கிரீஸ் மேல்நிலை வல்லரசுகளின் நவீன ஆக்கிரமிப்புப் போர்

ஜனநாயகம் என்ற கருதுகோளை உலகிற்கு வழங்கிய கிரேக்கமும், ஜனநாயகத்தின் தொட்டிலாகச் சித்தரிக்கப்பட்ட அதன் தலைநகர் ஏதென்சும் இன்று ஜனநாயகத்தின் கல்லறையாக மாற்றப்பட்டுள்ளன. அனைத்துலக நிதி நிறுவனங்களின் ஆணைகளுக்கு அடிபணிய மாட்டோம் என்று கிரேக்க நாடே கிளர்ந்தெழுந்து வாக்களித்த போதிலும், அந்த ஜனநாயக முடிவை ஏற்க மறுத்து அந்நாட்டை அடிமையாக்கியுள்ளன ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள். ஏற்கெனவே வேலையின்மை, ஊதியவெட்டுகளால் வாழ்விழந்து நிற்கும் கிரேக்க மக்கள், தற்போது ஏகாதிபத்தியங்கள் விதித்துள்ள நிபந்தனைகளால் ஓட்டாண்டிகளாகி கஞ்சித்தொட்டிகளின் முன்னே உணவுக்காக கையேந்தி நிற்கும் அவலத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கிரீஸ்கிரீஸ் நாடானது இந்தியா போன்ற பின்தங்கிய ஏழை நாடல்ல. ஐரோப்பிய ஏகாதிபத்தியக் கட்டமைப்பிலுள்ள முதலாளித்துவ நாடுதான். இருப்பினும் அந்த நாட்டில் ஏன் இந்த அவலநிலை?

சமூகரீதியான உற்பத்தியும், உற்பத்தியின் பலன்களை தனிநபர் சுவீகரிப்பதுமான முதலாளித்துவக் கட்டமைப்பானது, இந்த அடிப்படையான முரண்பாட்டின் காரணமாக முதலாளித்துவத்தின் நெருக்கடியாக அவ்வப்போது வெடித்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும் நெருக்கடியில் சிக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் முதலாளித்துவக் கட்டமைப்பைத் தூக்கிநிறுத்த, மறுகாலனியாதிக்கம் என்ற புதியதொரு காலனியாதிக்க வடிவத்தைக் கொண்டு உலகை மேலாதிக்கம் செய்து கொள்ளையிடுவதை ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசுகள் செயல்படுத்தி வருகின்றன.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கொள்கை, இம்மறுகாலனியாதிக்கத்தின் பொருளாதாரக் கொள்கையாகப் பின்பற்றப்படுகிறது. உலகளாவிய அளவில் மூலதனத்தை மையப்படுத்தி ஒன்றுகுவிப்பது, உழைப்பை உச்சபட்சமாகச் சுரண்டுவது, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதன் செல்வாக்கு மண்டலங்களைக் கைப்பற்றிக் கொள்வது, மூலதனத்தையும் வளங்களையும் கைப்பற்றிக் கொண்டு மேலாதிக்கம் செலுத்துவது – என்ற திட்டத்தின் மூலம் ஏகாதிபத்திய வல்லரசுகள் இந்நெருக்கடிகளுக்குத் தீர்வு காண முயன்றன. இதற்காக காட் ஒப்பந்தத்தை திணித்து, உலக வங்கி, ஐ.எம்.எப்., உலக வர்த்தகக் கழகம் முதலானவற்றை ஆயுதங்களாகக் கொண்டு உலகமயமாக்கலைப் பிரம்மாண்ட பரிமாணம் கொண்டதாக மாற்றி, புதிய உலகப் பொருளாதார ஒழுங்கமைவைக் கட்டியமைத்தனர். இந்த உலகமயமாக்கத் திட்டத்துக்குப் பொருத்தமாக அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப திட்டத்தை வகுத்தனர். மேலாதிக்க வல்லரசுகளின் இத்திட்டங்களுக்கு ஏற்ப உலக நாடுகளின் அரசியல் – பொருளாதாரங்கள் மறுவார்ப்பு செயப்பட்டன. இவற்றை ஏற்காத நாடுகளின் அரசுகள் கவிழ்க்கப்பட்டு, விசுவாச அரசுகள் ஏகாதிபத்தியவாதிகளால் நிறுவப்பட்டன.

