ஏம்மா இப்படி பண்ற

ஒரே ஒரு முறை
அவள் என்னிடம் கேட்டிருக்கலாம்...
பக்குவமாய் பக்கத்தில்
அமர வைத்து கேட்டிருந்தால்
மறைக்கவா போகிறேன்
மறைக்க அது ஒன்றும்
சிதம்பர ரகசியம் அல்ல...
என் மரியாதையை
வீதியில் வைத்து விளையாட
அவளுக்கு அனுமதி
தந்தது யார்...
ஒத்து கொள்கிறேன்
என் மீது அவளுக்கு உள்ள
உரிமை அலாதிதான்...
அதற்காக இதுவரை நான்
கட்டிகாத்த அவள்
எனக்காய் இதுவரை
கொட்டிகொடுத்த என்
சுயமரியாதையை ஏலம்
விடவா அவள் துணிந்தாள்...
பக்கத்து வீட்டு
அலமேலு மங்கை -அம்மாவின் தோழி
கூறினாளாம்....
உன் பெண்ணை
கண்டித்து வைத்து கொள்...
அவள் போகும் போக்கு
சரியில்லை என்று...
இந்த ஒரு வார்த்தையில்
என்னை அன்பை கொட்டி
வளர்த்த அவள் உள்ளம்
மாற்றம் காணும் என
என்னால் இப்பொழுதும்
நம்ப முடியவில்லை...
எத்தனை பெரிய அசிங்கம்
நடந்து விட்டது எனக்கு,
அவன் பெரிதாய் என்ன
கேட்டுவிட்டான்...
அதற்கு ஏன் இத்தனை பெரிய
அலம்பல்...ஊர் உருவகிக்கும்
கண் காது மூக்குகளுக்கெல்லாம்
பயந்தா அவள் செல்ல
பிள்ளையை உரசி பார்த்தாள்...
பெற்றவளுக்கு பிள்ளை உத்தமி
என நிரூபிக்க எந்த
அக்னிக்குள் பிரவேசிப்பது...
என்னிடம் பாட உரை
ஒன்றை தானே வாங்க வந்தான்...
அவள் ஏன் அவனுக்கும்
எனக்கும் என்ன சம்பந்தம்
என்று ஒரு ஒழுக்க
உரையையே நிகழ்த்திவிட்டாள்...
அவளை பொருத்தவரை
இப்பொழுதுகூட இதை
சரி என்று எண்ணி என்னை
வார்த்தைகளால் கலங்கடிக்கிறாள்...
நான்கு பேர் மத்தியில்
பெண்ணை பொறுப்பாய்
வளர்த்த பெருமையை
கைபற்ற போவதாய் எண்ணி
அவள் கருவறை சிசுவின்
மேல் அநியாயமாய் கறை
பூசுவதை அவள் அறியாமல்
அறியாமை பிடிக்குள்
சிக்கி விட்டாள்...
எதுவாக இருந்தாலும்
அவளை போல் ஒரு
வார்த்தையில் நான்
மாற போவதில்லை...
சந்தேகம் சங்கடத்தை
சந்திபதற்கான பாதை என்பதை
அவள் புரிந்துகொள்ளும் வரை
அவள் எனக்கு செல்ல அம்மா தான்...
அவள் கருவறையில் வலி கொடுத்த
எனையே அவள் பத்து மாதம்
சுமந்த போது நான் அவளுக்கு
இளைத்தவள் அல்ல...
அவள் தரும் வலிகளை
காலம் முழுக்க என்
மனதில் சுமக்க நான் தயார்...
அவள் தானே எனக்கு
என்றும் தாயார்...

எழுதியவர் : இந்திராணி (23-Jun-15, 4:34 pm)
பார்வை : 195

மேலே