இன்றும் நிகழாத கவிதை
கவிதைகளால் ஆகிவிட்டது
எனது உலகம்.
உற்சாகம் அலையும் இரவில்...
அம்மா கண்மூடிச் சொன்ன
மந்திரக் கதைகள்...
அர்த்தமற்றவைகளாகி விட்டது இப்போது.
வியந்த காலங்கள் விலகி...
வினாக்களால் நிரம்பத் துவங்கியது பருவம்.
குழந்தைகள் பெரியவர்களாகிவிட
தானே பிறந்துவிட்ட இடைவெளியில்...
உடைந்து போன பரிசாகிவிட்டது சுதந்திரம்.
இயலாமையின் நிராசைகளில்....
நான் திருடப்பட்டு விட...
திருடியதைத் திருப்பிக் கொடுக்க வழியின்றி...
செத்துக் கொண்டிருக்கிறது நிகழ் காலம்.
வறண்ட நதியாகிவிட்ட
எனது உலகத்தின் சொற்கள் உறங்கிவிட...
கற்பிதமாகிவிட்ட எனது பாதையில்...
உடைந்த எழுதுகோலிலிருந்து
கசியும் இரத்தத்தோடு ....
பொருளற்ற கவிதைகளால்
நிரம்பத் துவங்கியது என் உலகம்.