Kaadhal adhigam

என்னை விட எட்டி பார்க்கும்
என் கண்ணீருக்கே
உன் மீது காதல் அதிகம்..
ஒவ்வொரு முறை உன் பெயர் சொல்லும் போதும்
எதிரில் நீயே வந்துவிட்டது போல்,
உனை தேடி எட்டி எட்டி பார்க்கிறது..!!

என்னை விட நான் சூடிக்கொள்ளும்
என் மலருக்கே
உன் மீது காதல் அதிகம்..
தினமும் ஒரு முறை உனை நினைத்தாலும்,
உன் சுவாசம் தீண்ட, தன் வாசம் இழக்கிறது..!!

என்னை விட சிவந்திருக்கும்
என் இதழுக்கே
உன் மீது காதல் அதிகம்..
என்னுள் உன்னோடு நான் பேசும் ஒவ்வொரு நொடியும்,
என்னை விலக்கி, உன்னை முத்தமிட துடிக்கிறது..!!

என்னை விட விழித்திருக்கும்
என் கண்களுக்கே
உன் மீது காதல் அதிகம்..
ஒவ்வொரு முறை என் கண்ணுக்குள் நீ நுழையும் போதும்,
தன் இமைகளால், உனை சிறை எடுக்க விரைகிறது..!!

என்னை விட துடிக்கின்ற
என் இதயத்திற்கே
உன் மீது காதல் அதிகம்..
தினமும் என்னுள் நீ உறங்கும் போதும்,
சத்தத்தை நிறுத்தி, அது துடிக்காமல் தவிக்கிறது..!!

என்னை விட அனல் பறக்கும்
என் தேகத்திற்கே
உன் மீது காதல் அதிகம்..
இதுவரை நீ தீண்டாமல் வெறுத்தாலும்,
உச்சத்தில் நீ பருகி இளைப்பாற, தேன் சேர்க்கிறது..!!

என்னை விட விளையாடும்
என் கை விரல்களுக்கே
உன் மீது காதல் அதிகம்..
ஒவ்வொரு முறை நான் உனை நினைக்கும் போதும்,
உனை போற்றி கவிதை எழுத முனைகிறது..!!

என்னை விட நடக்கின்ற
என் கால்களுக்கே
உன் மீது காதல் அதிகம்..
நித்தம் ஒரு கதை சொல்லி நீ மறுத்த போதும்,
என்றாவது நீ வருவாய் என, உனக்காய் காத்திருக்கிறது..!!

எழுதியவர் : சுதா ஆர் (5-Jul-15, 3:01 pm)
சேர்த்தது : சுதா ஆர்
பார்வை : 56

மேலே