மீண்டும் என் ஈடனுக்கு

பட்டாம்பூச்சிகளை பறக்கவிடும்
இந்த மனமா
அருவருப்பாய் நெளிகிறது
ஒரு புழுவைப் போல
*
நாம்
நிர்வாணத்தை மறைக்க
அசிங்கங்களையே ஆடைகளாய்
உடுத்திக்கொண்டோம்

உறவுகளின்
நூலிழையில் - பெரும்
ஆசைகளைக்
கோர்த்தோம்

உண்மையின்
ரகசியங்களை
பாவங்களைப்போல்
மறைத்து வைத்தோம்

தர்மத்தை
சூதின் வாயில்
தின்ன கொடுத்தோம்..!
*
மலர்களைப் போல
இருந்திருக்கலாம்
மதங்களும் இனங்களும்
நமமை அண்டியிருக்காது

கண்ணீரைப் போல
சி்ந்தியிருக்கலாம்
பாவங்கள் நம்மை
தண்டித்திருக்காது
*
பிரிவினையாளர்கள், தீவிரவாதிகள்
குழநதைகளை கொல்பவர்கள்
இவர்களைக் கடந்து...

கற்பழிப்பு, கொலை
இனவெறி, வஞ்சனை
இவற்றைக் கடந்து...

மதங்கள் வளர்த்த
'மத'ங்களைக் கடந்து...

மனிதன் நடநதுவந்த
யுகங்களின் சுவடுகளையெல்லாம்
கடந்து...

பின்னோக்கிப் போகலாம் - ஒரு
புனிதவழி மனப்பயணம்

அதோ
ஆப்பிள்மரம் கனிந்த
ஈடன் தெரிகிறது
அங்கே நான்
ஆதாம் ஆகிறேன்

என் பிரியத்திற்குரிய ஏவாளே..!
நிர்மலமான நம் இதயங்களில்
மீண்டும் நச்சுவிதை விதைக்க
அதோ... அரவு வருகிறது

அதை...
என்ன செய்யலாம்..? (1995)

('தரையில் இறங்கும் தேவதைகள'நூலிலிருந்து, பின்னர் "கடவுளின் நிழல்கள்" நூலில் சேர்க்கப்பட்டது )

எழுதியவர் : கவித்தாசபபதி (17-Jun-15, 5:25 pm)
பார்வை : 71

மேலே