கிரீஸ் நெருக்கடி
கிரீஸ் நாட்டின் வங்கிகளில் பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளாலும், ஓய்வூதியக் குறைப்பினாலும் வாழ வழியின்றி வங்கி வாசலில் கதறியழும் முதியவர் கியார்கஸ்
ஐரோப்பிய கண்டத்திலுள்ள கிரேக்க நாட்டில் அதன் சுயசார்பு பொருளாதாரத்தை வீழ்த்தி, ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இணைத்துக் கொள்வது, யூரோ பொது நாணயமுறையின் கீழ் அந்நாட்டின் பொருளாதாரத்தைப் பிணைத்து, மூலதனத்தைத் திரட்டிக் கொண்டு உலகமயமாக்கலை விரிவுபடுத்துவது; ஐரோப்பிய ஒன்றியத்தில் மேலாதிக்க வல்லரசாக உள்ள ஜெர்மனியின் திட்டத்துக்கு ஏற்ப கீரீசை மறுவார்ப்பு செய்வது, இதனை வளர்ச்சி என்ற பெயரில் நியாயப்படுத்துவது – என்பது ஏகாதிபத்தியவாதிகளின் திட்டமாக இருந்தது. இதற்கான கருவிகளாக “டிராய்கா” எனப்படும் ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய மத்திய வங்கி, ஐ.எம்.எஃப். ஆகிய மும்மூர்த்திகளைக் கொண்டு கிரீசில் மேலாதிக்கம் செலுத்தும் திட்டத்தை ஏகாதிபத்தியவாதிகள் செயல்படுத்தினர். இத்தகைய உலகமயமாக்கம் மூலம் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரங்கள் ஒருங்கிணைந்து வருவதாகவும், இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியமும் கிரேக்க நாடும் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடையும், வேலைவாப்பு பெருகும், வாழ்க்கைத்தரம் உயரும், இதுதான் வளர்ச்சிக்கான பாதை என்றும் கதையளந்தனர்.

இருப்பினும், இந்தப் பாதையில் கடந்த 2001 முதலாகப் பயணப்பட்ட போதிலும் கிரேக்கப் பொருளாதாரம் எந்த வளர்ச்சியையும் சாதிக்க முடியாமல் போனதோடு, கடன் சுமை எனும் தீராத நெருக்கடியால் மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆதிக்க சாதியினரின் ஊரும் தாழ்த்தப்பட்டோரின் சேரியுமாக கிராமங்கள் ஏற்றத்தாழ்வுடன் பிளவுபட்டுள்ளதைப் போலவே, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற வளர்ச்சியடைந்த ஏகாதிபத்தியங்களாகவும், கிரீஸ் போன்ற நாடுகள் பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளாகவும் ஏற்றத்தாழ்வாக ஐரோப்பிய ஒன்றியம் பிளவுபட்டுப் போயுள்ளது. இருப்பினும் தாராளமய – உலகமய மறுசீரமைப்புத் திட்டங்களை முழு வீச்சில் நடைமுறைப் படுத்தாததால்தான் இந்த ஏற்றத்தாழ்வும் நெருக்கடிகளும் ஏற்பட்டதாகவும், அவற்றைத் தீர்க்கப் போவதாகக் கூறிக்கொண்டு மனிதவளத்தையும், இயற்கை வளங்களையும் வரைமுறையின்றி ஏகாதிபத்திய வல்லரசுகள் சூறையாடின.

