காலத்தை வென்ற கலைஞர்-ராபியா குமாரன்

காலத்தை வென்ற கலைஞர்

இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை...
பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் - அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை...
என்ற பாடல் வரிகளை அறியாதவர்/ விரும்பாதவர் யாரும் தமிழகத்தில் இருக்க முடியாது. தமிழில் எத்தனையோ பக்திப் பாடல்கள் இருந்தாலும்,எந்தப் பாடலுக்கும் இல்லாத தனிச்சிறப்பு இந்தப் பாடலுக்கு மட்டுமே உண்டு. ஜாதி/ மத/ இன வேறுபாடுகள் கடந்து அனைவராலும் விரும்பி/ பாரட்டப்பட்ட பாடல் இப்பாடல். எல்லா மதத்தினருக்கும் பொருந்தும் பாடல் என கிருபானந்த வாரியாரால் புகழப்பட்ட இப்பாடலையே மூத்த மதுரை ஆதினம் அருணகிரி நாதர் தனது ஓய்வு நேரங்களில் விரும்பிக் கேட்பார். சோமசுந்தர தம்பிரான்/குன்றக்குடி அடிகளார் ஆகியோரின் மடங்களில் ஒலிக்கும் பாடலாகவும் இப்பாடலே இருந்தது.

ஆர். அப்துல் சலாம் என்னும் கவிஞரின் இப்பாடல் வரிகளை தனது வெண்கலக் குரலால் பாடி, அனைத்துத் தமிழர்களின் மனதிலும் நீங்க இடம்பிடித்த நாகூர் இ.எம்.ஹனீபா இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினம் என்னும் ஊரில் 1925ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தார். முஹம்மது இஸ்மாயில் - மரியம் பீவி தம்பதியினரின் மூன்றாவது மகனாகப் பிறந்த நாகூர் ஹனீபாவின் இயற்பெயர் இஸ்மாயில் முஹம்மது ஹனீபா என்பதாகும். இவரது தந்தையின் பூர்வீகம் நாகூர் என்பதால் நாகூர் ஹனீபா என்று அழைக்கப்பட்டார்.

இஸ்லாத்தின் கொள்கைகள்/ போதனைகள்/ நபிமார்களின் வரலாறு குறித்த நூல்கள் தமிழில் சொல்லிக் கொள்ளும்படி வெளிவராத காலகட்டத்தில் தனது பாடல்களின் மூலம் அக்குறையைப் போக்கிய பெரும்பேறு நாகூர் ஹனீபாவிற்கு மட்டுமே உண்டு. முஸ்லிம்கள் மட்டுமல்லாது மற்ற மதத்தினரும் இஸ்லாம் குறித்து அறிந்து கொள்ள அவரது பாடல்களே பேருதவி புரிந்தது. இஸ்லாமியப் பாடல்களுக்னெ தனியொரு இலக்கணத்தை வகுத்துக்கொடுத்த நாகூர் ஹனீபாவின் இடம் இனி வரும் காலங்களிலும் எவராலும் இட்டு நிரப்ப முடியாத ஒன்றாகவே இருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாது இலங்கை முஸ்லிம்களிடத்திலும் தனது சிம்மக் குரலால் தனியொரு இடத்தை தக்க வைத்துள்ள அவரது இசைக் கச்சேரிகள் துபாய்/சிங்கப்பூர்/ மலேசியா/ பஹ்ரைன்/ கத்தார்/ ஹாங்காங் ஆகிய நாடுகளிலும் அரங்கேறியுள்ளது. 1940ஆம் ஆண்டு தொடங்கி 2006ஆம் ஆண்டு வரை சுமார் 65ஆண்டுகள் தொடர்ச்சியாக இசைக் கச்சேரிகள் செய்த பெரும் சாதனைக்கு சொந்தக்காரர் நாகூர் ஹனீபா மட்டுமே.

