தேநீர்க் கோப்பைகளும் டீக்கடை மாணவனும்

கல்விகற்கும் வயதில்
கணக்கு கற்கிறான்
வடைகளை கணக்கெடுத்து...!
தேநீர்க்கோப்பைகளைக் கழுவும்போது
மனதையும் கழுவுகிறான்
தனக்கும் விடியுமென்று...!
பக்கத்துவீட்டு ஆயாவுக்கு
கடும்...டீ
பாசமான தாத்தாவுக்கு
சீனியில்லா...டீ
கல்லூரி இளவட்டத்துக்கு
டீயோடு ...ரெண்டு தம்
வாகனத்தில் வரும் அதிகாரிக்கு
இஞ்சி ..டீயென
டீக்கடை பெஞ்சுகளில்
தினம் வந்தமருவரின்
மனம் புரியுமிவனுக்கு ...
இவனின் மனம் மட்டும்
புரிவதில்லை
யாருக்கும்...
வெளிச்சத்தைத் தேடித்தேடி
வெறுமைக்குள் பலநேரம்
வெந்திடும் மனம் ..
நிதமும்
கழுவப்படுகின்றன
தேநீர்க் கோப்பைகள் ...
கழுவப்படாமல்
கடந்துகொண்டிருக்கின்றனர்
காணும் மனிதர்கள்
அப்பொழுதுகளில்
நேசத்துடன் மிளிர்கின்றன
தேநீர்க் கோப்பைகள்
நாளைகள் உனக்கென்று ...
வறுமைக்கு
வாக்கப்பட்டவனின்
வாழ்வாதாரத்தை
யார் மாற்றவென்று
தனக்குள் ..
மெல்லச் சிரித்துக்கொள்கிறான்
அவனும் ...?
-------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்