என் தமிழர் பண்பாடு

என் தமிழர் பண்பாடு
.~~~~~~~~~~~~~~~~

தமிழர் பண்பாடு போற்றி
தமிழ்ப் பண் பாடு என்றீர்...

ஆழியினை அரைச்சங்கில்
அடைப்பதென்ன ஆகிடுமோ?

தமிழர் பண்பாடுடனே
தமிழர் படும் பாடும் சொல்லி
தமிழ்ப் பண் பாட வந்தேன்..

தவறிருந்தால் பொறுத்தருள்வீர்
தமிழறிந்த சான்றோரே...

திரைகடலோடி திரவியம் தேடினோம் தமிழர் பண்பாடு...!
கரைகளைத் தேடி அகதிகளாய் வந்தோம்
தமிழர் படும் பாடு..!

காவிரி மீதினிலே கல்லணை கட்டினோம்,
களிறு கொண்டு போரடித்து- நெற்களஞ்சியம் செய்தோம் தமிழர் பண்பாடு!

காவிரியின் கரையுடைய மண் சுரண்டும் அகழ்வூர்திகள்...
கையளவு தண்ணீர் கேட்டு கால் கடுக்க நடக்கின்றோம்
தமிழர் படும் பாடு...!

குடவோலை தேர்தல் செய்தோம்,
குடிமக்கள் குறை கேட்டோம், தமிழர் பண்பாடு!

தொண்டரில்லா கட்சியிலும் இன்று
குண்டர்களின் ஆட்சி!
கலவரமும் பணபலமும்
தேர்தல் களக் காட்சி,
தமிழர் படும் பாடு...!

என்று சொல்லி தீரும்
எம் தமிழர் பண்பாடு!
எங்கு சொல்லி தீரும்
எம் தமிழர் படும் பாடு!

~ஆதர்ஷ்ஜி

( “என் தமிழர் பண்பாடு " என்ற கவியரங்கில் வாசித்த படைப்பு)

எழுதியவர் : ஆதர்ஷ்ஜி (17-Jul-15, 6:51 pm)
சேர்த்தது : ஆதர்ஷ்ஜி
பார்வை : 6301

மேலே