சிலம்பின் வேட்டுவ வரியில் இசைக்குறிப்புகள்-ஆஷைலா ஹெலின்

சிலம்பின் வேட்டுவ வரியில் இசைக்குறிப்புகள்-ஆ.ஷைலா ஹெலின்

வேட்டுவ வரி சிலம்பில் 12 ஆவது காதையாகும். பாலை நில மக்களாகிய வேட்டுவரின் வாழ்க்கைப் பற்றி இக்காதையுள் இளங்கோவடிகள் கூறுகிறார். சிலம்பில் மூன்று காதைகள் வரி என்ற தலைப்பில் அமைந்துள்ளன. கானல்வரி இசையால் பெற்ற பெயர், வேட்டுவ வரியும், ஊர்சூழ் வரியும் கூத்தால் பெற்ற பெயர்கள.; வரி என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உள. அவற்றுள் இசை, கூத்து என்ற இரு பொருள்கள் இங்கு உணர்த்தப்படுகின்றன. இங்கு வேட்டுவ வரியில் இடம்பெறும் இசைக்குறிப்புகளைக் காண்போம்.

வேட்டுவ வரியில் உரைப்பாட்டு மடை, குமரிக்குக் கொற்றவை கோலம் புனைதல், வள்ளிக்கூத்து, துறைப்பாட்டு மடை முதலியவற்றில் இசைக்குறிப்புகள் காணப்படுகின்றன.

உரைப்பாட்டு மடை
உரைப்பாட்டு என்பது உரைப் பாட்டினை முதலில் பெற்றிருத்தல் என்பதாகும். வேட்டுவ வரியில் (சிலப்.12:1-74) வரையுள்ள நேரிசை ஆசிரியப்பாவானது ‘உரைப்பாட்டு மடை’என்று குறிப்பிடப் பட்டிருத்தலாலே இது பண்ணில் தாளத்தில் பாடுதற்குரியதன்று என்று அறியலாகும். காலட்சேபம், வில்லடிப்பாட்டு, உடுக்கடிப்பாட்டு போன்ற நிகழ்ச்சிகளில் இன்றும் உரைப்பாட்டு மடையைக் கேட்கலாம். உரைப்பாட்டு என்பது ஒருவாறு எதுகை மோனையமைந்த உரைநடையாகவோ செய்யுளாகவோ இருக்கலாம். உரைப்பாட்டு என்பது சொல்லும் முறையாலே இப்பெயர் பெற்றது.
ஆறெறி பறையும் சூறைச் சின்னமும்
கோடும் குழலும் பீடுகெழு மணியும்
குணங்கொண்டு துவைப்ப அணங்கு முன் நிறீஇ (சிலப் 12: 40-42)

சின்னம் என்பது சிறிய ஊதுகொம்பு. இதனை பாலை நிலத்தில் வழிப்பறிப்போர் பயன்படுத்தினர். சூறைகொள்ளும் பொழுது தம் தோழர்களைத் துணைக்கு அழைத்தற்கும், சூறை கொண்டபின் ஆடிப்பாடி மகிழ்தற்கும் சின்னத்தைப் பயன்படுத்தினார்கள். பாலை நிலத்தில் மறவர்கள் தம் தெய்வமாகிய காளியைப் பூசித்து வழிபடும்போது ஊது சின்னமும், துந்துரிக் கொம்பும், குழிக்குழலும், எறிமணியும,; பறையும் முழங்குவார்கள்.

திருஞானசம்பந்தர் தம் திருவருகையை மாந்தர்க்கு அறிவிக்கப் பயன்படுத்திய இசைக் கருவிகளுள் சின்னமும் ஒன்று.
‘சின்மை தனிக்காளம் தாரை சிரபரத்து ஆண்டகை வந்தாள்’
(பெரிய. பு.சம்.283)
சின்னம் என்பதன் பொருள் சிறு அடையாளம் அல்லது சிறுகுறிப்பு. கொள்ளையடிப்பதைத் தம்மலர்க்கு ஊதித் தெரிவித்ததால் ‘சின்னம்’ எனப்பெயர் பெற்றது. இன்றும் இந்து சமயத் திருக்கோயில்களில் பூஜைக்காலத்தைத் தெரிவிக்கும் சின்னமாக (அடையாள இசைக்கருவியாக) இக்கருவி ஊதப்பட்டு வருகிறது மரபிசையைக் காட்டுகிறது.
தெய்வமேறிய சாலினிக்கு இசைவழிபாடு நடத்தும்பொழுது வழிப்பறிப்போரை வெல்லுங்கால் கொட்டப்படும் ஆறு எறிபறையையும், சூறைச் சின்னமும் இசைத்தனர். ஆறு என்பது வழி, எறிபறை என்பது வழிபோக்கரை வெல்லுங்கால் கொட்டும் வெற்றிப்பறை. மேலும் கோடு (வளைகொம்பு) ஊதினர். பெருமை மிக மணியும் ஒலித்தனர். கணங்கொண்டு தாள நடை முழங்கினர் என்பது ஒரு எண்ணிக்கைக்குள் எட்டுக் குறில் எழுத்து ஒலிக்குமாறு கொட்டுவதாகும். ஆதற்கு முழவுச் சொல்லின் வாய்பாடு ‘கிடதக தரிகிட’ என்பதும் இதன் வகைகளும் ஆகும். கூடை நடையில் 8ஃ8 (மூன்றாம் கால நடையில்) முழக்கினார்கள்.

