கடவுள் இருக்கின்றான்

கடவுள்
அதோ பார்த்துக் கொண்டிருக்கிறான்
மழலை மொழி மாறாத
மலர் போன்ற சிறுமிகள்
காமப் பேயின் கைகளில் சிக்கி
வல்லுறவில் வதைப் படுவதை...

கடவுள்
அதோ எண்ணிக் கொண்டிருக்கிறான்
போர் வயல்களில்
இரத்த சகதிகளில்
விதைக்கப் பட்டிருக்கும் பிணங்களை..

கடவுள்
அதோ குளிர் காய்கிறான்
ஜாதித் தீயில்
எரியும் உயிர்களின்
வெப்பச் சூட்டில்...

கடவுள்
அதோ ரசித்துக் கொண்டிருக்கிறான்
இடிக்கும் பேருந்தை கவிழும் இரயிலை
வெடிக்கும் விமானத்தை மூழ்கும் கப்பலை

கடவுள்
அதோ ரசித்துக் கொண்டிருக்கிறான்
பசியின் நெருப்பில் எரியும் வயிற்றுக்கு
எச்சி இலைத் தேடும் சிறுவனை
இளமையை இலை போடுபவளை
இல்லையென கையேந்தும் எளியோரை

கடவுள்
அதோ படியளந்துக் கொண்டிருக்கிறான்
நிலம் உழுது நீர் பாய்ச்சி
நெல் விளைவித்தவனுக்கு
நியாயவிலைக் கடைகளில்
புழு+(ங்)+கல் அரிசியை...

கடவுள்
அதோ ரசித்துக் கொண்டிருக்கிறான்
விளைந்த நிலத்தில் வெள்ளங்களை
வறண்ட நிலத்தில் வெடிப்புகளை

கடவுள்
அதோ காவலுக்கு வைத்துள்ளான்
கை கால் கண்ணிழந்தவர்களை
தன் வாயில் படிகட்டுகளில்

கடவுள்
அதோ நாள் குறித்துக் கொண்டிருக்கிறான்
அவனைப் பற்றி குறைப் பாடிய
இவனின் கணக்கு முடிக்க

போங்கடா... கடவுளாவது... ...

எழுதியவர் : மணி அமரன் (31-Aug-15, 8:34 pm)
பார்வை : 340

மேலே