தெய்வம் சான்ற திறல் -2

தெய்வம் சான்ற திறல்—2

ஒரு தம்பதியருக்கு, பத்து வயது மற்றும் 8 வயது நிரம்பிய குறும்புக்கார பையன்கள் இருந்தனர். அவ்விருவரும் செய்யும் சேட்டைகளை அவர்களால் தாங்க முடியாமல் இருந்தது. ஒரு நாள், அவர்களை, அவர்களது பெற்றோர் ஒரு மத போதகரிடம் அழைத்துச் சென்று அறிவுரை கூறுமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டனர். அவரும், ’சரி’ எனக் கூறி பையன்களை ஒவ்வொருவராக சந்திக்க விழைவதாகக் கூறினார். அவ்வாறே, முதலில் பத்து வயதுடைய பெரிய பையன் அவர் இருக்கும் அறைக்குச் சென்றான். அவனைப் பார்த்து அந்த போதகர் அவன் முகத்திற்கெதிரே ஆள்காட்டி விரலை வைத்து ஆட்டி, மெல்லக் கேட்டார்.

”கடவுள் எங்கே?”

பதில் தெரியாத அந்தச் சிறுவன் அவரைப் பார்த்து விழிக்க, அவர் மீண்டும் அழுத்தமாக ,அதே நேரம் சப்தமாக, அதே கேள்வியைக் கேட்டார். இப்பொழுது அந்தப் பையன், மேலும் விழித்து, ஓரடி பின்னே நகர்ந்து நின்றான். அதைக் கண்ட போதகர், அந்த அறையே அதிரும்படி அந்த கேள்வியை மீண்டும் அடித் தொண்டையில் கேட்டார். அந்த பையன் அந்த அறையில் இருந்து விழுந்தடித்துக் கொண்டு ஓடினான். தன் தம்பியிடம் நேரே சென்று நின்றான்..

“இப்பொழுது நாம் மிகப் பெரிய இக்கட்டில் மாட்டிக் கொண்டு இருக்கிறோம். கடவுளைக் காணோமாம் அதற்கு நாம் தான் காரணம் என நினைக்கிறார்கள்”

எனக் கூறி தன் தம்பியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தப்பி ஓடினான். அறிவு வளர்ச்சி அடையாத சிறுவர்களிடம் போய் இத்தகைய கேள்வியைக் கேட்டால் இப்படித்தான் ஆகும். ஏனெனில் அறிவு வளர்ச்சியே தன்னை மீறிய சக்தி எதுவென மனிதரைத் தேட தூண்டிய ஒன்றாகும்.

அறிவு வளர்ச்சி ஆக்கபூர்வமாக பேசப்பட்ட காலத்தில் இருந்தே கடவுள் என்ற ஒருவர் இருக்கின்றார என்பது அறிவுடைய மக்கள் அனைவரையும் கவர்ந்த ஒரு தலைப்பு ஆகும். இவ்வுலகில் காணக் கிடைக்காத கடவுள் இருக்கின்றாரா எனக் கேட்பது மூலம் ஆகச் சிறந்த அறிஞர்கள் கூட பெருந்தவறுகளும் பாவங்களும் புரிகின்றனர். எல்லாவற்றிலும் பூரணத்துவம் படைத்த கடவுள் என ஒருவர் இருக்கின்றார் என்று செய்யும் வாதத்தை Ontological வாதம் என்பர். கடவுளிடம் கொண்டு சேர்க்கும் அறிவு என்றும் இதனை onto logos எனப் பிரித்துப் பொருள் கூறுபவர்களும் உண்டு. இத்தகைய வாதம் பன்முகமாய் வேறுபட்ட விதங்களில் அமைந்து இருப்பினும், “பரம்பொருள்” என ஒருவர் உண்டு என்பதை மறுத்து உரைத்தால் அது சுய முரண் எனும் தவறு என்றாகி விடும். எனவே இவ்வகை வாதங்களில் பரம்பொருள் என ஒருவர் இருப்பது உண்மை என்றும் அவரே கடவுள் என்பதும் அவசியமாகின்றது. இவ்வகை வாதங்களே கடவுளின் இருப்பினை மட்டுமின்றி அவரது பண்பினையும் எடுத்துரைக்க வல்லதாய் இருக்கின்றன.

