கல்யாண மேடை கண்ணீர் வடிக்கிறது
வாழையடி வாழையாய்
வாழ்வாங்கு வாழ வேண்டி
வாயார வாழ்த்துகின்றன
வாசலிலே கட்டப்பட்ட
வாழ்விழந்த வாழை மரங்கள் !
பாவம் அவை !
நீங்களே சொல்லுங்கள் !
வாழைத் தாரை சுமந்து நிற்கும்
இந்த கர்ப்பிணி மரங்களின்
கால்களை வெட்டித்தான்
இப்படி கட்டிப் போடலாமா ?
⦁
நேற்று வரை,
செடித்தாய் மடி அமர்ந்து
புன்னகை வீசிய பச்சிளம் பூக்கள்
இன்று,
பலவந்தமாய்ப் பறிக்கப்பட்டு
கால்கள் பிணைக்கப்பட்டு
மாலையாய்த் திரிக்கப்பட்டு
தூக்கில் அல்லவா தொங்குகின்றன
மணமக்களின் தோள்கள் மேல் !
⦁
நேற்று வரை,
குதூகலத்தோடு கூவிச் சிரித்த
கொக்கரக்கோ கோழிகளும்
அம்மே! என்று தமிழ் பரப்பிய
அப்பாவி ஆடுகளும்
வாலாட்டியே வாழ்ந்து வந்த
வயோதிக மீன்களும்
இன்று,
துண்டு துண்டாய்க் கிடக்கின்றன,
வாழை இலை என்னும்
குருசேத்திரப் போர்க்களத்தில் !
⦁
மிச்சமாய்ப் போய்விட்ட
எச்சில் உணவுக்காக
உச்சக் கட்டப் போரைத் தொடங்கி விட்டன !
உங்களின் தெரு நாய்கள் !
அங்கே,
பலமில்லா நாய்களை
பலி கொடுத்தப் பிறகே
பலசாலி நாய்கள்
பசியாற்றிக் கொள்கின்றன !
⦁
மனிதருக்கு வேண்டுமானால்
இது கல்யாண மேடையாய்க்
காட்சி தரலாம் !
மற்ற சில உயிருக்கோ
தூக்கு மேடையாய் அல்லவா
துன்பம் தருகிறது !
⦁
மேலோட்டமாய்ப் பார்த்தால்
அமங்கலமாய்த் தெரியும் !
உற்றுக் கொஞ்சம் பாருங்கள்
அங்குலமாய்ப் புரியும் !
⦁
ஒன்று மட்டும் தெளிவானது !
ஒரு உயிரைக் கொன்றால்தான்
ஒரு உயிர் வாழ முடியும்
என்னும் பரிணாம விதியானது
காடுகளில் மட்டுமல்ல
கல்யாண மேடைகளிலும்
நிரூபிக்கப்படுகிறது!