கிரேக்க மக்கள் ஆர்ப்பாட்டம்
ஏகாதிபத்திய நிதியாதிக்கக் கும்பல்களின் நிபந்தனைகளுக்கு அடங்க மறுத்து கிரேக்க மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம்.
கிரேக்கத்தின் பொருளாதார நெருக்கடிக்கு முதன்மைக் காரணம் அதன் சுயசார்பு பொருளாதாரம் அழிக்கப்பட்டதுதான். ஏற்கெனவே கிரீசின் அரசியல்வாதிகள் நடத்திய வீட்டுமனை ஊழலும், முதலாளிகள் நடத்திய வரி ஏய்ப்பும் அரசின் கஜானாவைக் காலி செய்து விட்டன. தனது பொருளாதாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள சர்வதேச நிதிச் சந்தையில் கடன் பெறுவதைத் தவிர வேறு வழியில்லாத நிலைக்கு கிரீஸ் விழுந்தது. பட்ஜெட் பற்றாக்குறையை மூடிமறைத்து, அந்நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாக வெளியுலகுக்குக் காட்ட கிரீஸ் அரசும் அமெரிக்காவைச் சேர்ந்த கோல்டுமேன் சாக்ஸ் வங்கியும் இணைந்து தில்லுமுல்லுகளில் ஈடுபட்ட விவகாரம் அம்பலமானதும், தனது கடன் பத்திரங்களை விற்கக் கூட முடியாத நிலைக்கு கிரீஸ் தள்ளப்பட்டது. இவற்றின் காரணமாக அந்நாடு மீண்டும் “டிராய்கா” மும்மூர்த்திகளிடம் கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் மேலாதிக்கம் செலுத்தும் ஜெர்மனி, கிரேக்கத்துக்குக் கடனாகக் கொடுத்த தொகையை, அந்நாட்டுக்குப் போர் ஆயுதங்களை விற்று பறித்துக் கொண்டது. கிரேக்கத்துக்கு எவ்வித போர் அச்சுறுத்தலும் இல்லாத போதிலும், உலகிலேயே அதிகமாக ஆயுத இறக்குமதி செயும் நாடுகளில் ஐந்தாவது இடத்துக்கு கிரேக்கம் மாற்றப்பட்டது. கிரேக்கத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வைத்தும், சுற்றுலாத்துறையில் பெருமளவு முதலீடு செய்ய வைத்தும் அந்நியக் கடன்களை ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள் திணித்தன. கடனையும் அதற்கான வட்டியையும் திருப்பிச் செலுத்த முடியாமல் கிரேக்கம் நிதி நெருக்கடியால் தடுமாறிய நிலையில், ஓய்வூதியம் குறைப்பு, அத்தியாவசியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் மறைமுக வரிகள் அதிகரிப்பு, கல்வி-மருத்துவம் உள்ளிட்டு பல்வேறு மக்கள்நலத் திட்டங்களுக்கான மானியம் வெட்டு உள்ளிட்டு பல்வேறு தாக்குதல்களை அந்நாட்டின் உழைக்கும் மக்கள் மீது ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள் மிருகத்தனமாகத் திணித்தன. அதன் பிறகே ஐரோப்பிய ஒன்றியமும் ஐ.எம்.எப்.பும் பற்றாக்குறை நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக கிரீசுக்குக் கடன் கொடுத்தன. அந்தக் கடனில் 85 சதவீதம் பழைய கடன்களுக்கும் அதற்கான வட்டியுமாகப் பறித்துக் கொள்ளப்பட்டதன் விளைவாக, கிரேக்கம் மேலும் அதலபாதாளத்தில் வீழ்ந்தது. ஏகாதிபத்தியங்களின் உலகமயமாக்கத் திட்டத்தின்படி, கடன் பொறியில் சிக்கவைக்கப்பட்ட கிரேக்கம் இவ்வாறுதான் திவாலாக்கப்பட்டது.

