புத்தனைப் பொசுக்கும் அகத்தீ

தகர்ந்த தர்மச்சக்கரத்திற்க்கும்
அப்பாவிகள் அவர்களை
அடிமையாக்கிய மிருகங்கள்
ஆகியவற்றின்
சிதறிய பிணங்களுக்கும் இடையே
அந்தத் தீவின் நடுவில்
புத்தன் தலைகுனிய
அமர்ந்திருந்தான் !

முள்ளிவாய்க்காலிலிருந்து
வந்த காற்று
தனது கழிமுகத்தின்
உப்புச் சவுக்கினால்
புத்தனை
விளாரென பிய்த்தது !

தாய்மண்ணற்று
பிறந்த ஒரு குழந்தையின் அழுகை
புலம் பெயர்ந்தவர்களின்
கண்ணீரில் கரைந்து
காற்றில் ஒலித்தது !

இனவெறியின் கடலொன்று
ஓரினத்தை சுற்றி வளைத்து
நசுக்கியதைப் போல
தகர்ந்து விழுமொரு
சிறிய தீவின் கீழ்
அகப்பட்டு நசுக்குவதாய்
உணர்ந்த புத்தனின்
தலைக்கு மேல்
ஒரு சாத்தான்
என்றோ தூக்கிப்பறந்த
ஒரு சதைப்பிண்டத்தை
போட்ட படி சொன்னது
உன் மதம் வளர்த்த
என்னால் தான்
இந்த வாய்க்கால் முழுவதும்
ரத்தமாயிற்றென்று !

கடலின் நீல நிறம் மாறி
சிவந்து ரத்தமானதால்
ஓர் போதிமரம்
குனிந்த தலையுடனும்
ரத்தம் சிந்தும் நெஞ்சுடனும்
தூக்குமரமாயிற்று !

இனிவரும் சந்ததிகளால்
வாய்க்கால்களின்
சமவெளி நாகரீகத்தில்
"பௌத்தம் " -என்பது
இனவெறியென
அறியப்படலாம் ...........!

எழுதியவர் : பாலா (17-May-15, 1:25 pm)
பார்வை : 392

மேலே