யுகங்கள் தாண்டும் சிறகுகள் -26 கவித்தாசபாபதி
ஆடையின்றி உலாவரும்
வளர் இளம் நிலா
ஏரியைக் கூட
ஏதென் தோட்டமாக
மாற்றிக் கொள்கிறது
நிசப்தமான வானில்தான்
நிர்வாணமும்
களை கட்டுகிறது (ம. பிரபு , ஊட்டி )
இப்போது உங்கள் மனம் எரியிலா? ஏதேன தொட்டத்திலா ? வானின் நிர்வாணத்திலா?
என் மனமென்னவோ நிர்வாணமாகத்தான். . அதில் வளர் இளம் நிலா நொடிபொழுதில் முழு மதியாகி என்னை வேறொரு தோட்டத்திற்கு அழைத்துச்செல்கிறது
தோட்டக்காரன் தூங்கிவிட்டான்
தோட்டத்தையே மேய்கிறது
நிலா (யப்பானிய ..)
நம்மையும் மேயவிடும் இது ஒரு சுகமான மயக்கம் தரும் போதை ஹைக்கூ நிலா .
விருத்தங்களால் , சந்தங்களால் , புதிய , நவீன கவிதைகளால் , நெடுங்கவிதைகளால் , வருணனைகளால் , வண்ணங்களால் , உணர்வுகள் கொண்டு நெய்யப்படும் கவிதையை , தீட்டப்படும் ஓவியத்தை மூன்றே தந்திகளில் (அடிகளில் ) மீட்டும் உன்னதம்தான் ஹைக்கூ ..அல்லது அதன் குணமும் அழகும் ஒத்த துளிப்பா/ சென்ரியூ
ஹைக்கூவுக்குள் ஓவியம் , கவிதை , இசை மூன்றும் ஒன்றாகி இருக்கும் . பரந்த பசும் புல்வெளி பூவனத்தில் மனசைப் பறிக்கும் பட்டாம்பூச்சிகள்தான் கவிதைப்பூவனத்தின் ஹைக்கூக்கள் / துளிப்பாக்கள். .
இந்த வண்ணத்துப்பூச்சிகளை பிடித்தும் பறக்கவிட்டும் விளையாடவே நீங்கள் இந்த கட்டுரைக்குள் நுழைந்திருக்கிறீர்கள் . திரும்பிப் போகும்போது உங்கள் மனவிரல்களில் அதன் வண்ணங்கள் ஒட்டியிருக்குமானால் …அவை ஓவியங்களாக பதிந்திருக்கும் . நெஞ்சிருக்கும்வரை நிலைத்துமிருக்கும்.
உன் வீடு இடிந்தாலென்ன
என் வீடு இடிந்தாலென்ன
புயலுக்கோ பாதை தேவை (பிற மொழி )
இயற்கையின் சீற்றத்தில் , புயலின் கோர தாக்குதலில் , வீடிழந்த ஒருவனின் கண்ணீர் இது . அந்தக் கண்ணீரின் அழுத்தத்தைப் உணரும் தருணம் இடிந்துபோகிறது அல்லவோ மனது ?.
ஹைக்கூவின் இலக்கணம் என்ன என்று ஒரு தோழி என்னைக் கேட்டிருந்தாள். நானோ வண்ணத்துப் பூச்சிகளை ரசிக்கும் குழந்தை …அதன் அறிவியலை , கேட்டால் எப்படிச் சொல்வேன் இருந்தாலும் சொல்லிவைத்தேன் . “முதல் இரண்டு வரிகள் சுகமான மீட்டலாய் இருக்கும் . மூன்றாவது முத்தாய்ப்பு அடியோ அடித்து நொறுக்கவேண்டும் அல்லது புரட்டி எடுக்கவேண்டும் அல்லது கசக்கிப் பிழியவேண்டும்... அல்லது அசைவுகளை நிறுத்தவேண்டும் . . ஹைக்கூ நீங்காத சலனங்கள் உண்டாக்கவேண்டும் . இதுவே நல்ல ஹைக்கூவின் இலக்கணம் . ”
ஐயோ இருட்டிவிட்டதே
யாராவது என் செம்மறி ஆட்டைப் பார்த்தீர்களா?
விடிந்தால் பக்ரீத்
இனி அலையவேண்டியதே இல்லை
இன்றோடு முடிந்தது
என் வேலைவாய்ப்பு வயது
சின்னப்பூவில் ஒரு
சிலிர்க்கும் பனித்துளி
உன் மூக்குத்தி
அழாதே கண்மணி
அடுப்பைப் பற்ற வை
குளிராவது காயலாம்
எரியும் வயிறுகள்
தெருமுனையில்
அழுகிய பழங்கள் .(கவித்தாசபாபதி )
1992 இல் சுஜாதாவுக்கு பிடித்து குமுதத்தில் பிரசுரித்த எனது “மின்மினி பூச்சிகள் ” இவை . சிறிய வயதின் கன்னி முயற்சியின் மிகச் சாதாரண வெளிப்பாடுகள்தான் இவை என்றாலும் பகிர்வதில் தவறில்லையே …!