தமது வாழ்வுரிமை பறிப்புக்கும் ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கும் எதிராகப் போராடி வந்த கிரேக்க மக்கள், அப்போராட்டத்தின் ஊடாக சிரிசா கட்சியைத் தெரிவு செய்து ஆட்சியில் அமர்த்தினார்கள். முந்தைய கிரேக்க ஆட்சியாளர்கள் வாங்கிய கடனை அசலும் வட்டியுமாக திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், கடந்த ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடையும் கடன் ஒப்பந்தத்தை நீட்டிக்குமாறும், திவாலாகிவிட்ட பொருளாதாரத்தை மீட்க புதிதாக 29.1 பில்லியன் யூரோ டாலர் கடன் தருமாறும் சிரிசா ஆட்சியின் பிரதமர், “டிராய்கா”விடம் கோரினார். கிரேக்க அரசாங்கத்துக்கு மீண்டும் கடன் தருவதற்கு, “டிராய்கா” மிகக் கடுமையான நிபந்தனைகளை விதித்தது. அவற்றை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என்பது குறித்து கிரேக்கத்தின் சிரிசா கூட்டணி அரசு, மக்களின் கருத்துக் கணிப்பைக் கோரும் தேர்தலை அறிவித்தது.

இந்நிபந்தனைகளை ஏற்க மாட்டோம் என்று வாக்களிக்குமாறு சிரிசா கூட்டணிக் கட்சியினரும் பல்வேறு இடதுசாரிகளும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அதற்கெதிராகத் திரண்ட ஏகாதிபத்தியவாதிகளும் வலதுசாரி பிற்போக்குக் கட்சிகளும் அவற்றின் ஊடகங்களும், “வேண்டாம் என்று வாக்களித்தால் நாடு திவாலாகிவிடும்; எல்லோரும் பிச்சைக்காரர்களாகிவிடுவோம்; ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கிரேக்கம் வெளியேற்றப்பட்டுவிட்டால் அதோகதிதான்” என்றெல்லாம் பயபீதியூட்டும் பிரச்சாரத்தை வெறியோடு நடத்தி கிரேக்க மக்களை எச்சரித்தன. ஆனால், அவற்றையெல்லாம் துச்சமாக மதித்து, பட்டினி கிடந்து செத்தாலும் ஏகாதிபத்திய கட்டளைக்கு அடிபணிய மாட்டோம் என்று கடந்த ஜூலை 5-ம் தேதியன்று நடைபெற்ற கருத்துக் கணிப்புக்கான தேர்தலில் “டிராய்கா”வின் நிபந்தனைகளை ஏற்க மறுத்து ஏறத்தாழ 62 சதவீத மக்கள் வாக்களித்து உரத்த குரலில் முழங்கினர்.

இத்தேர்தல் முடிவுகளின் மூலம் “டிராய்கா” மூம்மூர்த்திகளால் திணிக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும், நாட்டின் இறையாண்மையும் ஜனநாயகமும் பாதுகாக்கப்படும் என்றும் கிரேக்க மக்கள் பெரிதும் நம்பினார்கள். ஆனாலும் கிரேக்க மக்களின் ஜனநாயக முடிவையும், கிரேக்க அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட சலுகைகளுக்கான பரிந்துரைகளையும் நிதியாதிக்க கும்பல்கள் கடுகளவும் ஏற்க மறுத்தன. “டிராய்கா”வைப் பொருளாதாரப் பயங்கரவாதிகள் என்று சாடி, யூரோ பொது நாணயத்துக்குப் பதிலாக கிரேக்க நாடு சொந்த நாணயமுறையை உருவாக்க வேண்டுமெனக் கோரிவந்த கிரேக்க நிதியமைச்சர் கட்டாயமாக பதவியிலிருந்து விரட்டப்பட்டார். “கடன் கட்ட முடியவில்லை என்றால் நாட்டை அடமானம் வை” என்று கட்டளையிட்டு, கிரேக்கத்தின் இறையாண்மையையும், கிரேக்க மக்களின் அரசியல் உரிமைகளையும் காலனியாதிக்க முறையில் பச்சையாகவே நசுக்கி ஏகாதிபத்தியவாதிகள் அந்நாட்டை அடிமைப்படுத்தியுள்ளனர்.

