பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டி_தல புராணம்

தல புராணம் என்ற தலைப்பே இந்த கதைக்குள் ஒரு வாசகனாய் என்னை ஊடுருவ வைத்தது. முதலில் ஒரு எச்சரிக்கையுடனே இக்கதைக்குள் நம்மை பயணிக்க வைக்கிறார் ஆசிரியர் , பவித்ரா, சீனு இருவரும் இன்றைய இளசுகளை தெளிவாக பிரதிபலித்தபடி நகர்கிறார்கள் . வேல்முருகனும் , இந்துமதியும் இயல்பாய் உரையாடுவதும், பொள்ளாச்சி நோக்கி பயணிக்கும் வாகனத்துடன் நம்மையும் இயல்பாய் பயணிக்க வைக்கிறது கதையின் போக்கு. கூல்ட்ரிங்க்ஸ் தவிர்த்து இளநி அருந்த வேண்டும் என்ற நல்விசயத்தை கதைக்கு ஊடே குறிப்பால் உணர்த்திவிட்டு கதை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. சாலைவழியில் எதிர்ப்படும் கிழவியின் எதிர்பாராத சந்திப்பும் , கீழே மயங்கி விழும் கிழவியை கண்டும் சாலைவழி செல்லும் வாகனங்கள் நில்லாமல் செல்வதை, மனிதம் மரித்துவிட்டத்தின் சிறு குறியீடாக கதையின் உள் லேசான குட்டோடு புகுத்தியிருப்பதும் அழகு ,இன்னும் மனிதம் பிழைத்து கொண்டும் உள்ளது என்ற விஷயத்தை உணர்த்த , காரை நிறுத்தி இறங்கிவரும் வேல்முருகன் மற்றும் இந்துமதி பாத்திரங்களால் மெல்ல உரைக்கிறார் ஆசிரியர். மயங்கிய கிழவிக்கு அருந்த நீர்கொடுத்தபின் அவள் முகத்தில் சுட்டெரிக்கும் வெயில் படாதவாறு இந்துமதி கிழவியின் முகத்தில் நிழல்விழும்படி நின்றாள் என்ற வரிகளில் சக மனித அன்பின் வெளிப்பாட்டை அழகிய காட்சியாக படம்பிடிக்கிறார் நெஞ்சுக்குள். திடீரென இக்கதைக்குள் கிழவி ஏன் வந்தாள் என்ற சிறு குழப்பம் ஏற்பட அவளை இறக்கிவிட்டு நகர்கிறது வண்டி, அதற்கான முடிச்சினை கதையின் கடைசியில் அவிழ்த்திருப்பதும் அழகு.

அங்கலங்குறிச்சி கோவில் சென்றபின் கதைக்குள் கதையாக அம்மனுக்கு அருகில் இருக்கும் சிலைப்பற்றி நமக்குள் ஒரு ஆவல் ஏற்படுத்திவிட்டு, அதற்கான விடையை வேல்முருகன் வாயிலாக பூசாரியிடம் வினவ , ராசாவின் பழங்கதை விரிகிறது விழிகளுக்குள் ,வழக்கமான ராசாக்கள் செய்யும் இரக்கமற்ற செயல்களை விவரித்தவாறு செல்லும் கதை ஓட்டத்தில் ,பெண்களை பாலியல் பலவந்தம் செய்யும் பணக்காரவர்க்கத்தின் முகத்திரையை கிழிக்க காளியாக அவதாரம் எடுத்தவளாக ராசாவை கொன்றுவிட்டு மறையும் மகேஸ்வரி பாத்திரத்தின் மூலம் நிமிர்ந்து நிற்க வைக்கிறார் வாசகனை. மகேஸ்வரியின் மறைவுக்குப்பின் கனவின் வெளிப்பாடாக அவள் ஒரு சிற்பி மூலம் சிலையாக வடிக்கப்படுவதும் , அரண்மனை இடிந்து விடுவதும் 500 வருடங்களுக்கு முன் என்ற பூசாரியின் கதையின் ஊடே இந்துமதியின் போலீஸ் எங்கு வந்தார்கள் , தற்கொலைகள் உண்டா என்ற கேள்விக்கும் வேல்முருகன் பாத்திரத்தின் வாயிலாக 500 வருடத்தை 50 வருடமாக குறைத்துபார் , பழங்கதை என்றால் வீரியமிருக்குமென்றும் , ராசா என்பவர் பண்ணையாரகவோ, ஜமீந்தாரகவோ இருக்கலாம் என்ற தெளிவிலும் கதை புதிய கோணத்தில் பயணிக்கிறது . கதை முடிவில் சிலையை போட்டோ எடுக்க வரும் வேல்முருகன் பாத்திரத்தை , முன்னரே அவர் படமெடுப்பதில் ஆர்வம் உள்ளவர் என்பதை நாசுக்காக சொல்ல, அவர் காரை விட்டு இறங்கியவுடனே சிலைகளையும், கோவிலையும் படமெடுக்க ஆர்வம் காட்டுவதும் நல்ல யுக்தி. கர்ப்பகிரகத்து அம்மனை படமெடுக்க கூடாது என்ற பூசாரி அருகில் உள்ள சிலையின் கதையை உரைத்துவிட்டு அதை படமெடுக்க அனுமதிப்பதும் , சிலைக்கு அருகில் இருக்கும் வயதான கிழவியை படமெடுத்தபின் , சிலையும் அவளும் ஒன்றாய் இருப்பதின் ரகசிய முடிச்சினை மெல்ல அவிழ்ப்பதும் , தான் வரும் வழியில் சாலையில் தள்ளாடி விழுந்த கிழவிதான் மகேஸ்வரி என்பதும் வெகு திருப்பம் . அவள் இறந்து விட்டதாக கதை கட்டி காசு பார்க்கும் கூட்டத்திற்கு மத்தியில் , அவள் சிலைகளுக்கு படையல்களும் , பூசைகளும் நடைபெற , கிழவியான மகேஸ்வரி பட்டினியுடனும் , பாதுகாப்பற்ற நிலையிலும் இருப்பது வலி நிறைந்த யதார்த்தம். மூட நம்பிக்கையினை நம்பும் மனிதர்கள் சக மனுசியை கவனிக்க மறந்த கொடுமையை பொட்டில் அடித்தாற்போல் உரைத்தது சிறப்பு. ஒரு கதையின் ஆரம்பம் , முடிவு , அதன் இடைப்பட்ட பயணம் , ஒவ்வொரு பாத்திரத்தின் நகர்வு என எல்லாவற்றிலும் ஆசிரியர் எவ்வாறு மெனக்கெட வேண்டும் என்பதே இக்கதையின் வெற்றி என நினைக்கிறேன் , இவ்வாறு உண்மை சம்பவங்களின் அடிநாதமாக எழுதப்படும் கதைகளில் தலபுராணம் தனித்து என்றும் மிளிரும் என்பது நிதர்சனம் . நல்ல கதை வாசித்த திருப்தி நமக்கு கதையை விட்டு வெளிவந்த பின்னும் மகேஸ்வரி பாத்திரத்தின் மூலம் நெஞ்சுக்குள்ளே தங்கிவிடுகிறது. அதுவே இக்கதையின் மாபெரும் வெற்றி. வாழ்த்துக்கள் அபி சார். வாழ்க வளமுடன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த கட்டுரை என்னால் எழுதப்பட்டது என உறுதியளிக்கிறேன்.
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (14-Jun-15, 10:08 pm)
பார்வை : 112

சிறந்த கட்டுரைகள்

மேலே