கோவை மாவட்டத்திலேயே தெருக்களுக்கு தமிழ் மாதத்தின் பெயரை சூட்டியுள்ள முதல் கிராமம்

பொள்ளாச்சி அருகேயுள்ள கிராமத்தில், தமிழ் மீதுள்ள ஆர்வம் காரணமாக ஊரிலுள்ள அனைத்து தெருக்களுக்கும் தமிழ் மாதத்தின் பெயரை சூட்டியுள்ளனர். கோவில் நிகழ்ச்சிகள் மற்றும் வீட்டு விசேஷங்கள் அனைத்தையும் தமிழ் முறைப்படி கொண்டாடுகின்றனர் கிராம மக்கள்.

நகர்ப்புறம் மட்டுமின்றி கிராமங்களையும் ஆங்கில மோகம் ஆக்கிரமித்து வருகிறது. தமிழ் மொழியை ஊக்குவிக்க அரசு பல சலுகைகள் அளித்தாலும், ஆங்கிலம் மீது இருக்கும் ஈர்ப்பால், கிராமங்களில் கூட தமிழ் வாசகங்களை பார்ப்பது அரிதாகிவிட்டது. ஆனால், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியம் வாழைக்கொம்பு நாகூர் கிராமத்தில் தெருக்களுக்கு தமிழ் மாதத்தின் பெயரை சூட்டி, தமிழ் மீதுள்ள ஆர்வத்தை வெளிகாட்டியுள்ளனர், கிராம மக்கள். ஊராட்சியில், மொத்தம் 12 வீதிகள் உள்ளன. அனைத்திற்கும், சித்திரை வீதி, வைகாசி வீதி என 12 தமிழ் மாதங்களின் பெயர்களை சூட்டியுள்ளனர். இதுதவிர, கிராமத்திலுள்ள கோவில் நிகழ்ச்சிகள், வீட்டு விசேஷங்கள் அனைத்தும் தமிழ் முறைப்படியே கொண்டாடப்படுகிறது.

வாழைக்கொம்பு நாகூர் ஊராட்சி தலைவர் ராமசாமி கூறியதாவது: பல ஆண்டுகளாக ஊராட்சியிலுள்ள வீதிகளுக்கு பெயர் சூட்டப்படவில்லை. இரு ஆண்டுகளுக்கு முன், நிர்மல் புரஸ்கார் விருதுக்கு இந்த ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது. அப்போதுதான், ஊராட்சியிலுள்ள தெருக்களுக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று முடிவு செய்தோம். தெருக்களுக்கு சூட்டப்படும் பெயர் அனைத்து தரப்பு மக்களும் ஏற்று கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. தலைவர்கள் பெயரை சூட்டினால், சாதி பெயரையும் இணைக்க வேண்டியிருக்கும் என்பதால், முழுவதும் தமிழ் பெயராக சூட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி, மொத்தம் 12 வீதிகளாக பிரித்து சித்திரை, வைகாசி என 12 தமிழ் மாதங்களின் பெயர்களை சூட்டினோம். தமிழ் மாத பெயராக சூட்டியதால், அனைத்து தரப்பு மக்களும் ஏற்று கொண்டனர். தமிழ் மீதுள்ள பற்று காரணமாக இதுபோல் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஊராட்சிகளுக்கு சூட்டியுள்ள பெயரை அரசும் அங்கீகரித்துள்ளது. இங்குள்ள கோவில்களில், கும்பாபிஷேகம், ஆண்டு விழா, அர்ச்சனை பூஜை உட்பட அனைத்து விசேஷங்களும் தமிழ் முறைப்படியே கொண்டாடப்படுகிறது.

கோவில்கள் மட்டுமின்றி, வீட்டில் நடக்கும் கல்யாணம், புதுமனை புகுவிழா என அனைத்து நிகழ்ச்சிகளும் தமிழ் முறையை அடிப்படையாக கொண்டே நடக்கிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் மந்திரங்களின் விளக்கத்தை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் என்ற நோக்கத்தில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இளம் தலைமுறையினர் மத்தியில் தமிழ் ஆர்வத்தை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில், முற்றிலும் வட மொழி பெயர்களை தவிர்த்து அனைத்து குழந்தைகளுக்கும் தமிழ் பெயர் சூட்டப்படுகிறது. இவ்வாறு, ராமசாமி கூறினார். கோவை மாவட்டத்திலேயே தெருக்களுக்கு தமிழ் மாதத்தின் பெயரை சூட்டியுள்ள முதல் கிராமமாகிய வாழைக்கொம்பு நாகூரில், தமிழ் மணம் கமழ்கிறது.

வழிபாட்டு தெய்வமாக குதிரை: வாழைக்கொம்பு நாகூரிலுள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், குதிரை வழிபாட்டு தெய்வமாக உள்ளது. புதிதாக எழுப்பப்படும் கோவில்களிலும், குதிரை சிலைகள் கட்டாயம் நிறுவப்படுகிறது. இது குறித்து ஊராட்சி தலைவர் ராமசாமி கூறுகையில், "அம்மனின் முக்கிய வாகனங்களில்,குதிரை உள்ளது. இதனால், அனைத்து அம்மன் கோவில்களிலும், குதிரை வழிபாட்டு தெய்வமாக உள்ளது. இங்குள்ள கோவில்களில், நேர்த்திக்கடன் நிறைவேற்றும் வகையில், குதிரை சிலை வைத்து வழிபடுவது வழக்கம்' என்றார்.

எழுதியவர் : செல்வமணி (8-Sep-15, 12:52 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 379

சிறந்த கட்டுரைகள்

மேலே