அறிவு, மற்றும் அறிவு கூர்மை ஆகிய கருவிகளைக் கொண்டு கடவுள் இருப்பதை பற்பல சிந்தனையாளர்கள் வாதிட்டு உள்ளனர். ”இறையியலின் சாரம்” (Summa Theologia) என தான் எழுதிய நூலில் புனித தோமாஸ் அக்குவினாஸ், ‘அம்பினை எய்பவர் ஒரு திசை நோக்கி எய்துவது போல, மிக அறிவார்ந்த பரம்பொருள் இருப்பதாலேயே இயற்கையில் உள்ள அனைத்தும் ஒரு குறியீட்டை நோக்கி இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு அனைத்தையும் இயக்கும் பரம்பொருளே கடவுள் என்கிறார்.

”ப்ரோஸ்லோகியோன்” எனும் நூலில் புனித பேசில் என்பவர் “அதனைத் தாண்டி வேறு எதனையும் நாம் கருத்தில் கொள்ள இயலாது என்பதால், நமது புரிதலில் எது பெரிதாய் உளதோ அதனினும் பெரிது வேறு இருக்க முடியாது என்ற நிலையில் அதனையே கடவுள் எனக் கொள்ள வேண்டும்” என்பதன் வாயிலாக கடவுள் இருக்கின்றார் என வாதாடுகிறார்.

டன்ஸ் ஸ்காத்துஸ் என்பவரோ, கடவுள் இருப்பதை கடந்து நிற்கும் விளைவுகளாலேயே நிரூபிக்க இயலும் எனக் கூறியதோடு,”எல்லையற்ற பொருட்களை தேவைக்கேற்ப ஒழுங்குபடுத்துவது முடியாத ஒன்று, அவ்வாறு காரணப் படுத்தப்பட்டவை, அக்காரணம் காரண மாக காரியமாற்றுவதால் ஒட்டு மொத்த பொருட்களில் ஒன்றாக இல்லாமல் தானே காரணமாய் விளங்குமாறு தனித்து இருத்தல் வேண்டும்“ எனப் பல்வகைப்பட்ட படைப்புகட்கும் காரண கர்த்தர் ஒருவரே என்கிறார்.

’முதல் தத்துவம் மீதான சிந்தனை’ எனும் நூலில் டெஸ்கார்டஸ் என்பவர்,
“உள்ளார்ந்த, புனைவார்ந்த, வீரஞ்செறிந்த என மூவகைக் கருத்துக்கள் உள்ளன. உள்ளார்ந்த கருத்துக்கள் நம்மில் எப்போதும் உள்ளன. புனைவார்ந்த கருத்துக்கள் கற்பனையாலும், வீரஞ்செறிந்த கருத்துக்கள் உலக அனுபவத்திலும் உருவாகுபவை. கடவுள் பற்றிய கருத்து நம்முள் உள்ளார்ந்த ஒன்று. அவ்வாறு அது கடவுளாலேயே நம்மில் வைக்கப் பட்டுள்ளது. எனவே,கற்பனையோ, வீரஞ்செறிந்ததோ அல்ல கடவுள் எனும் கருத்து” என்கிறார்.டி.எஸ். எலியட் எனும் ஆங்கிலக் கவிஞர் தனக்கே உரிய கவித்துவத்துடன் இவ்வாறு கூறுகிறார்’

”சமய அனுபவம் என்பது ஒரு இசை அனுபவம் போன்றது. அதாவது, பீத்தோவனின் குவார்டெட்டை கேட்டனுபவிக்கும் சுகம் போன்றது. “மிக ஆழமாகக் கேட்ட இசை ஆயினும் அது கேளாது, ஆனால் நீதான் அந்த இசை, அந்த இசை நீடிக்கும் வரை.”


“அறிவு ஓரளவுடையதாயினும், விடுதலை வரையுடையதாயினும் அத்தகைய அனுபவம் ஒரு சாத்திய நிலை என்பதால், அனைத்து மனிதர்க்கும் கடவுள் இருக்கிறார் என்பது உள் பொதிந்துள்ள ஒரு விழிப்புணர்வு ஆகும்” என கார்ல் ராஹ்னர் எனும் இறையியல் அறிஞர் கூறுகிறார்.

