மழை வளர் நிலைகள்

சூல்கொண்டு உருவான நீருண்ட கார்மேகம்
பால்வெளியை மறைத்தபடி வானிடை சூழ்ந்தபோது
வீட்டில் பெண்ணொருத்தி கருக்கொண்டது போல்
மட்டற்ற மகிழ்ச்சி மனம் கண்டது காண்!

இதமான மண்வாசம் நாசி துளைத்து
பதமாக மழை வந்த சேதி சொல்ல
முதன்முதல் குழந்தை பிறந்தது போல்
உதயமானது மனதுள் மகிழ்ச்சி வெள்ளம்!

துளித்துளியாய் மழை உதிர,
மணித்துளிகள் பல கடக்க,
தெருவெங்கும் சிற்றோடை ஓட,
அதில் சிறுவர்கள் படகு விட,
தனயன் செய்யும் குறும்பு போல்
சிறுமழை தந்தது பெருமகிழ்வு!

மென்மேலும் மழை பொழிய,
நன்செய் புன்செய் நிலம் நெகிழ,
நீர் நிலைகள் தாம் நிறைய,
பொருள் ஈட்டி இல்லவளம் உயர்த்தும்
பொறுப்பான தனயன் போல்,
பெருமழை தருமே
மனம் முழுதும் மனநிறைவு!

ஆவேசக்காற்றுடனே
அடாது மழை பொழிந்து ,
வெள்ளமென பொங்கி வந்து,
வீட்டினுள் தான் நுழைந்து
எமை வெளிதுரத்தும் வேளைதனில்,
தாயை முதியோர் இல்லம்
கொண்டு சேர்க்கும்
கொடு நெஞ்சப்புதல்வன் போல்
மழையும் காட்டுதம்மா ஓர் கொடுமுகம் !

எழுதியவர் : (8-Jul-15, 4:56 pm)
பார்வை : 59

மேலே