இஸ்லாமியப் பாடல்கள் மட்டுமல்லாது தமிழ் திரைப்படங்களிலும் ஆகச் சிறந்த பாடல்களை நாகூர் ஹனீபா பாடியுள்ளார். குலேபகாவலி திரைப்படத்தில் நாயகமே நபி நாயகமே என்ற பாடலையும், பாவமன்னிப்பு படத்தில் எல்லோரும் கொண்டாடுவோம் என்ற பாடலையும்> செம்பருத்தி படத்தில் நட்ட நடு கடல் மீது என்ற பாடலையும், ராமன் அப்துல்லா படத்தில்உன் மதமா என் மதமா என்ற பாடலையும் பாடியுள்ளார். முறையாக சங்கீதம் கற்றுக் கொள்ளாவிட்டாலும் ஸ்ருதி ஏற்றி, இறக்கி இவர் பாடும் விதத்தைக் கண்டு பிரபலமான பின்னணிப் பாடகர்களும் மனம் திறந்து பாராட்டிள்ளனர்.
ஆயிரக்கணக்கான இஸ்லாமியப் பாடல்களைப் பாடி, உலகளவில் பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ள சிறந்த இஸ்லாமிய பாடகர் என்று மட்டுமே பலரால் அறியப்படும் நாகூர் ஹனீபாவின் முதிர்ந்த அரசியல் வரலாறு இன்றுவரை பலருக்கும் தெரியாத வரலாறாக இருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. தனது 13ஆவது வயதிலேயே கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானார். நீதிக்கட்சி காலம் முதலே தன்னை திராவிடக் கொள்கையில் ஈடுபடுத்தி அதன் வளர்ச்சிக்கும், கொள்கைப் பிரச்சாரத்திற்கும் பெரிதும் துணைநின்றார். நீதிக் கட்சித் தலைவர் பன்னீர் செல்வம் 1940 ஆம் ஆண்டு இலண்டன் செல்லும் வழியில் விமான விபத்தில் பலியானதையடுத்து நீதிக் கட்சி சார்பாக ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த இரங்கல் மாநாட்டில், பறந்தாயோ எங்கள் பன்னீர் செல்வமே... என்று நாகூர் ஹனீபா உருகிப் பாடிய பாடலைக் கேட்டு, மாநாட்டுப் பந்தலில் இருந்த அனைவரும் கண்ணீர் மல்க அழுத நிகழ்வை அம்மாநாட்டில் கலந்து கொண்ட எவரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள்.
திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரான பட்டுக்கோட்டை அழகிரி இயக்கத்தின் வளர்ச்சிக்காக நாகூர் ஹனீபாவை பெரிதும் பயன்படுத்திக் கொண்டார். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.. என்ற பாரதிதாசனின் பாடலை, அழகிரி நாகூர் ஹனீபாவைக் கொண்டு பாடவைத்தார். 1954ஆம் ஆண்டு வெளிவந்த இப்பாடலே முதன் முதலில் இசைத்தட்டில் பதிவான நாகூர் ஹனீபாவின் பாடலாகும்.
அறிஞர் அண்ணாவிற்கு நாகூர் ஹனீபாவை அழகிரி அறிமுகம் செய்து வைத்த நாள் முதல் அண்ணாவோடு இணைந்து செயல்படத் தொடங்கினார். தி.மு.க. முன்னெடுத்த போராட்டங்களில் கலைஞர்கள் கலந்து கொள்ள வேண்டாமென அண்ணா அறிவுறுத்தியிருந்த போதும், போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்று பதினோரு முறை சிறை சென்றிருக்கிறார். பல்வேறு திமுக மாநாடுகளில் தனது பாடல்களின் மூலம் திராவிடக் கொள்கைப் பிரச்சாரம் செய்த நாகூர் ஹனீபா எதிர்க் கொள்கை உடையவர்களால் கல்லெறிக்கு ஆளான சம்பவங்கள் வரலாற்றில் நிறையவே உண்டு. 1954ஆம் ஆண்டு கைத்தறி நெசவாளர் துயர் துடைக்க அண்ணாவுடன் இணைந்து உடுமலை நாராயண கவியின்,
செந்தமிழ் நாட்டுக் கைத்தறி நெசவு
சேலைகள் வேட்டிகள் வாங்குவீர்,
திராவிட நாட்டின்
சேமம் வேண்டி
சிங்கார ஆடைகள் வாங்குவீர்...
என்ற பாடலைப் பாடிய படியே, தெருக் தெருவாக கூவிக் கூவி துணிகளை விற்றுள்ளார்.
நாகூர் ஹனீபா அண்ணாவைப் பற்றி பாடி, 1955ஆம் ஆண்டு வெளிவந்த அழைக்கின்றார் அண்ணா... என்ற பாடல் ஒலிக்காத ஊரே தமிழகத்தில் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெரும் புகழ் பெற்ற பாடலாகும். திமுக வின் கொள்கையை பரப்பியதில் இப்பாடலுக்கு மிக முக்கியப் பங்குண்டு. நாகூர் ஹனீபாவின் இஸ்லாமியப் பாடல்;களை வழக்கமாக பதிவு செய்து வெளியிடும் HMV நிறுவனம் அழைக்கின்றார் அண்ணா... பாடலைப் பதிவு செய்ய மறுத்த போது, 'இப்பாடலைப் பதிவு செய்யாவிட்டால், இனி எந்த இஸ்லாமியப் பாடலையும் பதிவு செய்ய அனுமதி தரமாட்டேன்' என நாகூர் ஹனீபா மறுப்பு தெரிவித்தார். அதன் பிறகு வேறு வழியில்லாமல் HMV நிறுவனம் அப்பாடலைப் பதிவு செய்து வெளியிட்டது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் எந்தப் பாடலை HMV நிறுவனம் பதிவு செய்ய மறுத்ததோ,அந்தப் பாடலே அந்த ஆண்டில் விற்பனைச் சாதனை படைத்தது.
