யுகங்கள் தாண்டும் சிறகுகள் -35 கவித்தாசபாபதி

அழகிய வார்த்தைகளால் இனிய கனவுகளை வெளியிடும் கவிஞன் வாழ்வின் இருண்ட மூலையில்
புறக்கணிக்கப்பட்டுத் தவிக்கும் ஏழை எளிய மக்களின் எல்லா கதைகளையும் எழுதவேண்டும்.

அவன் கவிதையின் பூமரங்கள் இந்த மண்ணின் ஈரம் உறிஞ்சியே உயிர்க்கின்றன. அதன் கிளைகள்
மண்ணுக்கே நிழல் தருகின்றன. அவை தன் இலைகளையும், பூக்களையும் இந்த மண்ணுக்கே
சொறிகின்றன.

எங்கிருந்தாலும், எப்படி இருந்தாலும் அவன் கவிதை மட்டுமல்ல அவன் வெற்றிகள், வாழ்க்கை
முறைகள், ஆத்ம சுகங்கள் ,
எதுவுமே மண்வாசனை உலரும் கணத்தில் அவன் வெற்றென்று போய்விடுகிறான் .

உலகின் திசையெல்லாம் அளந்தாலும், பரபரப்பாக வாழ்ந்தாலும்,
வாழ்க்கைக் கவலைகளில், போராட்டங்களில் உழன்று கொண்டே இருந்தாலும் , அவன் மனப்பறவை தன்
பிஞ்சுக்கால் பதித்த தாய்மண்ணைச் சுற்றியே சிறகசைப்பதால்தான் ஈரமான பாடல்களை எழுதித்
தர முடிகிறது அவனால்.

கடல் கடந்த பூமியிலிருந்து தாய்த்தமிழ் மண்ணின் ஐவகை நிலங்களை, அவற்ftறின் வெளிகளில்
ஓடும் கண்ணீரை , தலை கீழாய்ப் போன வாழ்க்கையின் விகிதங்களை மண்வாசனையோடும் மாறுபட்ட
கற்பனையோடும் அழியாத இலக்கியமாக்கித்த் தந்திருக்கிறான் "சரவணா" என்னும்
கவிதைக்காரன்.

குயிலோசை சொந்தக்காரி
வட்டநிலா வளச்செடுத்து
புருவமுன்னு வச்சுக்கிட்ட
வான்மோட்டு வீட்டுக்காரி ..

மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்தை "வான் மோட்டு வீட்டுக்காரி என்று
உருவகிக்கும் குளிர்ச்சியான அழகில் சிலுசிலுத்து லயித்திருக்க ,

கொம்புத் தேனெடுக்க
கொல்லிமல மேக்கால
முத்தமிட்டுப் போன மச்சான்
பறந்துவந்த அம்பொன்னு
பாறையில குத்தித் தைக்க,

என்று அங்கு இழையோடும் பூர்வீக குடிகளின் சோகத்தில் கீறல் விழும் மனது.


முல்லை நெலத்துக்காரி
முத்துப்பல்லு சிரிப்புக்காரி
செதுக்கிவச்ச தேக்கழகா
தெரண்டு நிற்கும் தேகக்காரி...

மருத நெலத்துக்காரி
மயில்தோக கூந்தல்காரி
பச்ச நாத்து கூட்டத்துல
பாடியோடும் ஆட்டக்காரி...

நெய்த நெலத்துக்காரி
நெயமீனு தேகக்காரி
அச்சா அளவெடுத்த
கெண்டக்காலு சீலக்காரி....

பாலை நெலத்துக்காரி
குளிச்செழுந்து நின்னாலும்
நெருப்பக் கக்கும் கண்ணுக்காரி...
மானத்துக்குக் கேடுவந்தா
மலையைப் பொரட்டும் தெடத்துக்காரி


இப்படி ,காடும் காடும் சார்ந்த முல்லை, வயலும் வயலும் சார்ந்த மருதம், கடலும் கடலும்
சார்ந்த நெய்தல், பாலை நிலங்களை உருவகப்படுத்தும் அழகில் துள்ளி சிலிர்க்கும் மனம்,
தொடரும் கண்ணிகளில் ஒழுகும் அந்நிலங்களின் நிதர்சன வாழ்க்கையில் துவண்டுபோய் விடுகிறது.

பகட்டாப் படகெடுத்து
பாய்மரத்த விரிச்ச மச்சான்
எல்லைய தாண்டுனான்னு
துவக்கெடுத்து தொளச்சிப்போட.....

இது நெய்தல் நிலத்தின் சோகம். தினம் நொந்து நொந்து வாழும் போராட்டம். மீனவர்களின் பறிக்கப்பட்ட கடல். கோட்டை மனிதர்களின் சதுரங்கம்.

