மழையென்பது யாதென

கொங்குநாட்டு மழை எனக்கு பள்ளிப் பருவத்தில் கற்பித்த விடயங்களை கொஞ்சம் எழுதியிருக்கிறேன்
===============================================================================================
திடம் நிறம் மணம்-
தேயிலைத்தூள் விளம்பரம்
எங்களூர் மழைக்குப்பின்
தேங்கும் செந்நிற மழை நீரை
ஞாபகப் படுத்தும் !
மலையாளக் கரைக்கு
மழை கொடுத்தபின் மிஞ்சும்
தென் மேற்கு பருவ மேகங்கள்
மறந்துபோய் தெளிப்பின்
அது மழையென காண்போம் !
மழை பெய்த மறுநாள்
ஈர மண்ணில் உயிர்பெறும்
மறைந்து கொண்டிருக்கும்
மண்ணின் விளையாட்டுக்கள் !
நிறைந்த வாலாங்குளமும்
பாறையுடைத்த கல்லுக்குழிகளும்
பெய்த மழையின் அளவறியும்
மழைமானிகளாகும் !
குளிர் காற்றின் ஈரப் பதம்
பருத்தி நெசவுக்கு பாங்கானதென்று
பஞ்சாலை தொழில் வளர
மானாவாரி விவசாயம்
பஞ்சாலையில் தஞ்சம் புகும் !
கிராமத்து மாந்தர்கள்
விளைவித்த சோளமும்
கொள்ளுச் செடிகளும்
அறுவடை செய்வது
பள்ளிச்சிறார்களும்
சிட்டுகுருவிகளும்தாம் !
மழை வருமோ வராதோ
மாரியம்மன் பூவோடும்
மாவிளக்கு முளைப்பயிரும்
சித்திரையை அலங்கரிக்கும் !
கூத்தாண்டி நோம்பிஎனும்
கூத்தாண்டவர் திருவிழாவில்
அரவானின் காவு முடிந்து
பொம்மியம்மா அழுகையிலே
ஐப்பசி மழைத் தூறல்
நம்பிக்கையை வாழ வைக்கும் !
கொங்கு மழை -
அழகியலை கற்றுக் கொடுத்ததில்லை !
வறுமையின் மணத்தை பரப்பியதுண்டு!
சரித்திரமும் புவியியலும் சாட்சிகளாக்கி
செம்மழையாய் பொழிந்ததுண்டு !
இன்று-
பருவம் தவறி அச்சுறுத்தும்
மழைக்கான விடுமுறையால்
புருவங்கள் உயர்ந்ததுண்டு !
காட்சியும் காலமும் மாறும்
சாட்சியாய் பெய்யுதோ இன்றைய மழை?