சுதந்திர தினம்
"டேய் விக்னேஷ் இன்றைக்கு ராத்திரி வருணையும் சாந்தியையும் இங்கிருந்து ஒன்னா தப்பிக்க வைக்கனும் டா.", ராமு விக்னேஷிடம் கூறினான்.
"என்னடா சொல்லற", விக்னேஷ் ராமுவிடம் கேட்டான்.
"ஆமாடா இன்றைக்கு அவங்களை தப்பிக்க வச்சாதான் உண்டு மத்த நாள்ல முடியாது".
"எல்லாம் சரிடா ஆனா எப்படி? ஏதாவது ப்ளான் இருக்கா?"
"ம் ம்.. இருக்கு. இன்றைக்கு நைட்டு வார்டன், நாளைக்கு நடக்க போற சுதந்திர தின விழா ஏற்பாட்ட கவனிக்க போயிடுவான். அந்த டைம்ல அவங்கள எஸ்கேப் பண்ணிடலாம்."
"ப்ளான் நல்லா இருக்கு, வொர்க் அவுட் ஆகுமா?"
"எல்லாம் ஆகும். நீ போய் சாந்தியை கூட்டிட்டு பேக் என்ட்ரன்ஸ் டோர் கிட்ட வந்துரு. நான் வருணை கூட்டிட்டு வந்தர்ரன்."
"சரிடா.."
________________________
இரவு 11 மணி.
வார்டன் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் சுதந்திர தின ஏற்பாடுகளை கவனிக்க ஸ்டேஜுக்கு சென்றிருந்தனர். அப்போது விக்னேஷும் ராமுவும் சாந்தியையும் வருணையும் அழைத்துக்கொண்டு பேக் எண்ட்ரன்ஸ் டோர் அருகே வந்தனர். அப்போது ராமு தனது செல்போனிலிருந்து ஒருவரை அழைத்தான்.
"ஹலோ.. தம்பி நாங்க பேக் டோருக்குள்ள இருக்கோம். நீ வந்துட்டியா?"
"நான் வந்துட்டேன் சார். பேக் டோர் பக்கத்தில இருக்குற காம்பவுண்ட் செவுத்துல ஏணி போட்டுருக்கேன், நீங்க அவங்களை காம்பவுண்ட் வால்ல ஏத்திவிடுங்க இங்க ஏணி வழியா நான் அவங்களை இறக்கிடுறன்."
அவன் சொன்னது போலவே ராமுவும் விக்னேஷும் சாந்தியையும் வருணையும் ஏத்தி விட்டனர். இருவரும் மறுபுறம் இருந்த ஏணி வழியாக கீழே இறங்கினர்.
"நீங்க தான் வருணும் சாந்தியுமா?"
"ஆமா. நீங்க?"
"நான் தான் ராமு சார் கிட்ட போன்ல பேசுனவன். உங்கள நான் எங்க ட்ராப் பண்ணனும்?"
"இந்த அட்ரஸுல எங்கள ட்ராப் பண்ணிடுங்க."
அவனிடம் ஒரு துண்டுகளாக சீட்டை நீட்டினான் வருண்.
____________________________
இரவு 12 மணி.
அவர்கள் கூரிய அட்ரஸில் இருவரையும் இறங்கி விட்டுச்சென்றான் அவன். வருணும் சாந்தியும் வீட்டின் கதவருகில் சென்று மெல்ல தட்டினர். வீட்டின் அம்மாவும் அப்பாவும் உறங்கிக் கொண்டிருக்க அவர்களின் 5 வயதான செல்ல மகள் நாளை வரப்போகும் தனது பிறந்தநாளை எண்ணி தூக்கம் பிடிக்காமல் கண் விழித்து படுத்திருந்தாள். கதவு தட்டும் சத்தம் கேட்டு மெல்ல கதவருகில் சென்று கதவைத் திறந்தாள். வெளியே நின்றிருந்த தனது தாத்தாவையும் பாட்டியையும் பார்த்த சந்தோஷத்தில் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து ஆனந்த கூச்சல் போட்டால்.
ஆம் வருணும் சாந்தியும் தனது பிள்ளையால் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டவர்கள். சுதந்திர தினத்தன்று பிறந்தநாள் காணும் தங்களது பேத்திக்கு முதலில் வாழ்த்து தெரிவிக்க, வயதான தங்கள் நண்பர்களான ராமு மற்றும் விக்னேஷின் உதவியுடன் இத்தனை கலேபரங்களையும் செய்து தங்கள் பேத்தியை பார்த்து விட்டனர். அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துவிட்டு பரிசையும் அளித்தனர்.
சத்தம் கேட்டு விழித்த வருண் மற்றும் சாந்தியின் மகனும் மருமகளும் வெளியே வந்தனர். நடந்ததைப் பார்த்த அவர்கள் பேத்திக்கும் தாத்தா பாட்டிக்கும் இடையே உள்ள அன்பை புரிந்துக் கொண்டதோடு தங்கள் தவறையும் உணர்ந்தனர். இனி தங்களுடனே இருக்கும் படி வருணையும் சாந்தியையும் கேட்டுக்கொண்டனர்.
அன்றைய நாள் நம் நாட்டிற்கு மட்டும் சுதந்திர தினமல்ல வருணுக்கும் சாந்திக்கும் சுதந்திர தினமானது....

