முதுகெலும்பி 15 - நிறைவுப் பகுதி

முதுகெலும்பி மாப்பிள்ள சோக்குல கொஞ்சம் வேலப்பளுவாத் திரியிறாம். அதனால அங்க நடக்குறத நாஞ் சொல்லுறேம்.

“ ஏஏ... ஆத்தா... ஒனக்கு இன்னும் வைசெயந்திமாலான்னு நெனப்பு... சீக்கிரம் அள்ளிச் சுத்திக்கி வா.... மொதத் தட்டு தூக்கணும்ல..பொண்ணு வூட்டுல நல்ல நேரத்துக்கு முன்னாடி வந்துறனுமுன்னு கண்டிசனாச் சொல்லி பறக்குறாய்ங்க... “ மொதத்தாம்பாளம் தூக்கும் பெரிய அம்மாச்சிய அழச்சிக்கிருந்தாம் முதுகெலும்பி...

“இருடா செத்த..... குளிச்ச தல அவசரத்துக்கு காயமாட்டேங்குது..இதா... இங்கின நாலடி தொலவுல இருக்குற வூட்டுக்கு போக....நாப்பது ரயிலப் புடிக்கிற மாதிரில்ல கெடந்து பறக்குறாம்...ன்னு சொல்லிக்கிட்டே அம்மாச்சி நல்ல ஏறக்கொண்டையாப் போட்டுக்கிட்டு வந்து சேந்துருச்சி..!

காவச்சாமிகள எல்லாம் வேண்டிக்கிட்டு கொலவச் சத்தத்தோட ஒவ்வொரு ஆளா தாம்பாளத் தட்டுகளத் தூக்கி வைக்க... பொண்ணு அழைக்கக் கெளம்பிட்டாக...

ஆறுசுதில... டண்டணக்கு... டனக்கு.. டண்டணக்கு.. டனக்கு... ன்னு பறையடிச் சத்ததோட..

தாழம்பூவுச் சிரிப்பழகா....அட
தட்டப் பயிறுப் பல்லழகா..
கூட நெறையாத் தங்கம் வச்சி
கொழலியத்தாம் தூக்கப் போறாம்.... அட.. கொழலியத்தா.. கொழலியத்தா.. ன்னு அடிக்கி மாறாம மாரிசித்தப்பு பாட்டு பொளந்துகட்ட.... அதுக்கு ஏத்தாப்புல ஒடுநண்டும் அவஞ் சேக்காளிப் பயலுகளும் ஆட்டம் போட... வேட்டிகட்டுன வேம்பு ஐய்யனார் கணக்கா கம்பீரமா நடந்து வந்துக்கிருந்தாம் முதுகெலும்பி....

நாப்பதடி வீட்டுத் தூரத்துக்கு ஊரச்சுத்தி.. பாதயச் சுத்தி..ஆட்டம் பாட்டத்தோட முக்காமணி நேரத்துல வந்து சேந்திருச்சி மாப்புள வீட்டுக் கூட்டம்...

சந்தனப் பொட்டோட இளைச்ச மரங்கணக்கா நின்ன மயிலம்பய.. முதுகெலும்பிக்கி பொட்டுவச்சி கட்டிப்புடிச்சி கூட்டிப் போனாம் பந்தலுக்குள்ள...ஊருக் கெழவிக மொத்தம் நீர்க்கொழலிய உருவிக்கொஞ்சி மோவாயில இடிச்சி.... “ இவா... இருக்கிறதப் பாத்தா இப்பவே மசக்கைக்காரி மாதிரில்ல இருக்கு” ன்னு கிண்டலு பேசிக்கிருக்க மஞ்ச வெளிச்சத்துல ரொம்பவே செவந்திருந்தா கொழலி..
கூட்டமெல்லாம் வயிறார சாப்பிட்டு முடிச்சி முதுகெலும்பியும்..கொழலியும் மாலைமாத்தி நிச்சியம் பண்ணி.. அம்மா... கொழலி அப்பா.. ஒரு சேர நிக்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்க.... ஊரே சேந்து வாழ்த்திவிட்டுச்சி ரெண்டு பேரையும்.... அம்புட்டு அழகா இருந்த கொழலி வீட்டுல எல்லாரும் பொண்ணு அழைச்சிக்கிட்டுப் போக நல்ல நேரமாப் பாத்து ஒக்காந்திருந்தாக...