அஞ்சுவக நிலமிருந்தும்
அளவில்லா பொழப்பிருந்தும்
அழுகவச்சே பாக்குதுங்க - எங்க
ஆமைக்கூட்டு அரசாங்கம்...

பூர்வீகக் குடியெல்லாம்
பொசுக்கிப் பொதச்சழிச்சி
அண்டவந்த பிடாரியெல்லாம்
அரியணையில் ஏறிக்கிச்சி..

எல்லோரையும் கொண்டுபோக
ஐயோ ..எப்பவரும்
இன்னுமொரு நிலநடுக்கம்…(நெல்லை சரவணா )

என்று கனத்த சோகத்தில் ஆழ்ந்த இலக்கியமாகும் இக்கவிதையின் ஜீவனோ பூர்வீக மக்களின்
நியாயமான விடியலை பிரார்த்திக்கிறது. ..போராடவும் செய்கிறது.

தச்சூர் நிலாச்சூரியனின் நீண்ட கவிதை "நிலம்”

அருவி குதிக்கும் நிலம்
ஆதாரமான நிலம்
குருவி களித்தநிலம் - இன்று
குண்டாலே கிழிந்த நிலம்...

வேங்கைகள் பிறந்த நிலம்- எங்கள்
வீரம் செறிந்த நிலம்
அலைகள் சூழும் நிலம் -இன்று
அனாதையான நிலம்

பாட்டன் விதைத்த நிலம் -எங்கள்
முப்பாட்டன் மூச்சு நிலம்
சிங்களக் காடையரால் - இன்று
சிதிலமடைந்த நிலம் (தச்சூர் நிலாச்சூரியன்)


நிலாச்சூரியனின் "நிலம்" ஈழத்தின் கதையை கண்ணீரின் சந்தங்களில் எழுத,
இலங்கை கவிஞர் கலைஞானகுமார் தன் மண்ணான தோட்டக்காட்டின் கதையில் மறக்கடிக்கப்பட்ட மலையக வாழ்வை ஆட்சியாளரூக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் முன் வைத்து வெளிச்சம் தேடுகிறார்.

மலையேறி இலைகிள்ளி
நாடுயர பாடுபட்டும்
விலையேறி உயிர்க்கிள்ளி
தருந்துயர கேடுமட்டும்
மலையகத்தான் வாழ்வோடு
விளையாடும் விதியாக

என்று நீளும் "தோட்டக்காட்டான் கதை " மனதைக் கண்ணீரால் துவைக்கும் பிழிவு.
அக்கதைக்குள் எரியும் தீயின் விரல்கள் அதிகாரத்தை நோக்கி நேர்மையாக நீள்கின்றன.

தோட்டக்காடு
எப்போதும் குளிர்ச்சியாகவே
இருக்கிறது -அதனால்
தொட்டக்காட்டங்களின்
வயிற்றிலும் நெஞ்சிலும்
எரியும் நெருப்பு
எவ்வளவு சூடென்பது -யாருக்கும்
தெரியாமலேயே இருக்கிறது! (கே.எஸ். கலைஞானகுமார்)


என்று தெரியப்படுத்துவதில் உள்ள தேடல், தவம், கனவு இந்தக் கவிதைக்குள் இருக்கிறது. எனில் அந்தக் கவிஞனுக்குள்ளோ உயிராய் அவன் தாய்மண் தோட்டக்காடே இருக்கிறது.

இந்த மலைமீதும்
** ஒருவானம் இருக்கிறது
அவ்வான மீதிலெங்கள்
***வாழ்க்கைநிலா தேய்கிறது

என்று மலைகளின் ராணி நீலமலையின் மேல் இழையும் சோகத்தை உணரும் வாய்ப்பு யாருக்கும் நேர்ந்ததில்லை. எல்லோருக்கும் அது சுற்றுலாக்களின் சொர்க்கம் . அம்மலையின் பூர்வீக மக்கள் (படுகர்) மண்மேடுகளை, புதர்களை, கற்பாறைகளை தேயிலைத் தோட்டங்களாலும், அக்கேஷியா, ஆரஞ்சு மரங்களாலும், பச்சையாக்கி , உருவாக்கிய பொருளாதாரம் நலிவடைந்து, வசந்தம் உருக்குலைந்து வாழ்க்கை வீணாகிப்போன அதிகாரத்தின் சூழ்ச்சிதான் இந்தக் கவிதை. தம் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்தக் குறிஞ்சி நிலத்தையே உயிராய்க் கொண்டவர்கள். வெள்ளிக்குடை விரித்து ஊர்வலம் வரும் தங்கள் குலதெய்வம் "ஹெத்தே " என்ற வாழ்ந்த மூதாதை எப்போதும் காத்திருப்பாள் என்ற நம்பிக்கையில் உழைத்துக் கொண்டிருக்கும் அவர்களின் வாழ்க்கை மனுவில் சேர்க்கப்பட்ட இன்னொரு பக்கமே இந்தக் கவிதை.

