யுகங்கள் தாண்டும் சிறகுகள் 27- கே-எஸ்-கலை
குழந்தைப் பருவத்தில் அம்மா எங்களை ஏதேதோ கதைகளைச் சொல்லி தூங்க வைத்திருக்கிறாள்...
அவள் சொல்லிய நல்ல தங்காள் கதை, வால மீன் கதை, வள்ளி தெய்வானை கதையெல்லாம் இன்னும் பசுமையான நினைவுகளாக இருக்கின்றன ..பல நாட்களில் இரவு நேர சாப்பாடாக அந்த கதைகளை மட்டுமே நெஞ்சும் வயிறும் நிரப்பிக் கொண்டன ! அது ஓர் அழகிய காலம் !
நிற்க !
கவிதைகள் மட்டுமா யுகம் தாண்ட வேண்டும் ? அல்லது தாண்டும் ?
கதை என்பதை குழந்தைகள் கூட இலகுவில் விரும்புவார்கள்...கதை சொல்ல பெரியோர்கள் விரும்புவதை விட பன்மடங்கு விருப்பம் அந்தக் கதையினைக் கேட்க துடிக்கும் சிறார்களிடம் இருக்கும் !
கதை என்பது அவ்வளவு அழகான இலக்கிய வடிவம்...
இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம் இன்னும் ஏதேதோ எல்லாம் கதைகள் என்று சொல்லிக் கொடுத்த காலத்தில் சுவாரஸ்யமாய் கேட்டிருக்கிறேன்..கொஞ்சம் வளர்ந்த பின்னர் காப்பியம் இதிகாசம் அது இதுவென்று அவற்றுக்கு புதுப் புது முகங்களைக் கொடுத்த பின்னர் அவையெல்லாம் கொஞ்சம் தூர தள்ளிப் போய்விட்டன ! (எனக்கு)
கதையையே கொஞ்சம் சுருக்கமாக சொன்னால் அதை சிறுகதை என்று சொல்லும் வழக்கம் நம்மிடையே இருந்தாலும், கதை என்பதும் சிறுகதை என்பதும் அளவைத் தவிர வேறெதிலும் பேதப்படுவதில்லை.
இன்று எழுதுவது என்று எடுத்துக் கொண்டால் பலரும் கவிதை எழுத முனைவது சோம்பேறித் தனத்தின் வெளிப்பாடாக இருக்கும் என்று நான் நினைப்பதுண்டு ! ஆனால் சோம்பேறிகளால் கதை எழுத முடியாது !
கதை எழுதுவதற்கு நிறைய திறமையும் பொறுமையும் இருக்க வேண்டிய அதே நேரம் அந்த கதைக்கு முதல் வாசகனாகவும் முதல் ரசிகனாகவும் கதாசிரியனே இருக்க வேண்டும். ஏனெனில் கவிதை என்பது ரசிக்க வைக்க எழுதப்படுகின்றன ! ஆனால் கதை என்பது ரசித்து ரசித்து எழுதப்படுகின்றன !
பல சூட்சுமங்களை, வியூகங்களை, யுக்திகளை,களங்களை ஒரே மேடையில் அரங்கேற்றி அசத்தும் திறன் இந்த கதைகளுக்குள் வாழுகின்றன !
இப்படி பல அழகிய கதைகளை மிகச் சாதாரணமாக எழுதக் கூடியவர் ஒருவர் நாம் வாழும் காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்... எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதை எண்ணி பெருமைப்படுகிறேன் !
இவரது சில கதைகளை வாசிக்கும் அவகாசம் எனக்கு கிடைத்திருக்கிறது! பல கதைகளை வாசிக்க அவகாசம் கிடைக்காமலிருக்கிறது!
அவர் தளத்தின் “கதாநாயகன்” பொள்ளாச்சி.... “அபின்” தான் !
(அபி என்று தொடர்கிறேன் "சார்" என்பதை சேர்த்துக் கொள்ளுங்கள்)
ஒருமுறை இவருடைய “அவரது சொந்தங்கள்” என்றொரு கதையை வாசித்தேன்.