அப்ப.. முதுகெலும்பி பேச ஆரம்பிச்சாம்
“ நாளைக்கி யாரும் எனக்கு நக நட்டு எதுவும் செய்யாதீய..”

கல்லுக்காலு விழுந்த தரைகணக்கா கொஞ்சமா அதிர்ந்த கொழலி அப்பா “ஏந்தம்பி....? என்ன கொற வச்சம்... ஏம் இப்பிடி பேசுறீய..? பயம்ன்னு சொல்லுறதவிட மக வாழ்க்கையில அம்புட்டு அக்கறையின்னு சொல்லலாம் அவருக்கு.

மயிலங்கூட...” என்னடா... மாப்புள... முறுக்குக் காமிக்கிற.. ன்னு நெசமாமே முறுக்குனது அவந்தாம்.

“அடப் பொறுப்பா... எப்பவுமே ஒனக்கு சுர்ர்ர்ங்கும்... அதாவதுங்க... நாம வருசம்முச்சூடும் காடு கரன்னு ஒழைச்சி காசு பணம் சேக்குறம். இந்த மாதிரி கலியாணங் காச்சி ஏதாவது வந்தா மாமம்மொறை.. மரியாதையின்னு காப்பவுனு.. அரைப்பவுனுன்னு செஞ்சி பெரும அடிச்சிக்கிறம்... ஆனா இதைஎல்லாஞ்சொல்லி விக்கிற கூட்டம் இருக்கே... அதுதாம் பிரச்சின...
செய்கூலி சேதாரம்மின்னு சொல்லி.. நோகி ஒழைச்சத நோகாம ஒக்காந்த எடத்துல இருந்தே புடுங்கிக்கிறாங்க. நாமளும் பவுசா..அள்ளிக்குடுத்துட்டு வந்து துண்டத் தோள்ல போட்டு மீச முறுக்கிக்கிறம். நெல்லாச் செய்யுங்க... சோளமாச் செய்யுங்க... வெதைக்க ஒதவும்..கலப்பையாச் செய்யுங்க. ஒழவுக்கு ஒதவும். அதை விட்டுட்டு.. நாமளுக்கு எதுக்கு தங்கம்...?”

ஒரு செரமத்துல ஒதவியா இருக்கும்ல..ன்னு யாரோ சொல்ல..

செரமம்ன்னு எதைச் சொல்றீய.... வச்சிப்புட்டு வட்டி கட்றதையா......? ன்னு இவம் திருப்பிக் கேக்க.. கூட்டத்துல பதிலு இல்ல...

கொழலி அப்பா ஓடிவந்து அழுதுக்கிட்டே கட்டிக்கிட்டாரு இவன...
“ சித்தப்பு.. எப்பவும் இப்பிடித்தா.. பொசுக்குபொசுக்குன்னு அழுதுருவாக.. எம் மாப்புளையப் பத்தி எனக்குத் தெரியாதா....?ன்னு “ முதுகெலும்பியப் பாத்து கண்ணச்சிமிட்டிக்கிட்டே அவரப் பிரிச்சிவிட்டுக்கிருந்தாம் மயிலன். .. ஒருவழியா போயிட்டுவாறஞ் சொல்லி.. மணமகளே பாட்டுப் போட்டு ஆரத்தி எடுத்து வாழ்த்தி பொண்ணு அழைச்சிக்கிட்டு வந்துருந்தாக எல்லாம்.....