தனது அரசியல் பயணத்தில் அண்ணா மட்டுமல்லாது பெரியாருடனும் சேர்ந்து பல்வேறு பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளார். தான் செல்லும் கூட்டங்களுக்கு தன்னுடன் நாகூர் ஹனீபாவையும் அழைத்துச் செல்லும் பெரியார் தனது மேடைகளில் பலமுறை அவரைப் பாட வைத்துள்ளார்.
தூங்கிக் கிடந்த உன்னைத் தூக்கித், துடைத்த ணைத்துத் தாங்கித் தரைமேல் இட்டார் தமிழர் தாத்தாவாம் ஈ.வெ.ரா. எனத் தொடங்கும் நாகூர் ஹனீபா பாடல் என்றும் அழியாப் புகழ்பெற்றது.
1957ஆம் ஆண்டைய தேர்தலில் நாகை தொகுதி வேட்பாளராகவும், 2001ஆம் ஆண்டைய வாணியம்பாடி இடைத் தேர்தலிலும் தி.மு.க. சார்பாக நாகூர் ஹனீபா நிறுத்தப்பட்டார். ஆனால் இந்த இரு தேர்தல்களிலும் அவர் தோல்வியையே தழுவினார். 1957ஆம் ஆண்டு தேர்தலில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்டது. ஹனீபா பிரபலமானவர். அவர் நின்றால் உதயசூரியன் சின்னம் பிரபலமாகும் என்ற காரணத்தினால்தான் நாகை தொகுதியில் நாகூர் ஹனீபா திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியார், அண்ணா காலம் தொடங்கி சாதிக் பாட்ஷா, கருணாநிதி, அன்பழகன் என திராவிடத் தலைவர்களோடு நட்பு பாராட்டிய நாகூர் ஹனீபா மிகச் சிறந்த அரசியல் முன்மாதிரி என்றால் அது மிகையாகாது. அரசியல் நேர்மையோடு எந்தவிதப் பிரதிபலனும் பாராமல், தனது பாடல்களின் மூலம் கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர். அவர் திராவிடக் கட்சியின் மீது கொண்ட பற்று மற்றும் கொள்கைப் பிடிப்பை அறுதியிட்டு கூறுவது மிகவும் சிரமமானது. தான் அரும்பாடுபட்டுப் பாடிச் சம்பாதித்து நாகூரில் கட்டிய இரண்டு வீடுகளுக்கு முறையே கலைஞர் இல்லம், அண்ணா இல்லம் என்றும்,சென்னையில் கட்டிய வீட்டிற்கு காயிதே மில்லத் இல்லம் என்று பெயர் சூட்டியதை வைத்து திரவிடக் கட்சியுடனான அவரது நீண்ட, பாரம்பரிய உறவை நம்மால் எளிதில் விளங்கிக் கொள்ள முடிகிறது.
தமிழக அரசின் கலைமாமணி விருது, முரசொலி அறக்கட்டளையின் விருது ஆகிய விருதுகைளைப் பெற்ற அவர் தமிழக சட்டப் பேரவையின் முன்னாள் எம்.எல்.சியாகவும், வக்பு வாரியத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். காலத்தால் அழியாத பல பாடல்களைத் தந்த நாகூர் ஹனீபாவை கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி மரணம் தழுவிக் கொண்டாலும் அவரது பாடல்களில் அவரது நித்திய ஜீவன் என்றும் நிலைத்திருக்கும் என்று நாம் ஆறுதல் பட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு குறை மேலெழுகிறது. அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை வழங்கிக் கௌரவிக்கப்பட வேண்டும் என்று பலரும் விரும்பினர். அந்த விருப்பம் நிறைவேறாமல் போனது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய குறையாக என்றென்றும் இருக்கும். காலத்தை வென்று நிற்கும் கலைஞர்களை அவர்கள் உயிரோடு இருக்கும் போது கௌரவிக்கத் தவறும் தவற்றை இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் நாம் செய்து கொண்டிருக்கப்போகிறோம் என்பது மட்டும் புரியவில்லை.
-ராபியா குமாரன்

( கட்டுரையாளர் பெயர் அ. முஹமது ரஃபிக். சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி. தற்போது துபாயில் உள்ளார். ராபியா குமாரன் என்ற பெயரில் நிறைய கட்டுரைகள், கதைகள், இஸ்லாமிய இதழ்கள் மற்றும் கல்கி, புதிய தலைமுறை, குடும்பமலர், தினமலர், தினஇதழ் ஆகியவற்றில் எழுதியுள்ளார்.
நபிகள் நாயகம் குறித்த வரலாற்று புத்தகம் ஒன்றும் எழுதியுள்ளார்).
ராபியா குமாரன்.
மொபைல்: 00971 557541369 )
இதை கூகுள் மடலாக அனுப்பியவர் : முதுவை ஹிதாயத் அவர்கள்

எழுதியவர் : ராபியா குமாரன் (22-Apr-15, 8:19 am)
பார்வை : 1764

சிறந்த கட்டுரைகள்

மேலே