வெளிச்சக்கடன் கேட்கும் வெள்ளிநிலா

முக்கனியின் இரண்டாங்கனி முகமெடுத்தப் போதிலுமே
==முள்போன்றுக் குத்தாத முகமலர்ச்சி கொண்டிருந்தே
அக்கனியின் உள்ளிருக்கும் அமுதச்சுளை போலிருக்கும்
==அகம்படைத்த குலமகளாய் அன்புஎனும் மேகத்தினால்
சர்க்கரைபோல் இனிக்குமொரு சாரல்மழை பொழிந்திட்டால்
==சாக்கடைபோல் கிடப்பவனும் சந்தனமாய் உருமாறும்
அக்கறையும் கொண்டெழுந்து அடியெடுத்துக் கால்நடக்க
==அமைகின்ற தாரமவன் அரண்மனைக்கு அஸ்திவாரம்!

இல்லையெனும் பாடலினை எந்நாளும் பாடாமல்
==இருப்பதனை கொண்டவளும் பொறுப்புடனே நடந்திட்டால்
தொல்லைதரும் வாழ்வினிலே தொடர்கதையாய் வருகின்ற
==துன்பங்கள் துயரங்கள் தூரத்தில் போய்மறையும்
எல்லையில்லா ஆனந்தம் இல்லறத்தில் பூப்பூக்கும்
== எதிர்கால நிறைவுக்கு எதிர்பார்ப்பை குறைத்தேதான்
நல்லவழி காட்டுகின்ற நாயகியாய்த் திகழ்ந்தென்றும்
==நாயகனுக் கொத்தாசை புரிவதுவே நல்லொழுக்கம்.

தாய்வீட்டுப் புராணங்கள் தலைக்கேற்றி எந்நாளும்
==தற்பெருமை பேசுகின்ற தப்பிதங்கள் என்கின்றப்
பேய்விட்டு ஓடுதற்கு பெரும்பாலும் பாடுபட்டு
==பேசுகின்ற வார்த்தைகளில் பேதமைகள் என்கின்ற
நோய்தொற்று வாராமல் நுணுக்கமாகக் காப்பாற்றி
==நூறாண்டு இல்வாழ்க்கை நூதனமாய் நிலைத்திருக்க
காய்க்கின்ற மரமாகி கல்லடிகள் தனைதாங்கி
==கனிந்துவிடும் போதினிலே காதல்கனி சுவையாகும்.

பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் பிறவிகளாய் மட்டுமன்றி
==பெண்குலத்தின் பெருமைக்குப் புகழ்சேர்க்கும் வகையினிலும்
உள்ளதெல்லாம் வாரிவாரி இறைக்காமல் கொஞ்சத்தை
==ஊருக்கும் பகிர்ந்தளிக்கும் உயர்குணத்தில் சிறந்தவளாய்
கள்ளமில்லா மனத்துடனே கணவனவன் வியர்வைத்துளி
==கரையாமல் காப்பாற்றி கரையேறும் போதினிலே
வெள்ளிநிலா விடியும்வரை வாசலிலே காத்திருந்து
==விடிவெள்ளி உன்வெளிச்ச விலாசத்தைக் கடன்கேட்கும்!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (12-Jul-15, 4:01 am)
பார்வை : 73

மேலே