“மதிப்புக் கூட்டு வரியை மேலும் உயர்த்த வேண்டும்; அரசுத்துறை ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பதோடு, முதியோர்களின் ஒவூதியத்தையும் குறைக்க வேண்டும்; விமான நிலையங்களும் துறைமுகங்களும் மின்துறையும் தனியாரிடம் தாரை வார்க்கப்பட வேண்டும்; பொருளாதாரத்துறையில் ஐரோப்பிய ஒன்றியம் நியமிக்கும் குழுக்கள் மற்றும் ஐ.எம்.எப்.பின் அதிகாரத்தையும் கண்காணிப்பையும் நிறுவ வேண்டும்; தொழிலாளர் சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்; ஐம்பது பில்லியன் யூரோ டாலர் அளவுக்கான அரசின் சொத்துக்களை பிணைத்தொகையாக ஐரோப்பிய ஏகபோக முதலாளிகளின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும்; கடந்த 6 மாதங்களில் சிரிசா அரசு செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை முற்றாக ரத்து செய்ய வேண்டும்” – என்றெல்லாம் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டு சிரிசா அரசாங்கம் சரணாகதி அடைந்துள்ளது. கிரேக்க மக்களுக்கு இது பேரழிவு மட்டுமின்றி பெருத்த அவமானமுமாகும்.

நிதியாதிக்கக் கும்பல்களுக்கு எதிரான போராட்டத்தில் கிரேக்க மக்கள் வெற்றி பெற்றுவிட்டால், அது பிற நாட்டு உழைக்கும் மக்களிடம் மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துவிடும் என்று ஏகாதிபத்தியவாதிகள் அஞ்சுகின்றனர். ஏனெனில், கிரீசுக்கு அடுத்ததாக ஸ்பெயின், போர்ச்சுகல், அயர்லாந்து, இத்தாலி முதலான நாடுகளில் எப்போது வேண்டுமானாலும் இதேபோல கலகங்கள் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றியக் கூட்டமைப்பிலிருந்து கிரீஸ் விலகினால், அதைத் தொடர்ந்து இதர ஐரோப்பிய நாடுகளும் விலகி ஐரோப்பிய ஒன்றியக் கூட்டமைப்பே கலகலத்துப் போவிடும் என்று அஞ்சும் ஏகாதிபத்தியவாதிகள், ஐரோப்பிய ஒன்றியக் கூட்டமைப்பிலிருந்து கிரீஸ் விலகிச் செல்வதைத் தடுத்து, கிரேக்க மக்களின் அடங்க மறுக்கும் போர்க்குணம் ஐரோப்பிய கண்டத்தில் பரவி விடக் கூடாது என்ற வெறியோடு மிருகத்தனமாக ஒடுக்கியுள்ளனர்.

கிரீஸ் சரணாகதிநிதியாதிக்க பயங்கரவாதிகளை எதிர்த்து கிரேக்க மக்கள் தொடர்ந்து நடத்திவரும் போராட்டங்களும், ஆகப் பெரும்பான்மையான மக்களின் பேராதரவும் சாதகமாக இருந்த போதிலும், சிரிசா கட்சியின் 149 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 32 பேர் இச்சரணாகதி ஒப்பந்தத்தை எதிர்த்த போதிலும், இடதுசாரிகளாகச் சித்தரிக்கப்படும் சிரிசா கட்சியானது, வலதுசாரி கட்சிகளின் ஆதரவோடு இந்த ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றித் துரோகமிழைத்துள்ளது. ஏகாதிபத்தியங்களின் நிதிக் கொடுங்கோன்மைக்கு எதிராக சவடால் அடித்த போதிலும், கிரேக்கத்தில் சுயசார்பான பொருளாதாரத்தைக் கட்டியமைத்துப் போராடுவதற்கான எந்தத் திட்டத்தையும் சிரிசா கொண்டிருக்கவில்லை. முந்தைய அரசுகள் ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடன்கள் எவையும் நாட்டின் உற்பத்திக்காகவோ, மக்களின் நலன்களுக்காகவோ பயன்படுத்தப்படாத முறையற்ற கடன்கள் என்று அம்பலமாகியுள்ள போதிலும், ஆட்சிக்கு வந்த சிரிசா அரசாங்கம் இவற்றைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது. ஐரோப்பிய ஒன்றியக் கூட்டமைப்பில் நீடித்துக் கொண்டே ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள், பேரங்கள் மூலம் சலுகைகளைப் பெற்று இக்கடன் சுமையை நீக்கிவிடலாம் என்று கனவு கண்டது. நிலவுகின்ற கட்டமைப்பில் ஏகாதிபத்தியங்களுடன் சமரசமாகச் சென்று மாற்றுத் தீர்வைக் கண்டுபிடிக்க இப்போலி இடதுசாரிகள் மேற்கொண்ட முயற்சியும் படுதோல்வியில் முடிந்துள்ளது.

