மரணம்

சரியாக மணி 6. தன் அலுவலகப் பணிகளை துரிதமாக முடித்து விட்டு விரைவாக கிளம்பினர் முத்தையா. நகராட்சி அலுவலகத்தில் கிளெர்க்-ஆக பணியாற்றுகிறார் முத்தையா. தினமும் இப்படி இவர் எங்கு தான் செல்கிறார். இன்று அவரை பின்தொடர்ந்து சென்று பார்க்க வேண்டும் என்று எண்ணி பின்தொடர்ந்தான் சந்துரு. முத்தையா வேலை செய்யும் அலுவலகத்திற்கு முன்பு தேநீர் கடை வைத்திருப்பவன் தான் சந்துரு. முத்தையா மீது மிகவும் அன்பு கொண்டவன். குடும்பம் இல்லாத முத்தையாவுக்கு மகனாய் இருக்க நினைப்பவன். பின் தொடர்ந்து சென்று பார்க்கையில் முத்தையா பூச்செடி விற்பவரிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தார். ஒரு வழியாக தான் கேட்ட விலைக்கு செடிகளை வாங்கிக்கொண்டு ரோட்டோரம் நடக்க ஆரம்பித்தார். சற்று தூரம் சென்றதும் தான் வாங்கி வந்த செடிகளை நடத்தொடங்கினார். பின்பு தான் கொண்டு வந்த பையில் இருந்து தண்ணீரை எடுத்து ஊற்றினார். பின்பு அங்கு வளர்ந்த மரங்களை தலுவிக்கொடுத்தார். சிறிது நேரம் அங்கு இருந்து விட்டு தன் வீட்டிற்கு சென்று விட்டார். இவருடைய செயல்களைக் கண்ட சந்துரு மலைத்துப்போய் நின்றான். மறுநாள் காலையில் அலுவலகத்தில் அவரைக் கண்டதும் ஓடிச்சென்று அணைத்துக்கொள்ள ஆசை பட்டான். அதற்கு சரியான நேரம் வரும்வரை காத்திருப்போம் என்று எண்ணிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டான். சில மாதங்கள் கழித்து, சாலையோரம் உள்ள மரங்களை எல்லாம் வெட்டப்போவதாக நெடுஞ்சாலைத்துறை அறிவித்தது. இதைக் கேள்விப்பட்ட சந்துரு இதனை முத்தையாவிடம் கூறவேண்டும் என்று எண்ணி அலுவலகத்திற்கு சென்று அவரை தேடினான். அங்கு அவர் இல்லை. அருகில் இருந்தவரிடம் விசாரித்த பொழுது அவர் இன்று பணிக்கு வரவில்லை என்றார். முத்தையாவின் வீட்டிற்கு சென்று பார்ப்போம் என எண்ணி அவரின் வீட்டிற்கு சென்றான் சந்துரு. அங்கு அவர் தன் கிழிந்த கட்டிலில் தன் உடலைச் சாய்த்துக்கொண்டிருந்தார். அருகே சென்ற சந்துரு, தாம் வளர்த்த மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்க்கப்போகிறார்கள். வாருங்கள் சென்று தடுப்போம் என்று எல்லாம் பேச நினைத்தது. ஆனால் அருகில் சென்று ஐயா என்று மட்டும் அழைத்தது. ஒருமுறைக்கு இருமுறை அழைத்தும் முத்தையாவிடம் இருந்து மறுமொழி வரவில்லை. அவரின் நெஞ்சில் தன் செவிகளை வைத்து பார்த்தான். அங்கும் மௌனமே நிலவியது. " ஐயோ தாம் வளர்த்த மரங்களுக்கு முன்பு தாம் முந்திவிட்டீரே. நான் என் செய்வேன்" என்று அழுது தீர்த்தான். பின்பு அவரின் இறுதிச் சடங்கை முடித்து வைத்தான். யாருக்கு தெரியும், முத்தையாவின் இறுதிச் சடங்கில் எரியூட்டப்பட்ட மரங்களும் அவரின் குழந்தைகளென்று. இவரைப்போன்ற பல முத்தையா நம்மளோடு வாழ்கிறார்கள். தான் செய்யும் தியாகத்தை மறைத்துக்கொண்டு. அத்தகைய நல் உள்ளங்களுக்கு இக்கதை சமர்ப்பணம்.

எழுதியவர் : நந்தினி பிரதீவ் (13-May-15, 1:43 pm)
Tanglish : maranam
பார்வை : 480

மேலே