரம் பண்பாடு உடையது என மார்தட்டிக்கொள்ளும் இந்திய நாட்டில்தான் ஆதித்தாயான பெண்கள் மீது பல அநியாயங்கள் திணிக்கப்படுகிறது. இதுதான் நமது கலாச்சாரம் என்றால், அதை ஆழக்குழியில் புதைக்க வேண்டிய காலமிது. நாடுதான் பெண்களை கைவிட்டு விட்டது, ஆனால் நாட்டை பெண்கள் கைவிடவில்லை. எந்த கலாச்சாரத்தால் நாம் பெருமை கொள்கிறோமோ அதை வழிவழியாக காப்பாற்றி வருவது பெண்கள்தான். நாகரீகத்திற்கேற்றவாறு கலாச்சாரத்தில் சில புதுமைகளை புகுத்தி இன்று அனைத்து துறைகளில் பல உயரங்களை தொட்டுள்ளனர். இனியும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பன தான் பெண்களின் உயரிய நாற்பண்புகள் என்று எவரேனும் சொன்னால் கேட்டுக்கொண்டிராதே பெண்ணே, அச்சத்தை அழித்து அதை ரெளத்திரம் என மாற்று.

"பலி கேட்ட அரசியல்
பழியாகிப் போன
வரலாறு விரைவில் ..

சீதையை எரிப்பதற்கும்
தயங்காத களங்கத் தீ
பெண்மையின் கரங்களில்
சுடராகிப் போனது!

நள்ளிரவில் மின்னும்
பொன்னகையுடன் விடியல்
நோக்கிப் பயணிக்கிறாள் எம்
குலப் பெண்ணொருவள்..

என் கனவுகள் மெய்ப்பட
இனியொரு தடையுமில்லை!
ஆம் !.............................................
நிஜத்தைக் கொன்றுவிட்டேன் நான் !!"

வீழ்ச்சி என்பது தரைவரைதான். பறந்து பார், வானுக்கு எல்லையில்லை. தோல்வி இல்லாத வாழ்க்கைக்கு அர்த்தமில்லை, தடைகள் இல்லையென்றால் ஓடி சாதிப்பதென்ன. தோல்வியைப் புசிக்காதவனுக்கு வெற்றியின் ருசி தெரியாது. தன்னம்பிக்கை இல்லாதவனுக்கு தோல்வியின் ருசி கூட தெரியாது. தன்னம்பிக்கை இன்றி எவரும் பிறப்பதில்லை, அடி எடுத்து வைக்கும் குழந்தைக்கு விழுந்து விடும் பயஉணர்வு தெரியும், விழும் வலியும் புரியும் அதையும் மீறி முயற்சிப்பதால்தான் நடை பழகுகிறது. அந்த தன்னம்பிக்கை வளர்ந்ததும் சில தோல்விகளால் கலைந்துவிடக்கூடாது. தோல்வியை மீறி எழும் தன்னம்பிக்கைதான் வெற்றிக்கான ஏணி.

ஓல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்

(தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.)

"தோல்வி பிறந்ததே
வெற்றிக்காக எனும்போது
தொடர்ந்து முயற்சிக்க
முயலாமை அறியாமையே

அடி சறுக்கியதற்காக
அஞ்சி நின்றால் நகர வாய்ப்பின்றி
கால்கள் புதைந்துவிடும்
ஓரிடத்திலேயே

முயற்சி அறியாதோர்க்கு
வெறும் தோல்வி அது,
முழுமுயற்சி கொண்டோர்க்கு
வெற்றிப்பாதைக்கான வழி சொல்லும்"

இன்னும் எத்தனை எத்தனையோ அருங்கவிகள் இவரிடம். காதலின் அத்தனை கரைகளிலும் மலர் வைத்துச்செல்லும் இவரின் கரங்கள், இயற்கையின் அத்தனை தளங்களோடும் உறவாடுகிறது. இவரது மொழி வீச்சில் விரியும் காட்சிகள் காதலுக்கு மேலும் அமுதூட்டுகிறது, இயற்கைக்கு மேலும் அழகூட்டுகிறது. காதலையும் இயற்கையினையும் வருணித்த இவர் மொழி, சமூக வாதைகளுக்கெதிராகவும் சாட்டை சுழற்றுகிறது. பெண்களுக்கெதிரான கொடுமைகளை இவரது மொழிவாள் துகிலுரிக்கிறது, பெண்ணின முன்னேற்றத்துக்கென இவரது பேனா கொடியேற்றுகிறது. இவரது வரிச்சிறகுகள் யுகங்கள் தாண்டுபவையாக மட்டும் அல்லாது, யுகங்கள் மாற்றுபவையாகவும் இருக்கட்டும். இவர், கார்த்திகா ஏ.கே. இவர், கவிதை எழுதுகிறார்.

