புரியாத பிரியம் பிரியும்போது புரியும்

எப்போது முடியும்…
இப்படிப்பு என்றிருந்தோம் !
இதோ முடிந்தது எனும்போது…
ஏனோ மனது வலிக்கிறது !

வகுப்பறையில் சிறைப்பட்டப்போது…
சிறகு விரிக்கத் துடித்தோம் - இன்று
வாசல் திறந்து கிடக்கிறது !
ஆனால்…விரிந்த சிறகுக்குள்ளே…
ஏனோ மனது விம்மிக்கிடக்கிறது !

கல்லூரியில் நம்மோடு நடப்போடு…
கைகோர்த்த கட்டிடங்களிலும்…
ஒத்தையடிப் பாதைகளிலும்…
ஓரம்கட்டி நிற்கும் மரங்களிலும்…
எதையோ மனது தேடுகிறது !

எதிர்காலத்தில்...
என்றாவது பழைய நினைவுகளில்…
இளைப்பாறும்போது உறவில்லாமல்…
உறவான நண்பர்களை உருவமில்லாமல்…
நம் முன்னே கொணர்வோமே !
அப்போது…வலியா…சுகமா என…
வர்ணிக்க முடியாத உணர்வுகளால்…
நம் மனது தடுமாறலாம் !

இதயம் எனும் ஏட்டில்…
எழுதிவைத்த எண்ணங்களாலும்…
மலரும் நினைவுகளாலும்…
மறுபதிப்பு செய்யப்பட்டு…
புதுப்பிக்கப்பட்ட புத்தகம்போல்…
நம் உறவும் புதுப்பிக்கப்படலாம் !

நட்பின் ஆழமும் அருமையும்…
நமக்கு புரியவைக்கும், இப்பிரிவு தன்னிலே…
தன்னலமின்றி தாயைப்போல் நம்மை…
அறிவூட்டி ஆளாக்கிய ஆசிரியர்களுக்கு…
அச்சுத்துறை மாணவர்களின் நன்றியினை…
அகம்குளிர சொல்லிடுவோம்…இந்தத் தருணத்திலே !

(குறிப்பு: கல்லூரி பிரிவு உபசார நிகழ்வின் போது, நான் எழுதி வாசித்த கவிதை)

எழுதியவர் : கார்த்தி (27-Aug-15, 9:39 pm)
பார்வை : 405

மேலே