நீயே மருந்தாவாய்
யாரிடம் சொல்வேன்
என் கவலைகளை
நிலவிடம் சொன்னேன்
கண்ணயர்ந்த நேரத்தில்
அது நைசாக நழுவிட
விடிந்தே விட்டது
சூரியனிடம் சொன்னால்
அது சுட்டெரிப்பதுபோல்
பார்க்கிறது
நண்பனிடம் சொன்னால்
அவன் பத்தாய்
திருப்பிச்சொல்லுகிறான்
சாத்தானிடம் சொன்னால்
அது வேதம் ஓத
ஆரம்பித்துவிடுகிறது
பூவிடம் சொன்னால்
பாவம் அதற்கு
வாடத்தான் தெரிகிறது
நெருப்பிடம் சொன்னால்
எண்ணைவிட்டதுபோல்
மேலும் எரிகிறது
பூமியிடம் சொன்னால்
பூகம்பம் வருகிறது
ஆகாயம் அமிலமழை பொழிகிறது
காற்றிடம் சொன்னால் புயலாயும்
நீரிடம் சொன்னால் சுனாமியாகவும்
ஆகித்தொலைக்கிறது
காதலியிடம் சொன்னேன்
கவலை பாவம்
இருக்க இடமில்லாமல்
தவித்துக்கொண்டிருக்கிறது