இப்பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த அழகும் இறைவன் என்றும், அந்தப் பேரழகினையே படைப்புப் பொருட்கள் அத்தனையும் பிரதிபலிப்பதாகக் கூறும் புனித அகுஸ்தீன் என்பவர்,

உலகின் அழகினை கேட்டுப் பார்
கடலின் கவினழகைக் கேட்டுப் பார்,
காற்றின் பரவிடும், குறுகிடும்
தன்மையின் தெளி அழகினை கேட்டுப்பார்,
விண்ணின் வனப்பினைக் கேட்டுப் பார்
இவை அனைத்தின் உண்மையினையும்
நாம் வினவினால் அவை இப்படித்தான்
நமக்குப் பதில் அளிக்கும்
“பார் நாங்கள் அழகுடையவர்கள்”
இப்படித்தான் அவை தங்கள்
அழகை அறிவிக்கின்றன ஆயினும்
அவ்வழகோ மாறுபடும் தன்மை உடையது.
இவற்றையெல்லாம் படைத்த பேரழகு
படைத்தவர் ஒருவர் மட்டுமே
மாறுபடாமல் இருப்பவர்.


கடவுளின் இருப்பையும், அவரது பண்பு நலத்தையும் புனித அகுஸ்தீன் கவிதையாக மொழிந்துள்ளார். இவ்வாறு கட்புலனாக கடவுளைப் பற்றி சிந்தித்து எழுதியவர்கள் கடவுள் “எங்கோ இல்லை”—மாறாக “இங்கு, இப்பொழுது இருக்கிறார் என நம்பினர். எனவே விளக்க முடியாத கடவுள் பற்றிய விளக்கம் அளிக்க முற்படாமல் மனமகிழ்வோடு அறிவின் தேடலாய் உண்மைக் கடவுளைத் தேடுவதில் கவனம் செலுத்தினர். இத்தகைய தெய்வீகப் பரம்பொருள் அவ்வாறு நம்பினோர்க்கு அவர்கள் ”நடுவில், இங்கு, இப்பொழுது” தோன்றி ஆட்கொண்டதில் கடவுள் பற்றிய வார்த்தைகளும் உருவங்களும் அவரை விளக்கும் வெறும் கருவிகளாக மாறிப் போயின. எனவே விவாதம் என்பது வார்த்தைகளின் கோர்வை என்றால் இத்தகைய விவாதம் வெட்டி விவாதம் என்றாகி விடும் என்பதாலேயே “கடவுளைச் சென்று சேரும் விவாதம்’ என கடவுளின் இருப்பை விளக்க முயல்பவர் கூறுவர்.

கடவுள் தன்னை மனிதன் உணர வேண்டும் என்பதற்காகவே அவனுக்கு ஆன்மா என்ற ஒன்றை அவனுக்கு கொடையாக அளித்து உள்ளார். கடவுள் இருக்கின்றார என்ற கேள்வியைப்போலவே ஆன்மா என ஒன்று உளதா என்ற கேள்வியும் அதற்கு இணையாக கேட்கப்பட்டு வருகிறது. ரிக் வேதம் 10.135 இல் ”எமன் மற்றும் ஒரு சிறுவன்” எனும் தலைப்பிலும் தைத்ரிய பிரம்மணம் 3.1.8. ல் சொல்லப்பட்டுள்ளபடி கிமு. 5 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த நசிகேதன் வரலாறு ஆன்மா என ஒன்று உண்டு எனபதை விளக்குகிறது. நசிகேதன் என்பதற்கு ஆன்மதாகம், அறிவு தாகம் உடையவன் என்று பொருள்’வாஜஸ்ரவஸ்’ எனும் முனிவர் தான தருமங்கள் செய்வதில் பெயர் பெற்றவராய் விளங்கினர். பெருங்கொடை வள்ளல் எனப் பெயர் பெற்ற அவர் பலியாகக் கொடுக்கும் ஆடு, மாடு போன்ற உயிரினங்கள் வயதில் முதிர்ந்தவை, குருடு, மலடு, உடல் ஊனமுற்றவை ஆக இருக்கக் கண்ட அவரது மகன் நசிகேதன், தன் தந்தைப் பார்த்துக் கேட்டான்.