ஒரு படைப்பாளியின் இறுதி நிமிடங்கள் அந்த கதையின் களமாக கையாளப்பட்டிருந்தது ! படைப்பாளிக்கு சொந்தமாக இறுதிவரை அவனுடைய படைப்புகள் மட்டுமே இருக்கின்றன...அவனது மரணத்திற்குப் பின்னரும் அவனை அவை வாழவைக்கின்றன... இந்த கருவை எத்தனையோ வடிவில் எத்தனையோ பேர் எழுத்திவிட்டுப் போயிருக்கலாம்..
ஆனால் அபி இந்த கதையை கையாண்ட விதம் தான் அங்கே பளிச்சிடுகிறது! அந்த யுக்தியும் வியூகமும் நுனிப்புல் மேயும் “ஆ”(ட்)க்களுக்கு நிச்சயம் விளங்காது. அந்த கதையை கையாண்டுள்ள வியூகத்தை, உள்ளூர வியாபித்திருக்கும் கருவை பல எழுத்தாளர்களும் கட்டாயம் அனுபவித்துப் படிக்க வேண்டும்.
இதுவரை இந்த தளத்தில் அந்த கதையின் உச்சத்தைக் கடந்த ஒரு கதையை எவரும் எழுதவில்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும் என்னால். ஏன்...அபியே அதைவிடச் சிறந்த கதையொன்றை எழுதவில்லை என்றெண்ணுகிறேன் !
இன்னொரு கதை “நீயே சொல்லு சார்” என்று...
ஒரு “கொலைக் காரனின் வாக்குமூலம்” இங்கே வேர் பரப்பி இருக்கிறது...அந்த “கொலைக்காரனின்” கதையைக் கேட்ட பின்னர்...அடடா எவ்வளவு நியாயமான கொலை இது ? என்று கொலைக்கு நியாயம் கேட்க நீங்களும் முன்வருவீர்கள் என்றெண்ணுகிறேன் !
கதை எழுதும் போது அந்த கதையின் பாத்திரமாக காதாசிரியரே மாறிப்போகும் பொழுது அவரே பக்கத்தில் இருந்து கதை சொல்லும் உணர்வு உண்டாகிவிடுவது இயல்பு !
“நீயே சொல்லு சார்” கதையும் அவ்வாறான ஒன்றே ! மனிதன் செய்யும் அட்டூழியங்கள், அட்டகாசங்கள், சுயநலம் மட்டுமே உறைந்துப் போய் ஒவ்வொரு பருக்கை மண்ணையும் தன் சுயலாபத்திற்காக,பேராசைக்காக காவிக் கொள்ளும் போது, ஏனைய உயிர்கள் எப்படி நாசமாகின்றன என்பதை ஒரு புறம் நகர்த்தும் அதேவேளை, மற்றொரு புறத்திலிருந்து அரசியலும் பேசுகிறது அந்த வாக்கு மூலம் !
சிறு பிள்ளைகளுக்கு கூட புரியும் படியாகவும், பெரியவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டிய படியாகவும் ஒரு யானையாக மாறி கதை முழுக்க பேசுகிறார் அபி ! அந்தக் கதையின் ஆழமும் அழகும் கூட யானையளவே !
இன்னுமொரு கசக்கும் கருப்பொருளை “அப்பா எப்ப வருவாறு” என்ற தலைப்பின் கீழ் எழுதி இருக்கிறார்...
வறுமை என்ற விதி தள்ளிவிடும் பள்ளங்களில் விழுந்து தவறு செய்ய ஆளாக்கப்படுபவர்கள் எத்தனைப் பேர் இங்கு ? கட்டாயம் தவறு செய்தே ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்தப்படுபவர்கள் எத்தனைப் பேர்? அவர்களது ஏக்கங்கள் எப்படியானது ? அவர்களது வறுமையின் நிறம் கருப்பா சிவப்பா என்று உண்மையிலும் இறங்கிப் பார்ப்பவன் எவன் ? இந்த படைப்பாளிகள் தொட்டுப் பார்க்கும் சமூக ஓட்டைகளை அரசியல்வாதிகள் தொட்டுப்பார்த்தால் எவ்வளவு நல்லது ? (ஒரு வேளை இன்னும் பெரிதாகியும் விடலாம்)..