அமரி, குமரி, கவுரி, சமரி,
சூலி, நீலி, மால் அவற்கு இளங்கிளை… சிலப். 12: (1):67-68
எனும் வரிகள் மூன்றன் நடையில் (திசுர நடை) அமைந்துள்ளன. ‘தகிட’ வாய்பாடுடைய நடை.

‘மரவம் பாதிரி புன்னை, மணங்கமழ்
குரவம,; கோங்கம், மலர்ந்தன கொம்பர்மேல்
அரவ வண்டினம் ஆர்த்துடன் யாழ்செய்யும்
திருவ மாற்கிளை யாடிரு முன்றிலே’ (சிலப் 12: (4):1-4)

என்ற வரிகள் ‘தகிட தாந்தின தாந்தின தாந்தின’ என்ற தாள வாய்பாட்டில், எட்டன் மட்டத் தாளத்தில் (ஆதி) அமைந்து, அனைவரும் எளிமையாக பாடும்படி அமைந்தும் அப்பர் பாடிய திருக் குநற்தொகைச் செய்யுளுக்கு மூல வடிவமாகவும், இப்பாடல் இடம் தந்து நிற்கின்றன.

வள்ளிக்கூத்து
வள்ளிக்கூத்து என்பது வள்ளி தன் கோலம் கொண்டு ஆடும் கூத்து. இதனை தொல்காப்பியர்
‘வாடா வள்ளி வாயவர் ஏத்திய’ (தொல்.பு.5)
என்று குறிப்பிடுகின்றார். வாடாவள்ளி என்பது ஒரு சடங்காட்டம். ஆடலை உள்ளடக்கிய வளச்சடங்கு. வள்ளி என்பது ஒரு கூத்து. அஃது அந்நிலத்தின் நிகழ்தலின் வாடா வள்ளி எனப்பெயர் பெறும் என்கிறார் இளம்பூரணர்.

கொற்றவையை வழிபடுகின்ற வேட்டுவர்,கொற்றவை கோலத்தை அம்மறக்குலத்தில் தோன்றிய குமரிக்கு அணிவித்து கண்ணகியின் பெருமையை பேசிய பின்னர், இசைப் பாடல்களைப் பாடி கூத்தாடுகின்றனர்.
கொற்றவை கொண்ட அணிகொண்டு நின்ற இப்
பொற்றொடி மாதர் தவமென்னை கொல்லோ?
போற்றொடி மாதர் பிறந்த குடிபிறந்த
விற்றொழில் வேடர் குலனே குலனும் சிலப் 12: (5)

என்பது முதல்பாடலாக மற்றும் 12:(6),(7) ஆகிய மூன்று பாடல்களும் வள்ளிக்கூத்து என்று குறிப்பிட்டுள்ள பகுதிப் பாடல்கள். இங்கு அடிகள் மடக்கு என்னும் அமைப்பினைக் கொண்டு விளங்குகின்றன. இவற்றுள் நாட்டுப்புற பாடலின் சாயல்களைக் காணலாம்.
துறைப்பாட்டு மடை

வேட்டுவ வரியின் சிலப்-12:(18),(19),(20) பாடல்கள் துறை(வெட்சித்துறை) சார்ந்த இசைப்பாடல்களும், குறில் வண்ணத்தில் அமைந்தனவாகும்.
எ.டு- ‘சுடரொடு திரிதிரு முனிவரும் அமரரும்…’
இவ்வாறு நாலடிகள் சேர்ந்தது ஒரு பாடல். இத்தகு நாலடிப் பாடல்கள் மூன்று இடம்பெற்றுள்ளன. இவை கொச்சகத் கலிப்பாவில் ஒரு பொருண்மேல் மூன்று அடுக்கியவை. இவை குறில் வண்ணமாக அமைந்த தாழிசைக் கொச்சக ஒருபோகு அமைப்பின.