விடியக்கால நாலு மணிக்கி எந்திரிக்கிறது ஒண்ணும் ஊருசனத்துக்கு புதுசு இல்லையே..... வழக்கம் போலவே எல்லாரும் எந்திரிச்சி ஆளுக்காளு ஒரு வேலையைப் பாக்க ஆரம்பிச்சிருந்தாக கலியாண வீட்டுல. தூக்கக் கலக்கம் போக சாமித்தாத்தா இங்க டீத்தண்ணி போட்டுக் குடுத்துக்கிருந்தாரு. நாலு கொவள டீ... ஆற....
“ யே.. சின்னாத்தா... என்னத்தப் பாக்குறீய... அத எடுத்து அங்கிட்டு ஆளுகளுக்கு குடுங்க “ ன்னு முத்தாயி அம்மாச்சிக்கிட்ட ஏவுனாரு. சின்னாத்தான்னு கூப்புட்ட அவரப் பாத்து கண்ணு கலங்கிக்கிட்டே பாத்த முத்தாயி அம்மாச்சியும் கொவளைகள எடுத்துக்கிட்டு போக ஆரம்பிச்சிருச்சு. ஒரு ஒறவுக்கான இன்னொரு விடியக்கால அது....

ஒரு வழியா எல்லா சனமும் குளிச்சி தொடைச்சி திட்டாணிக்கு முன்னாடி நிக்க திட்டாணி நடுவுல பொண்ணு மாப்புளைக்கி ரெண்டு நாற்காலி போட்ருந்தாக.. சுத்திமுட்டும் மினுக்குற காகிதத்துல ஒரு மேடை மாதிரி மயிலு வடிவத்துல செஞ்சிருந்தாக... எல்லாருங் கூடி வாழ்த்துச் சொல்ல... கொலவச்சத்தம் பறையடியோட... கொழலி கழுத்துல மஞ்சக்கயிறு கட்டினாம் முதுகெலும்பி... ஊரு பொம்பள ஆளுக.. எல்லாங் கூடி

தந்தானே... தானனனே... தந்தானே... தானனனே...
ஒரு முத்தமுங் கேட்டிட முதுகக் காட்டுனா பொண்ணு அவ...
அத... வெட்டியும் பாத்துட்டு இன்னமுங் கேக்குறாம் பைய அவம்..
இன்னொரு சேதிக்கி என்னன்னு கேக்குறா களைச்சி போன பொண்ணு அவ..
இங்கிட்டு வாடின்னு இழுத்துப் போட்டுட்டு வெத்தல தேடுறாம் பைய அவம்..
போடு......தந்தானே... தானனனே... தந்தானே... தானனனே... இப்பிடியா கும்மியடிச்சிப் பாடுனாக...
பாட்டு முடிஞ்சதும்... சாமித்தாத்தா பேச ஆரம்பிச்சாரு

“இன்னைக்கி ஊருக்கு இன்னொரு திருவிழா நாளுன்னுதாம் சொல்லணும். அமங்கலமா பேசுறமின்னு சனம் தப்பா நெனைக்காதிய... வெட்டிக்கிட்டு வந்த கொழலி எங்க அனாதையாப் போயிருமேன்னு ஊரே வெசனப்பட்டு அழுகாத நாளு இல்ல.. அவளைத் திரும்பப் பூத்துச் சிரிக்க வச்ச முதுகெலும்பிக்கி என்னோட ஆசீர்வாதம். அவம் நேத்து தங்கம் வேண்டான்னு சொல்லி அதுக்கான காரணத்தையுஞ் சொன்னப்பவே அவம்இந்தப் புள்ளைய எப்படி வச்சிக் காப்பாத்துவான்ன்னு எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும்.