கிரீசில் ஏகாதிபத்திய நிதிநிறுவனங்கள் நடத்தியுள்ள தாக்குதலை ஆக்கிரமிப்புப் போருக்கு நிகரானது என்றும், அதிர்ச்சியானது, அநியாயமானது என்றும் புலம்பும் முதலாளித்துவ சித்தாந்தவாதிகளும் பொருளாதார மேதைகளும், ஏகாதிபத்திய வல்லரசுகளால் முன்வைக்கப்பட்ட இந்த ‘வளர்ச்சிப் பாதை’யும் முதலாளித்துவக் கட்டமைப்பும் நெருக்கடியில் சிக்கி தோல்வியடைந்துள்ளதைப் பற்றி வாயே திறப்பதில்லை. ஆனால், கிரேக்கத்தில் முற்றிய இந்த நெருக்கடியானது சங்கிலித்தொடர் போல பல ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரங்களை ஆட்டங்காணச் செய்துள்ளதோடு, 7 சதவீத வளர்ச்சியில் உள்ளதாக காட்டிக் கொள்ளும் சீனாவின் பங்குச் சந்தையையும் உலுக்கி வீழ்ச்சியடையச் செய்துள்ளது. கடந்த 2008-ல் அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நெருக்கடி, உலகப் பொருளாதார பொது நெருக்கடியாக முற்றி அதிலிருந்து மீண்டெழுவதற்கான வாய்ப்பே அறவே இல்லாமல் போய்விட்டது. இந்த உண்மையை, கடந்த ஜூன் 26 அன்று லண்டன் வர்த்தகக் கல்வி மாநாட்டில் உரையாற்றிய இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரான ரகுராம் ராஜன், “1930-களில் நிலவிய பெருமந்தத்தைப் போன்றதொரு நெருக்கடியான நிலைக்கு நாம் வீழ்ந்து கொண்டிருக்கிறோம். இது தொழில்துறையில் முன்னேறிய அல்லது சந்தையில் வளர்ந்து கொண்டிருக்கிற நாடுகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையும் கவ்வி நிற்கும் நிலைமையாகும்”என்று எச்சரிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.

கிரேக்கத்தில், கடந்த 2010-லிருந்தே ஓய்வூதியம் ஏறத்தாழ பாதியளவுக்கு வெட்டப்பட்டு மாதத்துக்கு 700 யூரோ அளவுக்கே ஒரு ஓவூதியதாரருக்குக் கிடைத்து வந்தது. இது அந்நாட்டின் வறுமைக் கோட்டுக்கும் கீழான வருவாயாகும். ஏற்கெனவே வேலையின்மை 30 சதவீதமாக உள்ள நிலையில், குடும்பத்திலுள்ள இளைய தலைமுறையினர் வேலையின்றித் தவிக்கும் போது முதியோர்களின் ஓய்வூதியத்தை நம்பித்தான் கிரேக்கத்தின் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. டிராய்காவின் மறுகாலனியாதிக்கக் கட்டளைப்படி, இப்போது இந்த அற்ப அளவுக்கான ஓய்வூதியத் தொகையும் குறைக்கப்பட்டதால், வங்கிகளின் முன்னே ஓய்வூதியதாரர்களான முதியவர்கள் வாழவழியின்றிக் கதறியழுதுக் கொண்டிருக்கிறார்கள்.

