பெற்றோர் தினம்

மேடையேறி ஆடுவது குழந்தைகள், பாடுவது குழந்தைகள், ரைம்ஸ் சொல்லுவது குழந்தைகள், தொகுத்து வழங்குவதுகூடக் கொஞ்சம் பெரிய குழந்தைகள்தான்.
ஆனால், விழாவுக்கு ஏனோ ‘பெற்றோர் தினம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நங்கைக்குப் புது உற்சாகம் பிறந்துவிடும். தூங்கும் நேரம் தவிர்த்து நாள்முழுக்க விதவிதமான நடன அசைவுகளை நிகழ்த்திக் காட்டியபடி இருப்பாள்.

வெறுமனே ஆடினால்மட்டும் பரவாயில்லை, நாங்கள் கவனிக்காவிட்டால் கண்டபடி திட்டு விழும், கோபத்தில் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டு கண்ணாடிமுன் ஆடுவாள்.

அந்த நேரத்தில் வீட்டுக்கு யாரேனும் விருந்தினர்கள் வந்துவிட்டால் பாவம், செல்ஃபோனில் பாட்டைப் போட்டுவிட்டு முழுசாக ஆடிக் காட்டியபிறகுதான் அவர்களைச் செருப்பைக் கழற்ற அனுமதிப்பாள்.

டிசம்பர் மாத மூன்றாவது சனிக்கிழமையில் அவர்கள் பள்ளிப் பெற்றோர் தினம். அதன் இறுதிப் பகுதியான குழு நடனத்தின் முன்வரிசையில் நங்கைக்கு ஓர் இடம் ஒதுக்கிவிடுவார்கள்.

’சிக்‌ஷா’ என்ற அந்தப் பள்ளியில், இரண்டரை வயதுமுதல் ஐந்து வயதுவரையுள்ள சிறு பிள்ளைகள் படிக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் மேடையேறிப் பாடி, ஆடி, ரைம்ஸ் சொன்னால் எப்படி இருக்கும்?

அந்த விநோதமான சடங்கு நேற்று நடைபெற்றது. குடும்பத்தோடு போய் வந்தோம்.
உண்மையில், மேடையேறுகிற குழந்தைகளைவிட, கீழே நாற்காலியில் அமர்ந்திருந்த நாங்கள்தான் மிகவும் சுவாரஸ்யமானவர்களாக இருந்தோம். ’பெற்றோர் தினம்’ என்பதன் தாத்பர்யம் அப்போதுதான் புரிந்தது.

நூற்றுக்குத் தொண்ணூற்றேழு பெற்றோர் கையில் டிஜிட்டல் கேமெரா, அல்லது, ஹேண்டிகேம். மிச்சமுள்ள 3% பேர் மொபைல் கேமெராவைப் பயன்படுத்தினார்கள். நிகழ்ச்சி நடந்த இரண்டரை மணி நேரமும், ஃப்ளாஷ் வெளிச்சம் ஓயவில்லை
ஒரு வீட்டில் நான்கு பேர் வந்திருந்தால், அவர்கள் நால்வரும் மேடையைத் தனித்தனியே வீடியோ படம் பிடித்தார்கள். எதற்கு?

ஒரு நிகழ்ச்சியை வீடியோ கேமெராவின் வியூஃபைண்டர் வழியே பார்ப்பதற்கும், நேரடிக் கண்களால் பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு என்பது என்னுடைய கருத்து. அந்த ‘முழு’ அனுபவத்தைப் பெறாமல் கேமெராவழியே பார்த்துக்கொண்டிருப்பதற்கு, நிகழ்ச்சி மொத்தத்தையும் பின்னர் டிவியில் போட்டுப் பார்த்துவிடலாமே!
இதைவிடக் காமெடி, இந்த நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யும் ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர் இருக்கிறார்கள். இவர்களுடைய பதிவுகள் பின்னர் விற்பனைக்குக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், பெற்றோருக்குத் தாங்கவில்லை, தங்கள் பிள்ளையின் மேடையேற்றத்தை நுணுக்கமாகப் படம் பிடித்து உடனடியாக யூட்யூப் ஏற்றிவிடத் துடித்தார்கள்.
இன்னொரு வேடிக்கை, நிகழ்ச்சியின்போது வந்த கைதட்டல்களும் சரிசமமாக இல்லை, ஒவ்வொரு பாடலுக்கும் அரங்கின் வெவ்வேறு பகுதிகளில் உற்சாகம், ஊக்கம் பொங்கி வந்தது.

