செருப்பு
பாட்டி, நீங்க தொவைக்றவங்கதான?
ஆமா, என்னய்யா?
துணி கொஞ்சம் கிடக்கு, எடுத்துக்கிறீங்களா?
இல்லய்யா? ஒங்காளுங்களுக்கு நாங்க தொவைக்கமாட்டோம்… வள்ளியம்மா தான் உங்காளுங்களுக்கு தொவைப்பா… எதுக்க பார்த்தா சொல்லுதேன்.
சரி,
கதவுகளுக்கு தாழிட்டுவிட்டு வேகவேகமாக கிளம்பினான் ராசு. பஸ்ஸ புடிச்சு காலேஜ்க்கு போயி… கடவுளே பஸ் போயிருக்கக் கூடாது, என புலம்பிக் கொண்டே ஓட்டமும் நடையுமாக சென்றான்.
ஏ யாரது ?
நான்தான் ராசு,
யார்ரா அது ?
பெருசு, நான்தான் செல்லம்மா மகன் ராசு,
ம் பட்டணம் போரவனா? இந்தாப்பா அப்படியே போகயில நாக்கியரு வீட்ல ஏதோ சோலின்னு பெரிய முத்தன் போனான். சீக்கிரம் வரச்சொல்லி சத்தங் கொடுத்துரு
சரி பெருசு,
யய்யா… ராசு பார்த்துப் போய்யா… நம்ம சனத்துக்குள்ளயே நீ தான் பெரிய படிப்பு படிக்கிற… ஒங்கப்பன் போனபின்னாடி செல்லம்மா ஒண்டிக்கட்டையா கஷ்டப்பட்டு படிக்க வைக்றா… அவ மனசு நோகாமா நடந்துக்கய்யா…
பெருசுக்கு வேற வேலயே கிடயாது எப்பவும் இதயே ஞாபகப்படுத்தும். என்று முனங்கிக் கொண்டே நடையை வேகமாக்கினான். தெரு கடைசியில ஒரு மாதாகோயில், அதின் சிலுவையை பார்த்து நடந்து கொண்டே நெற்றிக்கும் நெஞ்சுக்குமாய் சிலுவை வரைந்து கொண்டு நடந்தான். மேலத்தெரு அம்மன் கோயிலைத்தாண்டி பத்தடி தூரம் வந்திருப்பான். எதிரே சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்தவர் அவனருகில் வந்து, ஏல ராசு என்னடா இப்படி வர்ற, எவனாட்டம் பாத்தான்னா என்னாகும், அப்பொழுதுதான் செருப்புக் காலோடு நிற்பதை உணர்ந்தான், இல்ல சித்தப்பா, காலேஜில இன்னக்கி கேம்பஸ் இண்டர்வியூ அந்த அவசரத்துல மறந்துட்டேன் என்றவன் செருப்பைக் கழட்டி கையில் எடுத்துக் கொண்டான்.
ராசு, தபால் வர்ற வரய்காது கொஞ்சம் பார்த்துப் போய்யா?
சரி சித்தப்பா, பெரிய முத்தண்ண அங்கிட்டு நிக்காகளா பெரிசு தேடினாரு,
ஆமா, கார வீட்டு பக்கம் நிக்கிறான்…
இரண்டடி நகர்ந்தவனை
ஏலய்…நான் வேண்ணா போய் அவன்கிட்ட போய் சொல்லிறேன். நீ குறுக்கால கூடி போ, பஸ் வர்ற நேரமாச்சு, பாத்து போடா
சரி, சித்தப்பா
தெருப் பசங்க மேலத்தெரு வழியா சைக்கிள்ல ஏறி போறது வர்றதெல்லாம் அவுகளுக்கு பிடிக்காது. ஒருநாள் ஊருக்காரங்கள்ளாம் கூடி சின்னப்பிள்ளைங்க வீட்டு முன்னாடி ஓடியாடும் அதனால மேலத்தெரு வழியா வர்றவுக சைக்கிள இறங்கி உருட்டித்தான் போகணும்னு கட்டுப்பாடு போட்டாங்க, கொஞ்ச நாள்ல தெருவுக்குள்ள பயிறுபச்ச காயப்போட்டு கீழத் தெரு பயக செருப்புக் காலோட மிதிச்சிட்டாங்கன்னு பஞ்சாயத்து கூட்டி செருப்பு போட்டு வரக்கூடாதுன்னும் கட்டுப்பாடு போட்டுட்டாங்க. இந்த கட்டுப்பாட்டையெல்லாம் அம்மன் கோயில் செவுத்லயே எழுதிப்போட்டிருந்தாங்க. தெரு பயக கோவப்பட்டு அத கிறுக்கி வச்சானுங்க, ஊருக்கட்டுப்பாடெல்லாம் கீழத் தெரு ஆளுகளுக்குத்தான். அவுக எல்லாம் செருப்போடதான் சுத்துவாங்க. மாடசாமியண்ண எதுத்துக் கேக்கப் போயி அவருக்கு பாஸ்போட்டுக்கு போலீஸ் விசாரிக்க வந்தப்ப எதஎதய்யோ சொல்லி அவர அலைய வச்சிட்டாங்க. இன்னிக்கும் போலீஸ் வந்து விசாரிச்சா மேலத்தெருவிலதான் விசாரிக்காக, அவங்க நல்லதா சொன்னதான் போச்சு. நானும் பாஸ்போட்டுக்கு பதிஞ்சு வச்சிருக்கேன் அதான் அம்மா கூட மேலதெருவுல எதும் வாக்குவாதம் வச்சிக்கிடாதன்னு சொல்லுச்சு நல்ல வேள எவனும் பாக்கல, இதெல்லாம் பார்க்கறப்போ ஏதாச்சும் பண்ணலாமான்னு தோணும் ஆனா, அப்பாவுக்கு பின்னாடி அம்மா கஷ்டப்பட்டு படிக்கவைக்கிறத நினைச்சாத்தான் சரி நாம்மளும் அனுசரிச்சு போவோம்னு தோனுது.