இப்படியெல்லாம் புலம்ப வைக்கிறது “அப்பா எப்ப வருவாரு” என்ற கதை !
அபியின் கதைகளை மேற்கோள் காட்டுவது என்பது கடினமான விடயம்..இருந்தாலும் “அவள் அப்படித் தான்” என்ற கதையை இங்கே நான் குறிப்பிடாது நகருதல் நன்றல்ல !
ஒரு கசாப்புக் கடைக்காரியிடம் மிஞ்சி மிஞ்சிப்போனால் எவ்வளவு மனிதநேயம் இருக்கும் என்றெண்ணுகிறீர்கள் ?
மூக்கு முட்ட ஆட்டு பிரியாணி மாட்டு பிரியாணி என்ற விழுங்கிவிட்டு “அடச்... சீ ..அந்த நாத்தம் புடிச்ச கசாப்புக் கடக்காரனா”என்ற தொனியில் தானே சமூகம் கூவுகிறது இன்னும் ? இந்த கசாப்புக் கடைக்காரி எப்படிப்பட்டவள் ? இவளை துணைக்கு அழைத்துக் கொண்டு அபி என்ன சொல்லுகிறார் நமக்கு ?
கதைக்கு விரைந்து தெரிந்துக் கொள்ளுங்கள் !
சமூகத்திற்கு பசியெடுக்கும் இடமெல்லாம் சென்று தாய்ப்பாலென கதையூட்டும் இவர் காதலை மட்டும் அதிகம் எழுத விரும்புவதில்லை !
காதல் குறித்த கதைகளையோ கவிதைகளையோ இவர் விரும்புவதில்லை பெரும்பாலும்...
நான் வயசுக் கோளாறு காரணமாக எதையாவது கிறுக்கிவிட்டு “சார் புதுசா ஒன்னு எழுதி இருக்கேன்...வயது வந்தவர்களுக்கு மட்டும் தான் அது..நீங்களும் பாருங்க...” என்று சொல்லுவேன்...பொறுத்து பொறுத்து முடியாத ஒரு கட்டத்தில் என்னிடம் ஒருநாள் நேரடியாகவே முணுமுணுத்துவிட்டார்...இப்படியெல்லாம் எழுதி...எதுக்காக கலை இப்படியெல்லாம் எழுதுறிங்க ? என்ன பிரயோசனம் இருக்கு சமூகத்திற்கு? அப்படின்னு...!
சும்மா சிரித்து நழுவிவிட்டேன்...!
சரி....அதைவிடுங்கள்...
அண்மையில் வாசித்தேன்...”அலையாடும் குளங்கள்...”
இங்கேயும் தனது வசதிக்காக சாவு வீட்டையே களமாக எடுத்துக்கொள்கிறார்!
செத்துப் போனவரின் உறவுகளைப் பற்றி விவரிப்பது போல காய்களை நகர்த்தி வேறோரு மரணத் தீவுக்கு வாசகனை இழுத்து எடுக்கிறார்.
கதைகளில் இவர் காட்சிப்படுத்தும் அழகை எத்தனைப் பேர் உணர்ந்து ரசிக்கிறார்கள், கதை சொல்லும் போது இவரது ஒவ்வொரு வரிகளிலும் “கதைக்குள் வைக்கப்பட்டிருக்கும் கதையின் கருவை” தடவிச் செல்லும் வித்தையை எத்தனைப் பேர் புரிந்துக் கொள்கிறார்கள் என்பதை அறியேன் !
இந்தக் கதையிலும் அப்படித் தான் ! மரணித்துப் போன அல்லது மௌனித்துப் போன ஒரு காதலின் நாட்பட்ட சந்திப்பின் ரணங்களை “உறைக்குள் வைத்தே நறுக்கும் கத்தியாகி ” உணர்வுகளைக் கீறிவிட்டுப் போகிறார்.