ஏகாதிபத்தியங்களால் முன்வைக்கப்பட்டு கடந்த கால் நூற்றாண்டு காலமாகச் செயல்படுத்தப்பட்ட இந்த ‘வளர்ச்சிப் பாதை’யானது உலகெங்கும் பல நாடுகளைத் தீராத பொருளாதார நெருக்கடியில் சிக்கவைத்துள்ளதோடு, கிரேக்க நாட்டையும் மக்களையும் கையேந்தும் நிலைக்குத் தள்ளி தோல்வியைத் தழுவிவிட்டது என்பதையும், ஏகாதிபத்தியங்களுடன் சமரசமாகச் சென்று தீர்வைத் தேடும் போலி சோசலிசப் பாதையானது துரோகத்தையும் பேரழிவையுமே விளைவிக்கும் என்பதையும் உலகுக்கு உணர்த்திவிட்டு, மாற்றுத் தீர்வாக புரட்சிகர கட்சியின் வருகையையும் சோசலிசப் புரட்சியையும் எதிர்பார்த்து கிரீஸ் மூழ்கிக் கொண்டிருக்கிறது.
_____________________________________

அனைத்துலக நிதி நிறுவனங்களின் ஆணைகளுக்கு அடிபணிய மாட்டோம் என்று கிரேக்க நாடே கிளர்ந்தெழுந்து வாக்களித்த போதிலும்.

கடன் வாங்கும் போது கிளர்ந்தேளுந்தாகளா ? கிரேக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் , தனியாக இருந்தால் கடன் கிடைக்காது என்பதால் , நாங்களும் கடன் குறைவாக வைத்திருக்கும் நாடு தான் என்று போலியாக கணக்கு காட்டி, அந்த ஐய்ரொப்ப்பிய ஒன்றியத்தில் சேர்ந்தார்கள் .

அப்புறம் கட்டுகடங்காமல் கை நீட்டி கடன் வாங்கினார்கள். கடன் வாங்கி கொள்ளை அடிக்கும் போது மக்களுக்கு கொஞ்சம் சலுகைகள் கொடுத்தார்கள் .

மாலை எதற்கு போடப்படுகிறது என்று தெரியாத பலி ஆடுகள் மக்கள் ,

இலவச ரயில் பயணத்தில் திளைத்தார்கள்.
வரி செலுத்தவில்லையே யார் எக்கேடு கேட்டால் என்ன என்று ஒரு கூட்டம் எதை பற்றியும் கவலை படவில்லை.
ஐம்பது வயதிலேயே அரசாங்க அலுவலர்கள் ஓய்வு அறிவித்து , எனபது சதம் ஓய்வு ஊதியம் பெற்று கொண்டார்கள்.

ஜனநாயகம் எனபது சுயனலனாயகம் என்று மாறி போனது . பணம் எப்படி வருகிறது என்பதை பற்றி கவலை இல்லாமல் வாழ்ந்தார்கள். ஒரு நாள் கடன் கொடுத்தவன் பணத்தை கேட்க ஆரம்பித்த பின்னர் , ஜனநாயக மாண்பின் படி(?) எங்களிடம் கொடுத்த கடன் திருப்பி கேட்காதீர்கள் என்று வாக்கெடுப்பு எடுத்து , சொல்வார்களாம் .கடன் கொடுத்தவன் கேட்க கூடாதாம் . அப்படி கேட்பவன் ஜனநாயகத்தை , மக்கள் விருப்பத்தை மதிக்காத எகாதிபதியமாம் .

கம்ம்யூன்சிடுகள் கொடுத்த கடன் திருப்பி கேட்க மாட்டார்கள் என்று தெரிந்து இருந்தால் நாமும் சோவியத் ரஷ்யாவிடம் நிறைய கடன் வாங்கி பின்னர் திருப்பி கொடுக்காமல் இருந்து இருக்கலாம் .ஏமாந்து போய்விட்டோம்

- கருத்து : ராமன்.

எழுதியவர் : பாலன் - புதிய ஜனநாயகம், ஆகஸ (2-Sep-15, 9:24 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 96

சிறந்த கட்டுரைகள்

மேலே