சொர்க்கத்தில் ஒருநாள்

வோர்ட்ஷ்வோர்த்தே ...
அதோ!
அந்த
மேகக்காகிதத்தில்
கவித்துளிகள்
படரப்போகிறது...
*
நாங்கள்
அழையா விருந்தாளிஎன
அறிந்திருந்தும்
அந்த வானமென்ன
முத்துப்பூக்களைத் தூவி
வரவேற்புரை
வழங்குகின்றன...
*
பனிப்போர்வையே...
உமக்கு வணக்கம்!
"என்ன இது!
பிரம்மிப்பாய் உள்ளது...!
எங்களைச் சுற்றிலும்-பசுந்தழல்
கொழுந்து விட்டெரிகிறது.!
ஓகோ!
இதனால்தானா
அந்தப்பாறை முகடுகளில்
பாலருவி பொங்குகிறதோ?
*
தோழிகளே...
கடுஞ்ச்சொல்
காதுக்குக் கசக்குந்தானே?
ஆனால்,
இந்தத் தாவரங்கள்
பச்சை பச்சையாகப் பேசியும் இனிக்கிறதே!
இங்கென்ன
சூரியனுக்கு
எந்நாளும் விடுமுறையா?
மலைமாதாவே...
இது நியாயமா?
பணம் வசூலிக்காமலேயே
கலப்படமில்லாக்
காற்றைத் தூற்றுகிறாயே!
*
தோழர்களே...
கண்ணதாசனை
அழைக்கப் போகிறேன்...
உங்கள்
கிண்ணத்தைத் தயார்ப்படுத்துங்கள்.
இக்குளிரில்
மூர்ச்சையாகுமுன்
முடிவு
தெரிந்தாக வேண்டும்...
இறந்த பிற்பாடுதானே
சொர்க்கமா?
நரகமா?
எனத்தீர்மானமாகும் .
இங்கென்ன!
எங்களுக்கு
வாழும்போதே...
ஒருநாள் மட்டும்
சொர்க்கம்
நிச்சயக்கப்பட்டு விட்டது.
*************************************
கல்லூரிச் சுற்றுலாவில் நண்பர்களுடன் அனுபவித்த ஆழமான நினைவுச் சுகம்....
இடம்: கேரளா,மூணாறு
எங்கே நான் அனுபவிக்கும்போதே தோன்றியதை எழுதினால்,என் நண்பர்களின் கிண்டலுக்கு உள்ளாகுமோ என்று அஞ்சி...!
அத்தனை நிகழ்வுகளையும் குடைபிடிக்காமல் அதில் நனைந்து நனைந்து சுரம் பொங்க ஊற்றெடுத்த கவிதை - என் வீட்டில்...