போராடத்தயங்குவதோ

போராடத் தயங்குவதோ
பாவலர் கருமலைத்தமிழாழன்

குடிநீர்தான் வரவில்லை என்றால் ஊரே
கூடியொன்றாய்ப் போராட்டம் நடத்து கின்றீர்
வடியாமல் மழைநீர்தான் தெருவில் நின்றால்
வரிசையாக நின்றுகுரல் கொடுக்கின் றீர்கள்
செடிகொடிகள் மண்டிசாலை பழுது பட்டால்
சேர்ந்தொன்றாய் செப்பனிடக் கேட்கின் றீர்கள்
குடிகெடுக்கும் மதுதடுக்க மட்டும் ஏனோ
குரல்கொடுக்க இணையாமல் ஒதுங்கு கின்றீர் !

தெருநடுவில் வைத்திருக்கும் கடையில் ; கோயில்
தெருவினிலே விற்கின்ற கடையில் ; பள்ளி
தெருவினிலே நடத்துகின்ற கடையில் ; நாளும்
தெருவிருப்போர் நடக்கின்ற காட்சி கண்டும்
திருவான வாழ்க்கையினைச் சுடுகாட் டிற்குத்
திருப்பிவிடும் அவலமான காட்சி கண்டும்
அருவருப்பு கொள்ளாமல் கடையை முட
ஆர்த்தெழவும் உணர்வின்றி இருக்கின் றீர்கள் !

உணவுபொருள் வாங்குகின்ற கடையில் தானே
உயிர்பறிக்கும் வெண்சுருட்டும் விற்கின் றார்கள்
மணப்பொருள்கள் விற்கின்ற கடையில் தானே
மரணத்தின் போதைபாக்கு விற்கின் றார்கள்
பிணமாக்கும் பொருள்களினை விற்றால் நாங்கள்
பிறபொருள்கள் வாங்கமாட்டோம் என்றே நெஞ்சில்
கணமேனும் சிந்தித்தே அறிவித் திட்டால்
கடைக்காரர் போதைபொருள் விற்கா ரன்றோ !

மதுகுடிப்போர் உறவுதனை வெட்டிக் கொள்வீர்
மதுகுடிப்போர் இல்லவிழா புறக்க ணிப்பீர்
மதுகுடிப்போர் வெண்சுருட்டு பிடிப்போர் தம்மை
மனையருகில் சேர்க்காமல் விரட்ட டிப்பீர்
மதுகடைகள் மூடாமல் வரிகொ டுக்க
மாட்டோமெனப் போராட முன்னே வந்தால்
மதுதெரியா சந்ததியர் சமுதா யத்தை
மண்மீது நிறுவிடலாம் சேர்வீர் ஒன்றாய் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (31-Jul-15, 9:28 am)
பார்வை : 589

மேலே