இந்த ஊரு இன்னைக்கி இப்பிடி கோலாகலமா இருக்குன்னா அதுக்கு காரணம் மயிலனும் முதுகெலும்பியுந்தேம். அந்தப் பயலுக நெல்லு யாவாரிகிட்ட அப்படி புடிச்சி நிமித்தலையின்னா நாமள இன்னைக்கி நாலு கஞ்சி முழுசா குடிக்க வச்சிருக்கு.நம்ம சாமி எல்லாத்தையுங் கொறவில்லாம குடுத்திருக்கு.. கூடவே அடிச்சிப் புடுங்க ஆளுகளும் நெறையாக் கெடக்காக....

ஒண்ணு சொல்லுறேம். ஒரு மனுசன் நல்லவனா இருந்தாலும் கெட்டவனா இருந்தாலும் அவனுக்கு பசிக்கும். பசிக்குச் சோறு போடுற ஒசந்த தொழிலச் செய்யிறம் நாம..யாரு வயித்துலயும் அடிக்கப்புடாது. நமக்கு அரசாங்கம் வேணா உதவி செய்யாம இருக்கலாம். அது அவுக இன்னிக்கி செய்யிற தப்பு. நாளைக்கே அவுக தலைமொற பசிச்சிச் சோறு கேக்குறப்ப.. அவுககிட்ட இருக்குற காச வச்சிக்கிட்டு சோறச் செய்ய முடியாது.. வளைத்தும் அறுத்தும்தா கொண்டுவரணும்.. இன்னைக்கி இப்ப இருக்குற நெலமைக்காக நாம இந்தத் தொழில வெறுத்து ஒதுக்கிறக் கூடாது. ஒலகமே சோத்துக்கு நம்மகிட்ட வாற காலம் ரொம்பத் தூரத்துல இல்ல.

நம்ம சின்னாம் (ஒடுநண்டு) மாதிரி வெளில போயிப் படிக்கிற ஆளுக அப்பிடியே வெளிநாடுன்னு போயிறாம படிச்ச அறிவக்கொண்டு ஊருக்கு வந்து இந்தத் தொழில எப்படி மேம்படுத்துறதுன்னு கத்துக்கிறனும். கூடவே சொல்லிக்குடுக்கணும்.ன்னு சொல்லி முடிக்க...
முதுகெலும்பி.... கொழலி மொதக்கொண்டு எல்லாரும் அவரு முன்னாடி கால்ல விழுந்தாக... ஊருக்கே ஆசீர்வாதம் கெடைச்ச நாளு அன்னைக்கி...

......யேய்... கொழலி... இங்க கொஞ்சம் தண்ணி கொண்டாப்பா...ன்னு சொல்லிக்கிட்டே முதுகெலும்பி....
“அப்பறம் என்னங்க... இம்புட்டுதாங்க எங்க ஊரு... இம்புட்டுதாம் எங்க வாழ்க்கை..நாங்க ஒங்கள மாதிரி பெரிய படிப்பெல்லாம் படிச்சிப்புட்டு வேர்க்காத வீட்டுக்குள்ள உக்காந்து வேல செய்யல... கொறச்சலாப் பாத்தாலும் ஒங்களுக்கு காஞ்சி போயி வருது பாருங்க அரிசி... அதுக்குள்ள எங்க எல்லாரோட ஈரம் இருக்கு.... அம்புட்டுதேம்..! இம்புட்டு நாளா எங்ககூடவே வந்து எங்களப் படிச்சதுக்கு பெரிய நன்றியச் சொல்லிக்கிறேம். கூடவே இருந்து வாழ்றதுன்னாலும் சரிதான்... வாங்க வாழ்ந்து பாப்பம்...!”

பொலபொலன்னு விடிஞ்சி வாறப்பவே குழலிகிட்ட பத்தரை மணி பஸ்சு வாறப்ப சோறு கொண்டுவரச் சொல்லி... மம்பட்டியோட வயலுக்குப் போய்க்கிருந்தாம் முதுகெலும்பி...!!
- நிறைவு...

எழுதியவர் : நல்லை.சரவணா (21-May-15, 11:22 am)
பார்வை : 217

சிறந்த கட்டுரைகள்

மேலே