உயிர்
சொர்க்கம் நரகம் இவற்றில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? கடவுள் இருக்கின்றாரா இல்லையா என்பதில் நம்பிக்கை உண்டா? யார் இருக்கின்றார்களோ இல்லையோ எது உள்ளதோ இல்லையோ மரணம் மட்டும் நிச்சயம் உண்டு. இரும்புக்கோட்டைக்குள் சென்று இருபது தாழ்பாள் போட்டால் கூட இவை எதையும் தொடாமல் மரணம் மனிதனை நிச்சயம் தொடும். மண்ணின் மேல் கொம்பனாக எவ்வளவு ஆட்டம் போட்டாலும் கடைசியில் மண்ணின் கீழ் எழும்பனாக தூங்கித்தான் ஆக வேண்டும். இக்காலத்தில் உள்ளவர்களுக்கு இவைபற்றியெல்லாம் ஒரு நிமிடம் யோசிக்கக்கூட யாருக்கும் நேரம் இல்லை. இதற்கு காரணம் அவர்கள் வேலையில் பிசியாக இருப்பதால் அல்ல வாட்ஸ்அப்பில் பிசியாக இருப்பதால். ஹைவேசில் ஹைஸ்பீடில் சென்றால்தான் சங்கு ஊத வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை சிறிது நேரம் அசையாமல் ஒரே இடத்தில் படுத்தால் கூட அவர்களாகவே சங்கு ஊதிவிடும் காலம் இது.
விபத்தின் நூழிலையில் தப்பித்து வந்த இளைஞனிடம் நலம் விசாரித்தால்,
“அது ஒன்னில்ல மச்சி எமன் பாவம் எருமைல வந்தாரா நான்தான் கொஞ்சம் வசதியா இருக்குமேன்னு எமன்கிட்ட எமஹா பைக்க குடுத்துட்டேன்” என நக்கல் அடிக்கின்றார்கள்.
எமன் டூவீலரில் போகின்றாரோ ஃபோர் வீலரில் போகின்றாரோ அவர் யார் உயிரையோ எடுக்கத்தான் போகின்றார் என்பதை இவர்கள் கவனிக்க மறுக்கின்றார்கள். நீங்கள் எமனுக்கே எருமை பால் கொடுத்தவனைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா? இல்லை என்றால் இப்பொழுது தெரிந்துக்கொள்ளுங்கள்.
அந்த அறிவாளியின் பெயர் சிவா வயது இருபது. இந்த வயது பசங்களுக்கு பார்ட்டி கொண்டாட யாராவது சொல்லியா கொடுக்க வேண்டும். காலேஜில் புதிதாக யாராவது சேர்ந்தால் பார்ட்டி, விட்டுப் பிரிந்தால் பார்ட்டி, கேர்ள் ஃபிரண்ட் கிடைத்தால் பார்ட்டி, அவளின் தொல்லை தாங்க முடியாமல் அவளை கழட்டி விட்டாலும் பார்ட்டி, ஒரு வேளை காரணம் எதுவும் கிடைக்காமல் போனால் ஏற்கனவே செத்துப்போன பாட்டியை மீண்டும் சாகடித்து அதிலும் பார்ட்டி. இப்படி கொண்டாட்டத்திலேயே லயித்துப் போகின்றதுதான் கல்லூரி வயது.
சிவா அன்று கூட விடிய விடிய பார்ட்டி கொண்டாடிவிட்டு விடியற்காலை நான்கு மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தான். போதை தலைக்கேறி முற்றிப்போய் இருந்தது ஆனாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. அம்மா போட்டுக் கொடுத்த காபியை எடுத்துக்கொண்டு அவன் அறைக்கு சென்றான். கதவை மூடியபின் தான் தெரிந்தது வித்தியாசமான ஏதோ ஒர் உருவம் அவன் அறையில் அவனுக்காக காத்திருக்கிறது என்று. என்ன நடக்கிறது என சுதாரித்துக்கொள்ள கூட நேரமில்லை. அந்த உருவம் சிவாவை நோக்கி மெல்ல நடந்து வந்தது. சிவா,
”யார் நீ என் ரூம்ல நீ என்ன பண்ற?”.
உடனே அந்த உருவம்,
“நான் தான் எமதர்மராஜா உன் உயிரை பறித்து மேலோகத்திற்க்கு கொண்டு செல்ல வந்திருக்கிறேன்!”.
சிவாவிற்கு அடித்த போதையெல்லாம் ஒரே நேரத்தில் இறங்கி காணாமல் போய்விட்டது. சிவா நகர நகர எமன் அவன் அருகே வந்தான். சிவா உடனே “நில்லுங்க எமன் சார் உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசனும் ஒரே நமி~ம்!”. எமன் எதுவும் பேசவில்லை. சிவா “நீங்க ஏன் இவ்வளவு காலையில என் உயிரை எடுக்கனும்னு வந்துருக்கீங்க?!”
“எனது ஓலைச்சுவடியில் இன்று உயிரை பறிக்கும் பட்டியலில் உனது பெயர்தான் முதலில் உள்ளது”
எமன் ஓலைச்சுவடியை எடுத்து சிவாவிடம் காட்டினார். அந்நேரம் சிவாவின் குறுக்கு புத்தி வேலை செய்தது
“எமன் சார் நீங்க எப்படியும் என் உயிரை எடுத்த பிறகு நான் இறந்திடுவேன்ல அதுக்கு முன்னாடி உங்க கூட சேர்ந்து ஒரு கப் காபி குடிக்கனும்னு எனக்கு ஆசையா இருக்கு”.
வி~யம் புரியாத எமனுக்கு கண்ணே கலங்கி விட்டது. சிறிது நேரம் யோசித்த எமன் பின் ஆன்மாவின் கடைசி ஆசையாயிற்றே அதனால் நிறைவேற்றி வைத்தார்.
காபி குடித்த ஒரே நிமிடத்தில் எமன் நன்றாக அசர்ந்து தூங்கி விட்டார். காபியால் ஒன்றும் அவர் தூங்கவில்லை அவர் குடித்த காபியில் அவருக்கே தெரியாமல் சிவா சிறிது சரக்கு கலந்ததால் தான் எமன் மட்டையாகி விட்டார். நாமலே ஒரு சான்ஸ் கிடைத்தால் விட்டுவிடுவோமா என்ன? சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டிவிட மாட்டோம்! எமன் அசர்ந்து தூங்கிய நேரத்தில் சிவா ஓலைச்சுவடியில் முதலில் இருக்கும் தன் பெயரை அழித்து அதை பட்டியலின் கடைசி நபராக மாற்றி எழுதினான். சரித்திரமே மாறிவிட்டதாக தோன்றியது. உண்மையும் அதுதான். சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்த எமன் தன்னை ஒரு மானிடன் நன்பனாக கருதியதைக் கண்டு பெருமையடைந்தார்.
அதை பாராட்டுவதற்காக எமன்
“ஓலைச்சுவடியில் முதலில் உன் பெயர் உள்ளதால் பட்டியல் வரிசைப்படி இன்று உயிர்களை எடுக்காமல் நான் கடைசியிலிருந்து தான் எடுக்கப்போகின்றேன்!” என்று பட்டியலை எடுத்து அதில் கடைசிப் பெயரை பார்த்தார் எமன்.
ஐயய்யோ!!!
செத்தான்டா சிவனாண்டி!!!