ஒரு கேள்விக்கு இரண்டு பதில்

எனக்கு பதின்மூன்று வயது வரும் வரைக்கும் ஒரு கேள்விக்கு ஒரு பதில்தான் என்று நினைத்திருந்தேன். அல்ஜிப்ரா என்ற புதுக் கணிதப் பாடம் தொடங்கியபோது எங்களுக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர் x க்கு 3, 8 என்று இரண்டு விடைகள் இருக்கலாம் என்று கூறினார்.

இன்னும் சில வருடங்கள் கழித்து கல்லூரியில் படிக்கும்போது வால் நட்சத்திரத்தின் வால் எங்கே இருக்கிறது என்று ஒரு கேள்வி எழுந்தது. வேறு எங்கே இருக்கும், பின்னுக்குத்தான். அப்படி இல்லை. சூரியனை நோக்கிச் செல்லும்போது அது பின்னால் இருக்கும்; சூரியனை தாண்டிப் போகும்போது அது வாலை எடுத்து முன்னால் வைத்துக்கொள்ளும். அப்படிச் சொல்லித் தந்தார்கள்.

இதே மாதிரித்தான் சூரியக் குடும்பத்தில் எது கடைசிக் கிரகம் என்ற கேள்வியும். விடை எல்லோருக்கும் தெரிந்ததுதான். புளூட்டோ. ஆனால் உண்மை வேறு மாதிரியிருந்தது. சில நேரங்களில் நெப்டியூன் தன் எல்லையை மீறி புளூட்டோவையும் தாண்டி சுற்றிவரும். அப்போது நெப்டியூன்தான் கடைசிக் கிரகம்.

சமீபத்தில் பொஸ்டன் போனபோது அங்கே பிலிப்பைன் நாட்டில் இருந்து வந்த ஒருவரைச் சந்தித்தேன். இவருடைய நாடு ஆயிரக்கணக்கான தீவுகளைக் கொண்டது. ஒரு பேச்சுக்காக அவரிடம் உங்கள் நாட்டில் எத்தனை தீவுகள் என்று கேட்டு வைத்தேன்.

மிக எளிமையான கேள்வி. ஆனால் அவர் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டார். யோசித்துவிட்டு இரண்டு பதில்கள் கூறினார். கடல் வற்றிய சமயத்தில் 7108 தீவுகள், கடல் பொங்கும்போது 7100 தீவுகள் என்றார்.

பல வருடங்கள் சென்றபிறகுதான் ஒரு கேள்விக்கு ஒரு பதில் என்ற கணக்கு சரியல்ல என்பது புரிந்தது.

(அ. முத்துலிங்கம் – ’அ. முத்துலிங்கம் கதைகள்’ நூலின் முன்னுரையிலிருந்து)

எழுதியவர் : செல்வமணி - படித்தது (6-Sep-15, 12:56 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 195

மேலே