தேர்ச்சி சதவீதம் - தேன்மொழியன்

தேர்ச்சி சதவீதம்
~~~~~~~~~~~~~~

தேகம் நனைத்துக் கொள்ள
வேகமின்றி நடக்கிறாள் ..

மழை எங்கோ தூரத்தில்
தூரலோடு விழுகிறது ...

அவள் அந்தபக்கமாய்
அடிக்கடி வருகிறாள் ...

அவளருகில் வந்ததும்
மழை நிற்கிறது ..
அவள் வரும் போதெல்லாம்
மழை அப்படிதான் ..

வாய்க்காலில்
காலை வைத்தவாறு
வான் நோக்கிப் பார்க்கிறாள் ..

உடைந்து கிடக்கும்
கிணற்று பம்புகளில்
கரையான் நகர்கிறது ...

கொய்யா மரத்தின்
வேர்களும் நீரைத் தேடி
வெடித்து உலர்ந்துள்ளது ...

கண்ணுக்கெட்டிய தூரம் வரை
கழனிகளைக் கவனித்தாள்..
சப்பாத்தி கள்ளி கூட
சரியாய் முளைக்க வில்லை

நாளைத் தேர்விற்கு
புத்தகம் எடுக்கிறாள்

கடைசி பக்கம்
கிழிந்துப் பறக்கிறது.

"மரம் வளர்ப்போம்
மழை பெறுவோம் "
என்ற வாசகத்தோடு ....


- தேன்மொழியன்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (21-May-15, 11:07 am)
பார்வை : 115

மேலே