இவரின் ஆகச்சிறந்த படைப்பாக நான் கருதும் இந்தக்கவிதையோடு, கட்டுரையை நிறைவு செய்கிறேன். நன்றி.

வளைவுகளில் முந்தாதீர் - கார்த்திகா.

பதினேழு அல்லது
பதினெட்டு மதிப்பிடலாம்

காற்றும் நெருங்கத்
தயங்கும் பிணவறைச்
சந்தின் முகப்பில்,

கோரையின் கிழிசல்களில்
அவள் தைக்கப்பட்டிருந்தாள்..
நான் கண்ணுற்றபோது ,

ஆறு மாதமாய்
தெரியாமல் வளர்த்துவிட்ட
சிசுவிற்கு யார் காரணமென்று
ஊருக்கு வேடிக்கை
காட்டிக் கொண்டிருந்தான்
அவனைக் கணவனென்று
அவள் நினைத்திருந்தாள்..

பாசத்தோடு பற்றியிருந்த
பெற்றவர்களின் கைகளை
விலங்கென விலக்கி
வெளி வந்தபோது
கொண்டவன் கோவில்
வாசலில் மட்டும்
பிச்சை கேட்க
வைக்கவில்லையாம்!

பாதியில் படிப்பைத்
துறந்தவளுக்கு முதிர்ச்சியில்லாத,
காதலென்று நினைத்தது
கருவறையைக் கழுவினால் மட்டும்
நிலைக்குமென்று அறிந்திருக்க
வாய்ப்பில்லைதான்....

இந்த நொடி ,
உலகினை மாற்றியமைக்க
முயற்சிக்கும் கரங்களும்
வெற்றியைத் துரத்தும்
நம்பிக்கைகளும்
துளிர்விடும் அந்நேரம்
சிந்தையில் விஷமேறி
சிறிது சிறிதாய்
உணர்வுகளின் கொலையில்
சிக்கியிருந்தாள் பேதையவள்..

"சரி விஷயத்துக்கு வாங்க ..
குழந்தை வேணும்னா
இந்த மருந்து மாத்திரை கொடுக்கணும்"
செவிலியின் பேச்சுக்கிடையில்
வாழ்ந்த வாழ்வினை
விற்றுக் கொண்டிருந்தான் அவன்...

விதையில்லா திராட்சைகள்
அவளுக்கு விருப்பமென்று
தந்தை சொல்லக் கேட்டதாய்
கொஞ்சம் நினைவில் தப்பியது ..

வறண்ட நாவிற்கு
எச்சில் மட்டும்
பசை ஆனது...

கண்மூடி சயனித்திருந்த
சிசுவும் திறந்திருந்த காதில்
வாங்கிக் கொண்டதோ
பாவத்தின் பட்டியலை?

நோய் எதிர்க்கும்
சக்தியற்று மெல்லமாய்
குருதி வழிதலில்
வெளி வந்திருந்தது
கால்கள் முளைத்திருந்த
அந்த சின்ன உடல்...

கத்தியும் கூப்பாடிட்டும்
அவள் குரல் சென்று சேரவில்லை
புலன்கள் வெறுத்திருந்த
வெற்று சதையை...

பாலிதீன் பை ஒன்றில்
சில்லிட்ட சிற்றுடலை
மார்போடு அணைத்து
உயிர் மூட்டிக் கொண்டிருக்கிறாள் ....

பன்னிரெண்டாம் எண் பேருந்துக்கான
காத்திருப்பின் இடைவெளியிலும்
அரசாங்கத்தை வாழ வைக்கச்
சென்றிருந்தான் அன்பிலா அவன்!!

எழுதியவர் : ஈ.ரா. (20-Apr-15, 9:38 am)
பார்வை : 383

மேலே