மலையெங்கும் வேர்வையாலே
***தேயிலையால் பச்சைசெய்தோம்
விலையேதும் கொள்ளாமல்
***வீணாகி வாழ்கின்றோம்

பாதி உழைப்பை - நிர்ணய
***அதிகாரம் தின்றுவிட
மீதி உழைப்பை
***இடைத்தரகன் கொண்டுபோனான்

யூகலிப்டஸ் மரமெல்லாம்
***விண்ணைத் தொடுகிறது
பச்சைமலை பள்ளமெலாம்
***பூக்களால் நிறைகிறது- எங்கள்
ஏக்கங்கள் ஏனோ
***கண்ணீரில் கரைகிறது

இந்த மலைமீதும்
***ஒருவானம் இருக்கிறது
அவ்வான மீதிலெங்கள்
***வாழ்க்கைநிலா தேய்கிறது

வாழ்க்கைநிலா தேய்ந்தாலும் - மன
***வசந்தம் பூக்கிறது
* வெள்ளிக் குடைவிரித்து - எங்கள்
***குலதெய்வம் காக்கிறது…!
இந்த மலைமீதும்
***ஒரு வாழ்வு இனிக்கிறது …! (கவித்தா )


இப்படி கவிஞன் தன் மண்ணுக்காகவும், மண்ணின் மக்களுக்காகவும்அவர்களின் கண்ணீரை மொழிபெயர்ப்பதும் , பண்பாட்டை , கலாச்சாரத்தை சந்ததியர் காலத்தக்கு எடுத்துச்செல்வதும் அவன் கடமை எனவே கொள்கிறான்.
அவன் சொற்கள் உரிமைப்போரில் அணிவகுக்கின்றன. அவன் காயங்களைத் தொட்டு காலங்களைத் எழுதிவைக்கிறான்.


தான் வாழ்ந்த குக்கிராமத்தின் மனிதர்களின் (ஆத்துப் பொள்ளாச்சி ) மெல்லிய, யதார்த்தமான உணர்வுகளை "ஒரு கிரமத்து நதி"யாக ஓடவிட்டு அதற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற "சிற்பி" தான் கண்டு, பழகி மதித்த ஆதிவாசியை சாகாவரம் பெற்ற கவிதைக்குள் சிம்மாசனமிட்டு அமர்த்தி பெருமிதம் கொள்ளும் அழகில் புதுக்கவிதை பூரித்து நிற்கிறது இங்கே ;

"ஆதிவாசி "

கனத்திருண்ட
காடுகளின் ரகசியங்கள்
அவன் கண்களில்

கலைந்தடர்ந்த
அவன் தலைமுடிக் கற்றைகளில்
ஆதித் தாவரங்களின்
அபூர்வ நெசவு

திரண்டுருண்ட தோள்களில்
காலப் படிவங்கள் தொகுத்த
மலைப் பாறைகளின் திண்மை

விம்மும் ரத்தக் குழாய்களில்
காட்டருவிகளின்
அதிர்வுகள்

மேனித் தழும்புகள்
கல்லும் முள்ளும்
சிராய்த்த லிபிகள்

காட்டுக்கொடிகளென
நரம்புகள் புடைத்த கால்களில்
உறைந்திருக்கின்றன
ராஜநாகத்தின் துடிப்பும்
மலை அணிலின் துள்ளலும்
கருஞ்சிறுத்தையின் பதுங்கலும்

மூக்கு நுனியில்
நூறு நூறு வாசனைகளை
வேறு வேறாய்த் தரம்பிரிக்கும்
சோதனைச் சாலை

செம்போத்து, வேங்கை, பச்சைப்புறா
சிங்கவால் குரங்கு எனப்
பல்லுயிர்க் குரலும்
பதிந்திருக்கும் அவன் மொழியில்
பூஞ்சாணம், பட்டுப்பூச்சி
புல்வெளிகளின்
அதீத மௌனமும் உண்டு

மலசன், காடன், வேடன்
எல்லாம் நீங்கள் இட்ட
பெயர்கள்...
நீங்கள் அறிவீர்களா
கானுயிர் அனைத்துக்கும்
பெயர் வைத்த
பெரிய மனிதன் அவனென்று? (சிற்பி பாலசுப்ரமணியம்)

மண்வாசனையும் (nativity), அதன் வாழ்க்கைத் துடிப்பும் பின்னிப்பிணைந்த கவிதைகள் மிகப்பெரிய இலக்கியங்கள். காலங்களின் மடிகளில் இவை குழந்தைகள்போல் தவழும். .

(தொடரும்)

எழுதியவர் : கவித்தாசபாபதி (5-Jun-15, 6:45 pm)
பார்வை : 193

மேலே