அட.....
இதுவும் காதல் கதை தானே ?
காதலை ரசிக்க முடியாவிட்டால், காதலை ஜீரணித்துக் கொள்ள முடியாவிட்டால் எப்படி அபியால் இப்படியொரு கதையை எழுத முடிந்திருக்கும் ?
அபி ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதில் யாருக்கும் சந்தேகங்கள் இருப்பின் நான் இங்கே குறிபிட்டுள்ள கதைகளை மட்டும் வாசித்துவிட்டு வாருங்கள் !
இவர் கதைகளை மட்டுமல்ல கவிதைகளையும் நிறையவே எழுதி வருகிறார்... ஆனால் அபியின் கதைகளுக்கு முன் அவரது கவிதைகள் வெறும் துணிக்கைகளே ! அபியின் முத்திரை என்பது கதை....அந்த கதையின் மூலம் அவர் நிச்சயம் யுகங்கள் தாண்டுவார்..அதற்கு மிகப்பெரிய எடுத்துக் காட்டு கீழே நான் சொல்லப் போகும் அவரது முக்கியமான ஒரு கதை...!
நம்மில் பலரும் இலக்கியங்கள் மூலமாக வாழ்கையை சொல்லிக் கொடுக்க
விழைகிறோம். ஆனால் ஒரு சிலர் தான் தமது வாழ்க்கையையே செய்தியாக, இலக்கியமாக சமூகத்திற்கு எடுத்துக் காட்டுகிறார்கள் !
அப்படி தனது வாழ்கையை “ஒரு முன்மாதிரி இலக்கியமாக” சமூகத்திற்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருப்பவர் அபி !
கலப்பு திருமணம் மூலம், சாதி மதம் குலம் கோத்திரம் என்ற அத்தனைக் குப்பைகளையும் தூக்கியெறிந்து விட்டு பிரேமா என்ற தனது காதலியைக் கல்யாணம் செய்து இன்று சாந்தினி சாலினி என்று இரு முத்துகளைப் பெற்று ஆளாக்கி, பீடு நடைப் போட்டுக் கொண்டிருக்கிறார் “அக்பர்” என்ற அபி! (அக்பர்+பிரேமா = அபி)
அவர் எழுதிய எல்லா கதைகளையும் விஞ்சும் வீரியமிக்கது அவரது சொந்தக் கதை ! இவரது வாழ்கையே நமக்கெல்லாம் முன்மாதிரியானது ! இந்த அபியை விடவா யாரும் காதலை எழுதிவிட முடியும் ?
இவரது ஆதலினால் காதலித்தேன் என்ற முதல் தொகுப்பை வாங்கி வாசியுங்கள் ! காதலுக்கு எட்டாம் நிறம் பூசியிருப்பார் !
அபி போன்ற படைப்பாளிகள் இலக்கியத்தை கற்பனையாக, போதையாக , விருந்தாக கையில் எடுத்துக் கொள்வதில்லை...பலரது படைப்புகளைப் படித்தால் மயக்கம் வருகிறது என்று சொல்லுவோம் பொதுவாக..
அபி போன்றவர்களின் படைப்புகளைப் படித்தால் மயக்கம் தெளிவடையும்.
இவரது படைப்புகள் விருந்தல்ல..மருந்து !
இவரது படைப்புகள் போதையல்ல பாதை !
ஒரு படைப்பாளி எழுதுவதில் சிறந்தும், வாழ்ந்துக் காட்டுதலில் அதிச்சிறந்தும் இருப்பானேயானால் அவன் யுகங்களைக் கடந்தும் பேசப்படுவான் என்பதில் ஏதும் ஐயங்கள் இருக்க வேண்டுமோ ?
=========
கீழுள்ள படைப்பிலக்கங்களுக்கு சென்று கதைகளைப் படிக்கலாம் !
அவரது சொந்தங்கள் – 150080
நீயே சொல்லு சார்..!- 143517
அப்பா எப்ப வருவாறு- 178160
அவள் அப்படித் தான் – 201705
அலையாடும் குளங்கள் -233504