பூமி என்றொரு கிரகம்
இறந்த பின்பு பூமிக்குதான் போவான்
இவன் பன்னுகிற கொடுமைக்கெல்லாம்
இல்லையென்றால்
இன்னொரு ஜென்மத்தில்
இவன் பூமியில்தான் பிறப்பான்
சபித்துக் கொண்டிருக்கிறான் வேற்றுக் கிரகத்தில்
ஒரு நல்லவன் கெட்டவனைப் பார்த்து...
பொய் பொறாமை காமம் களவு
இது வேறொன்றுமில்லை
பூமி கிரக மனிதர்களிடம்
குணப்படுத்த முடியாத கொடிய நோய்களாம்
பூமிக்கு செல்வது சரிதான்
மனிதர்கள் கண்ணில் பட்டுவிட்டால்
மின்னல் வேகத்தில் மறைந்திடுங்கள்
ஆமாம்
அந்நோய்கள் நம்மை தொற்றக் கூடாது
பூமியை ஆராய வரும்
வேற்றுக் கிரகவாசிகளுக்கு
அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறார்
அதன் தலைவர்...
அறிவில் ஐந்தில் ஒன்று கூடியதும்
இரண்டு கால் மிருகமுமாகிய
மனிதன் அதிகம் வாழ்ந்த கிரகம்
ஆம்..
பூமிக் கிரகம் பற்றி
இவ்வாறு பாடம் படிப்பார்கள்
வேற்றுக் கிரகவாசி மாணவர்கள்..
தன் இனமே ஒன்றையொன்று அடித்துக் கொண்டு
தன் இனத்தையே அழித்த கொடிய மிருகம்
இவ்வாறு சொல்கிறது
பூமியில் புதையுண்ட மனித எலும்புகளின்
படிமங்களை பகுப்பாய்ந்த
வேற்றுக் கிரகவாசிகளின்
அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள்...
உயிர்கள் வாழத் தேவையான
காற்று நீர் உள்ளதா என்று
தேடினாலும் கிடைக்காத ஒன்றைத் தேடி
ஆராய்ந்து கொண்டிருக்கும்
வேற்றுக் கிரகவாசியின் செயற்கை கோள்
மரமும் மண்ணீரும் மடிந்து மக்கிய
பூமி கிரகத்தில்...