“இப்படிச் செய்தால் எந்தக் கடவுளுக்குப் பிடிக்கும், இதனால் பயன் என்ன?’ என்னை எந்தக் கடவுளுக்குப் பலியாகக் கொடுப்பீர்”

மகனது கேள்வியால் வெகுண்ட மாமுனிவர் வாஜஸ்ரவாசர் அவனை மரணத்தின் அதிபதியாகிய எமனிடம் அனுப்பி வைக்கிறார். எமனை சந்திக்க நசிகேதன் மூன்று நாட்கள் காத்திருந்தான். நான்காம் நாள் அங்கு வந்த எமன், தனக்காக பிராமணன் ஒருவன் காத்திருப்பதைக் கண்டு நெகிழ்ந்து,

‘நீ மூன்று நாட்கள் காத்து இருந்ததால் நான் உனக்கு மூன்று வரம் தருகின்றேன்”

என்றான்.. அதற்கு நசிகேதன்,

“முதலாவதாக, தன் தந்தைக்கு மன அமைதியையும், இரண்டாவதாக பலி கொடுக்கும் புனித அக்கினி பற்றி விளக்கமும் மூன்றாவதாக இறந்த பின் மனித உயிர்க்கு நடைபெறுவது என்ன”

என்பது பற்றிய மறைபொருளை அறிய, மிக ஆவலாய் இருப்பதாகக் கூறினான். இவற்றை அவனுக்கு அருளிய எமன் நசிகேதனுக்குத் ‘தன்னை அறிதலை’ புரிய வைத்து இறந்த பின்னர் மனித ஆன்மா மனித உடலை விட்டுப் பிரிந்து பரமாத்மாவோடு கலக்கிறது எனும் மறைபொருளையும் விளக்கினான்.

எனவே, ”உயிரானது ஓர் அறிவுப் பொருள்” என்று இனங்கண்டு வரையறை செய்த மெய்ப்பொருளியல் ஆர்வலர்கள் “அறிவுடையது உயிருடையது” என்றும், அறிவிலாதது உயிரில்லாதது” என்னும் இரண்டாம் படி நிலைக்கு ஏகினர்.

உயிர் என்பது தனி இருப்புடைய ஒரு பொருள் என்றால் அது இல்லை என்றால் ஆன்மா உளது என்பதை “இலது என்றலின் ஆன்மா உளது” என்பதை மேல் நாட்டு அறிஞர்களான் டெஸ்கார்டஸ் மற்றும் சாக்ரடீஸ் ஆகியோரின் கூற்றுக்களை ஆதாரமாகக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம். .

இருக்கிறது---இல்லை என ஐயப்படுதல் என்ற ஒரு செயல் நடைபெற்றால் அது ஐயங் கொள்பவரின் இருப்பினை உணர்த்துகிறது. “I think therefore I am- Doubt presupposes the doubter. எனவே எனது இருப்பை நான் ஐயுறலாம் ஆயினும் நான் ஐயம் கொள்வதற்காக ஐயப்படவாவது இருந்தே தீர வேண்டும்.
இதனையே கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த சாக்ரடீஸ் “கடவுள் உண்டா இல்லையா என்ற கேள்விக்கு,
“சாதாரண ஒரு மனிதனிடம் இயற்பியல் பற்றி ஒரு கேள்வி கேட்டால் அதற்கு அவனுக்குப் பதில் தெரியாது என உடனே அவன் சொல்லி விடுவான். இப்படிப் பலரையும் அவர்கட்குத் தொடர்பில்லாத ஒன்றைப் பற்றிக் கேட்டால் தெரியாது என்றே
பதில் அளிப்பர். ஆனால், கடவுளைப் பற்றிக் கேட்டால், அந்தப் பொருளை அவன் ஏற்றுக் கொண்டு ‘உண்டு” என்றோ “இல்லை” என்றோ விடை அளிக்க முயல்வதால் எல்லோருடைய மூளையிலும் கடவுள் என்ற கருத்தமைவு பதிந்து இருக்கின்றது என விடை கூறினார்.

என்னிலே இருந்த ஒன்றை யான்அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான்அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர்காண வல்லரோ?
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே

எனும் சிவவாக்கியரின் சிவவாக்கியம். நமக்குள் இருக்கும் அந்த பரம்பொருள் பற்றிய கருத்தமைவை நாம்தான் அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டும் என எடுத்துக் கூறுகின்றது.(வளரும்)

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (25-Jun-15, 2:48 pm)
பார்வை : 169
மேலே