திருமணமாண ஆணும் பெண் தோழிகள் நட்பும்

ஆண்.
அவனை சுற்றி
தூரத்து இடிமுழக்கம்

தெறித்து செல்லும் மின்னல்கள்
ஆர்ப்பரிக்கும் அழகு தென்றல்
அடித்து வீசும் வாடைகாற்று
சட்டென்று பெய்யும் சாரல் மழை

அசட்டுத்தனம் அது தான் ஆம்பளைத்தனம்
ஈரம் ஆகாமல் நனைய விரும்பும் ஒரு ஏக்கம்

பெண்

நட்பின் எதார்த்தம்
நங்கூரத்திற்கு மட்டுமே ஆரோக்கியம்
தங்கத்தையும் சுட்டுத்தான் புடம் போடும்
சங்கம் தான் இன்றைய சமூகம்

பொலிவும் அழகும் சற்று மாறுபட்ட சதவிகிதத்தில்
உருவான பூங்காவில் ஒவ்வொரு பூவுக்குள்ளும்
ஊஞ்சலாடும் உணர்வுகள் அது தினம்
உருமாறும் நிலவுகள்.

ஆனாலும் மகரந்தத்தின் மகத்துவம் மறந்திடாமல்
மாண்பு எது மாசு எது என புரிந்து கொண்டிருக்கும்
ரோஜாக்களுக்கு முட்களே முகவரிகள்

சந்தர்ப்ப வசம் சந்தர்ப்ப வாதம் ஆகிவிடாதபடி
கரையில் நின்று கால் நனைக்கும்
பாதம் கீழே மட்டும் நனையலாம்
மேலே தெரியாது
அப்படி ஒரு அணுகுமுறை,
அதிகபட்சம் அவ்வளவே,
ஆணாதிக்கத்தை கையாளும் பெண்ணாதிக்கம்!

இன்றைய சமூக மாற்றம் முன்
அவர்கள் கூண்டுக்கிளிகள்
பறக்கும் போது அடுக்கு தொடர்கள்
உரையாடலில் இரட்டைகிளவி
சில நேரங்களில் சிலர் மட்டுமே
ஈறு கெட்டு எதிர்மறை பெயரெச்சங்களாய் ?

"கங்கையிலே குளிக்கையிலே காவிரியில் மனசு வைத்தால் அந்த சுகம் இது தருமோ, இந்த சுகம் அது தருமோ ?"

இப்படி ஒரு தர்க்க சிந்தனையில்
"ராமன் தான் நான் ஆனாலும் இன்று ஒரு நாள் விடுப்பில் நான் கிருஷ்ணன்" என்று
வெட்கம் கொள்ளும் விடலை முகங்கள்
விவகாரம் ஆகி விரட்டும் இருட்டு திருட்டுகள்
அலைபாயும் ராவணர்கள்
வெளுக்கும் போது மட்டுமே வெளி உலகம் அறியும்

அதுவரை
ஆண்பாவம் அறியாத பெண், பாவம்!
பெண்பாவம் புரியாத ஆண், பாவம்.

எழுதியவர் : செல்வமணி (25-Aug-15, 12:19 am)
பார்வை : 290

மேலே