சாயங்காலம், டவுண் பஸ் ஊரை நெருங்க, பஸ் நின்றும் நிக்காமலும் வேகம் குறைய குறையவே வெடுக்கென்று பஸ்ஸிலிருந்து கீழிறங்கினான் ராசு. கேம்பஸ் இண்டர்வியூவில் பாஸான விசயத்தை யாரிடம் முதலில் சொல்ல என்று தெரிந்த முகங்களைத் தேடிக்கொண்டே நடந்தான். மேலத்தெருவுக்குள் நுழைந்த உடனே இயல்பாகவே குனிந்து செருப்பைக் கழற்றி கைகளில் வைத்துக்கொண்டு நடக்கலான். பெங்களூரில் வேலை அம்மாவையும் கூட்டிட்டு போயிடலாம். இனிமே கஷ்டப்படவேண்டாம்… ஆனா நம்ம தெருக்காரங்க, இன்னும் எத்தனை வருசமா இந்த கட்டுப்பாட்ல இருக்கப்போறாகளோ… வருத்தங்கள் மனதை நிறைக்க ஆரம்பித்தது ராசுவுக்கு.
மச்சான்… ராசு மச்சான்…
நிமிர்ந்து பார்த்தான் செண்பகத்தை பையன் குமார், யாருக்கும் பயப்படாமல் சைக்கிளில் ஏறி வந்துகொண்டிருந்தான் மேலத்தெருவிலயே. அம்மா கூடச் சொல்லும் செண்பகத்தை அப்பா மாதிரி ரொம்ப தைரியமாம் கீழத்தெருவுல என்ன பிரச்சினையின்னாலும் அத்தை தான் முன்ன நிக்குமாம். மேலத்தெருவுல யாராது நம்ம பயலுகள ஏதாச்சும் சொல்லிட்டா சண்டைக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு நிக்கும். மாமாவும் சேந்து போய் சண்ட போடுவாறு அப்புறம் குமாருக்கு வம்பிளுக்க சொல்லியா கொடுக்கணும். குமார் எப்பவும் இப்படித்தான் மேலத்தெருவுல என்னக் கட்டுப்பாடு போட்டாலும் பயப்படவே மாட்டான். மேலத்தெருகாரங்களுக்கு நம்ம ஆளுங்கள்ளயே செண்பகத்தையக் கண்டா ஒரு பயம் தான். ‘ஏ மச்சான் செல்லம்மாத்தை அப்பவே வந்துருச்சு உனக்காகத்தான் காத்திட்டு இருக்கு’ என்று சொல்லிவிட்டு கார வீட்டு முத்தத்தில ஒரு ரவுண்டடிச்சிட்டு சைக்கிளை வேகமாக அழுத்தி ரோட்டுக்கு சென்றுவிட்டான். என்னைக்காட்டும் ஒருநாள் இந்த கட்டுப்பாட்டல்லாம் குமாருதான் அடிச்சு நொருக்குவான்னு நினைக்கிறேன்… என்று யோசித்துக்கொண்டே நடந்தவன், கையிலிருந்த செருப்பை காலில் மாட்டி நடக்கலானான். மேலத்தெரு அம்மன் கோயிலத் தாண்ட இன்னும் பத்துப் பதினஞ்சடி தூரம் இருக்கு…