மறைபொருள்
இடவல மாற்றத்தை இடைவிடாது அறிவித்து
மாய பிம்பத்தை மரியாதையாய் காட்டும்
நிலைப் பேழை நிலைக் கண்ணாடி
குளித்து உலர்ந்த கூந்தலில் மலர்ந்த மல்லிகைகள்
நமட்டுச் சிரிப்போடு உதட்டுச் சாயம்
கண்சிமிட்டி இமை விரித்து மை
இப்படி அரிதாரம் முடித்து
புதிய சேலைக்குள் தன்னைப் பொருத்தி
பொன்னகை அணிந்து புன்னகை ஜொலித்தபோது
முகமூடி இல்லாது முன்னின்ற அவளை
அன்றும் அழகென்றே காட்டியது நிலைக் கண்ணாடி
அந்த முன் பின் அழகுக்கு அவளும் ரசிகையானாள்
முழுமையாய் ரசிப்பதற்குள்
“பர்வீனா! காலேஜ்க்கு டைம் ஆச்சு” என்ற
அம்மாவின் சொல் வீச்சில்
விரைந்து அணிந்தாள் பர்தாவை
பர்சுக்குள் அவசரமாய் வைத்த கொலுசுடன்
விரைந்தாள்........
கொலுசு சலசலத்தது
கண்கள் மட்டும் தெரியும் அவளது பர்தாவுக்குள் இருக்கும்
மறைபொருளான அழகையும் புன்னகையும் போல
சி. அருள் ஜோசப் ராஜ் (ராஜ்கவி)