கதையறிந்த இறைவன்

கல்விதனை கற்பதற்கு கலைக்கூடம் செல்ல
==காலெடுத்து நடப்பாளே கனவுகளும் சுமந்து
கல்லூரி வாசலுக்குள் கால்வைக்கும் முன்பே
==கனவுகளும் சிதையுமென்று அறியாத மொட்டு.
கல்லாத காதகரின் கைகளுக்குள் சிக்கி
==காமுகத்தின் வேட்டைக்கு இரையாகி சிதைந்து
கல்லறைக்குப் போவாளே களங்கங்கள் பட்டு
==கண்மூடித் தூங்குமே சமுதாயம் நன்கு.

நாய்க்கிருக்கும் குணத்தினிலே நாளிலொன்று மின்றி
==நாயினிலும் கேவலமாய் நடந்திங்கே காமப்
பேய்களென உலவுகின்ற பெண்பித்தர் கூட்டம்
==பெண்ணொருத்தி வயிற்றினிலே பிறப்பெடுத்த போதும்
தாய்குலத்தை மதிக்காமல் தரையிட்டு மிதிக்கும்
==தரங்குறைந்த செயலாக தாரணியில் இன்று
காய்முதிர்ந்து கனியாகி சுவைகொடுக்கு முன்னே
==கல்லாலே அடித்துத்திர்த்து கசக்கிடுதே காலால்!

பூமுடித்து பொட்டுவைத்து புதுப்பெண்ணாய் ஓர்நாள்
==புகுந்தமனை செல்வதற்கே பூத்திருக்கும் பூக்கள்
காமுகத்தின் தீப்பட்டு கருகுகின்ற நாட்டில்
=கற்புக்கு ஏற்பட்டக் களங்கத்தைக் கொண்டும்
நாமுமது நீதிக்காய் குரல்கொடுப்போ மென்றே
==நயமாக பணந்தேடும் நரிக்கூட்டம் இங்கே
சாமத்தில் சரசகலை பயில்வதற்கு பெண்மேல்
==சாய்ந்திருக்க காசள்ளி சம்பலமாய்க் கொட்டும்.


பொல்லாத உலகத்தில் பெண்ணாகப் பிறந்து
==பூப்பெய்தும் முன்னாலே மண்ணோடு கலக்கும்
அல்லல்கள் கொண்டிங்கே அழிந்திட்ட ஆத்மா
==அல்முழுதும் அழுதவிழி அதிகாலை வேளை
கல்லறைமேல் பூக்கின்ற பூவிதழின் மேலே
==கண்ணீரை பனித்துளியாய் சிந்துவதாய் கூறும்
கல்லறைக்குள் அடங்கிவிட்ட கன்னியர்கள் உள்ளக்
==கதையறிந்தே சிலையாக சமைந்தானோ இறைவன்?

அண்மையில் இலங்கை புங்குடுதீவில்பாலியல் கொடுமைக்கு பலியான பள்ளி மாணவி வித்தியாவின் ஆத்மாவின் குரலாய்...

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (27-May-15, 2:05 am)
பார்வை : 156

மேலே