மழையென்பது யாதென

நான் போட்ட
கோலத்தில் நடைபழகிய
குழந்தையாகவே நீ...
அடிக்க மனமின்றி
அணைத்துக் கொள்கிறேன்...!!

நேற்று நட்ட
ரோஜா செடிகளை
தோழியாக்கும் எண்ணத்தில்
பார்த்துபோக வந்தாயோ...!!

நீ வந்துபோன
தடத்தில் தோப்புகளில்
காய்கள் சிதறியிருக்க..
திருடன் வந்தானா
என்பதை சொல்லவேணும்
சீக்கிரம் வந்துவிடு
அடுத்தமுறை...!!

நீ விட்டு சென்ற
குட்டி... குட்டி...
மழை தேவதைகள்
மரங்களிலெல்லாம்...
என்னோடு விளையாடுவதற்காகவா ....!!

என்போன்ற தோழிகளை
சந்திக்க வேண்டிய அவசரமா..
வந்ததும் புறப்படுவதேன்...??

வெளியேதான் எங்காவது
சுற்றி கொண்டிருப்பான்
நண்பர்களோடு..
நனைக்காது பார்த்துவிட்டு போ...
அவனுக்கு காய்ச்சல் வந்தால்
தாங்கமாட்டான்...!!

என்னோடு நனைந்த
மழையே பொறுத்திரு..
இதோ தேநீர் தயார்..
முன்பே சொல்கிறேன்..
இடியென தும்பினால்
உனக்கு கசாயத்தைதான்
தருவாள் அம்மா..
ஒருதுண்டு வெள்ளக்கட்டியோடு...!!

இரண்டு நாளாய்
ஜலதோசத்தில் அவதியுறும்
என் கைக்குட்டையை கேளாதீர்..
"மழையென்பது யாதென.."

எழுதியவர் : மணிமேகலை (4-May-15, 8:35 pm)
பார்வை : 103

மேலே