தாழிசைக் கொச்சக ஒருபோகு
கொச்சகம்
கொச்சகம் என்ற சொல் கொய் + சகம் என்ற சொல்லின் சிதைவு. இது ஆடையின் ஒரு பகுதி, இன்று இச்சொல் மேலும் சிதைந்து ‘கொசுவம்’ என்று ஆகியுள்ளது. இது ஒரே மாதிரி மடிந்து மடந்து வருகின்ற ஆடை. இது ஒரே அளவில் மடிந்து அமைவது போன்று பாடல் அடிகள் ஒரே அளவில் அமைந்திருப்பதாய் கொச்சகம் எனப் பெயர் பெற்றது. எண்சீர் விருத்தத்தால் ஆகிய கொச்சக ஒரு போகு, ஆதிதாளத்திற்கும் கௌசிக(குறிஞ்சியாழ்) பண்ணிற்கு உரியதும், இதுபோல் அறுசீர் விருத்தம் ஐஞ்சீர் விருத்தம் முதலியன தாளத்திற்கும், பண்ணிற்கும் உரிய இசைப் பாடல்களாய் பண்டைக் காலந்தொட்டு விளங்கி வந்தன.
தாழிசை
தாழிசை என்பது இசைப்பாடல் என்றும், இசைப்பாடலாகிய கலிப்பாவின் ஓர் உறுப்பு என்றும், தாழம்பட்ட ஓசையையுடையது என்றும், நான்கடிகளாலும் மூன்று அடிகளால் வருவதோடு மூன்று அடுக்கில் வருவன என்றும் அறியலாகும். தாழம்பட்ட ஓசை என்பது ஒன்றன் கீழ் ஒன்றாகத் தாழ அமைந்து ஒரேவகை யாப்பு அமைப்பினையும், இசை வடிவ அமைப்பினையும் உடையதால் ஓசை ஒற்றுமை சுட்டுவதாகும். ‘தாழம்பூ’ என்பதனை இதற்கு ஒப்பாக நோக்கும் போது தாழம்பூ என்பது ஒரே வகை இதழ் அடுக்குகளை ஒன்றிற்கு கீழ் ஒன்று தாழ (கீழாக) அமையப்பெற்றதாகும். தாழிசையின் மற்றோர் பெயர் ‘இடைநிலைப் பாட்டு’ என்பது. துறைப்பாட்டு மடை பாடல்கள் குறில் வண்ணமாக அமைந்த தாழிசைக் கொச்சக ஒருபோகு அமைப்பின.
தொடக்க காலத்தில் வரிப்பாடல்களின் சொல் வடிவம் ஒரு பொருள்மேல் நான்கடுக்கி வந்து பொருண்மை உணர்த்தி வந்தமையே பிற்காலத்தில் கீர்த்தனைகளில் சரணங்கள் என்றனர். இவற்றை பழங்கீர்த்தனை நூல்களில் காணலாம். பல்லவியும் அனுபல்லவியும் இடம் பெறாமல் பல சரணங்களாகக் கீர்த்தனைகள் அமைந்திருந்தன. பின்னரே சரணத்தின் முதலிரு வரிகள் பல்லவியாகவும் பின்னிரு வரிகள் அனுபல்லவியாகவும் பகுக்கப்பட்டு இசை வடிவமும் வளர்த்தது. கீர்த்தனை முதலிய இசை உருவில் வரும் முடுகுகளுக்கு மூலம் வண்ணங்களும் காரணமாகும். தாளக் கணக்குகளில் அமைந்த சொல்வடிவமும,; இசை வடிவமும் கொண்ட கீர்த்தனைகள் 15,16-ஆம் நூற்றாண்டை ஒட்டி மலர்ந்து தமிழகத்தில் விளங்கத் தொடங்கின. இவ்வாறு இசை இலக்கணங்களால் நிரம்பியது சிலம்பின் வேட்டுவ வரியாகும்.

எழுதியவர் : ஆ.ஷைலா ஹெலின் (28-Apr-15, 12:43 pm)
பார்வை : 181
மேலே