காரணம், ஒவ்வொரு பாட்டுக்கும் ஆடுகிற குழந்தைகள் வெவ்வேறு, அந்தந்தக் குழந்தைகளின் பெற்றோர், தாத்தா, பாட்டிமார்கள்மட்டும் அதி உற்சாகமாகக் கைதட்டுகிறார்கள், பார்த்துப் பார்த்து மகிழ்கிறார்கள்.

நங்கை ஆடியபோது என் மனைவியின் முகத்தைப் பார்க்க செம காமெடியாக இருந்தது, ஒவ்வொரு பாடல் வரியையும் அவள் குறைந்தபட்சம் நூற்றைம்பதுமுறை கேட்டிருக்கிறாள் ஆகவே அதனைப் பாடியபடி சத்தமாகக் கத்திக்கொண்டும், குழந்தையைக் கொஞ்சிக்கொண்டும் இருந்தாள். அப்படி ஒரு சந்தோஷத்தை அவளிடத்தில் நான் வேறு எப்போதும் பார்த்தது கிடையாது.

இப்படியே ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் செய்தால், நிஜமான சுவாரஸ்யம் மேடையிலா? அதற்குக் கீழா?

இன்னொரு விஷயம், மேடையில் ஒவ்வொரு பாடல் ஒலிக்கும்போதும், கீழே குழந்தைகள் சும்மா இருப்பதில்லை, அம்மா அல்லது அப்பா மடியில் இருந்தபடி பாடுகிறார்கள், நாற்காலிகளுக்கு இடையில் உள்ள பகுதியில் சிரமப்பட்டு ஆடுகிறார்கள்.

மேடையில் குழந்தைகள் பாடி, நடித்துக் காண்பித்த பாடல்கள் (பாலிவுட், சாண்டல்வுட் குத்துப் பாட்டுகளைத்தவிர மற்றவை) இனிமையாகவும், அர்த்தமுள்ளவையாகவும் இருந்தன. உதாரணமாக, குழந்தைகள் பல மிருகங்களின் முகமூடிகளைப் அணிந்துகொண்டு வந்து பாடிய ஒரு பாடல்.

‘கடவுளே, நான் ஒரு பட்டாம்பூச்சியாக இருப்பதால், நீ கொடுத்த வண்ணங்களுக்கு நன்றி சொல்கிறேன், நான் ஒரு முயலாக இருந்தால், நீ கொடுத்த வேகத்துக்கு நன்றி சொல்கிறேன், நான் ஒரு …. ஆக இருந்தால், நீ கொடுத்த ….க்கு நன்றி சொல்கிறேன்’ என்று இதே டெம்ப்ளேட்டில் நீளும் பாடல், கடைசியில் இப்படி முடிகிறது:

‘இவையெல்லாம் தாண்டி, நான் நானாக இருக்க நீ ஒரு வாய்ப்புக் கொடுத்தாயே, அதற்காக நான் உனக்கு தினம் தினம் நன்றி சொல்கிறேன்’

இந்தப் பாடலின் அர்த்தம், எத்தனை குழந்தைகளுக்குப் புரியுமோ தெரியவில்லை, பெரியவர்கள் கற்றுக்கொண்டால் நல்லது.
***
என். சொக்கன் …
21 12 2008

எழுதியவர் : என். சொக்கன் … 21 12 2008 (6-Sep-15, 1:18 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : petror thinam
பார்வை : 279

மேலே