ஹைக்கூக்களின் பிதாமகன்களின் யாவரும் அறிந்த, நூற்றாண்டுகள் கடந்து இன்னும் சிலிர்க்கும் ஒருசில அழகிய வண்ணத்துப் பூச்சிகளை மனவிரல் தொட்டுப் பழகலாம் இங்கே.
உதிர்ந்த மலர்
கிளைக்குத் திரும்புகிறது
ஒ .. வண்ணத்துப் பூச்சி (மோரிடேகே)
ஆலய மணியின் மீது
ஓய்ந்து உறங்குகிறது
வண்ணத்துப் பூச்சி ! (யோஸா பூசன் (1716-1784)
எந்தப் பூ மரத்திலிருந்தோ ?
எனக்குத் தெரியவில்லை
ஆனால் ஆஹா நறுமணம் (மட்சுவோ பாஸோ 1644 - 1694)
சிதைந்த மாளிகை
தளிர் விடும் மரம்
போரின் முடிவில் (ஷிகி 1867 - 1902)
தத்தித் தத்தி நடக்கும் சிட்டுக்குருவி
தாழ்வார ஓரங்கள்
ஈரப் பாதங்கள் (ஷிகி 1867 - 1902)
பட்டம்பூச்சிகளைத் தொட்டு மகிழ யாருக்குத்தான் ஆசை இருக்காது.
ஹைகூவை பரவலாக ஆதரித்த எழுத்தாளர் சுஜாதா ..எப்போதும் நினைக்கப்படுகிறார்.
.
மண்ணெண்ணெய் விளக்கொளியில்
கந்தசாமி படிக்கிறான்
கம்ப்யூட்டர் சைன்ஸ் (சுஜாதா )
தமிழில் மிகவும் பிரபலமான் ஹைக்கூ ... இது வீதி விடங்கன் ஆப்ரகாம் லிங்கன் முதல் எத்தனையோ ஏழைக் கதைகளை கண்முன் நிறுத்தும் அதே நேரத்தில் ஓர் அழகான நம்பிக்கையை சுவையாகத் தரும் சூட்சுமம் கொண்டது .
அந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்? - (அமுதபாரதி).
என்று தேடுதலும்,
முதியோர் விடுதி மரக்கிளையில்
தாய் பார்த்தாள்
இரையூட்டும் குருவி!- (கருமலைப்பழம்நீ).
என்று கண்ணீரையும்
பட்டாம்பூச்சி பிடித்துக் கொடுத்தேன்
இறக்கை முளைத்தது
மகளுக்கு.(யாரோ)
என்று சிலிப்பையும்,
யாருக்கோ விழியில்லை
குருடர் தட்டில்
செல்லாக்காசு. (யாரோ)
என்று மனிதத்தையும் ,
மரக்கிளையில் குழந்தை
வரப்பில் பண்ணையார்
பயிரில் சிந்துகிறது பால் ( அறிவுமதி)
என்று வாழ்க்கை ஓவியத்தையும்,
கந்தா
கள் குடிக்க போவோமா ?
காந்திப் புரத்துக்கு ? (யாரோ )
என்று நாம் தொலையவிட்ட காந்தீயத்தையும் ,
வனவிலங்கு வார விழா
அமைச்சர் வருகை
மான்கறி விருந்து (யாரோ )
என்று அரசியல் / ஆட்சியியல் கபட நாடகத்தையும் ,
இதயத் தளம் தேடும்
இணையத் தளம்
கல்யாண.காம் (கவித்தாசபாபதி )
என்று நிகழ்வியலையும் ,
நன்றியோடு வணங்கின
பூமியை
நெற்கதிர்கள் (இரா. இரவி )
என்று மகத்துவத்தையும்,
பெண் பிறந்ததில்
மகிழ்ச்சி
பசுமாடு (நீலமலை ஜேபி)
என்று அவலத்தையும்
தலையை கொய்தவளின்
தலையை அலங்கரிக்கிறதே
பூ (மலைச்சாரல் கவிதை)
என்று சீண்டலையும், என வாழ்க்கையின் அத்தனைப் பக்கங்களையும் ஹைக்கூ ,சென்றியூக்களால் அச்சிட்டுவிடமுடியும்.
கவிதையின் வனத்தில் மண்டிக்கிடக்கும் புதர்களைபோலவும், முட் செடிகளைப் போலவும் பட்டம்பூச்சிகளோடு பறக்கும் எண்ணிலடங்கா குப்பைக் காகிதங்களும்.....! இந்த மாசுப் புழுதியிலும் அழகிய வண்ணத்துப்பூச்சிகள் தம் அடையாளத்தை காட்டிவிடுகின்றன.
அத்தோடு அல்ல....
கடல் தாண்டும் பறவைகள் கண்டம் தாண்டும்.
இந்தப் பட்டம்பூச்சிகளோ யுகங்களும் தாண்டலாம்.
ஆகவே, உங்கள் விரல்களில் வண்ணம் ஒட்டியிருந்தால் நெஞ்சோடு பூசிக்கொண்டு விடை பெறுங்கள்.
நான் தொடங்கின இடத்திற்கே திரும்ப செல்லவேண்டும்.....நிலா மேயும் தோட்டத்திற்கு....!
(தொடரும்....)