மரங்கொத்தியாய் வந்த மாயக் கிளியே

கண்ணறைக்குள் ஒளிருகின்ற
சுடரெழுந்து
இழைந்து சென்று
பின்னிரவுத் தூக்கத்தில்
இரகசியமாய் நுழைந்தேறி
வெளிச்சப் பிரதிபலிப்பில்
படமெடுத்தாடியபடி
மெல்ல வருவாய்.

மலர்களின் கூட்டத்தில்
மஞ்சள் நிலாவாய்
மனம் தழுவும் மாயக் கிளியாய்
எழுமிச்சம்பழமாய்
உருண்டோடி வந்தென்னை
மரங்கொத்தி போல் வந்து
துளைத்தெடுப்பாய்
என் மனசின் ஓரத்தை.

நடுநிசியில்
கூடு விட்டுக் கூடு பாய்ந்து
சிரிப்பின் மணம் விரித்து
என்னைப் பைத்தியமாய் உடல் தளர்த்தி
வறண்ட தொண்டைக்குள் நீர் செலுத்தி
அரைக் கண்ணால் பார்த்தபடி
பறந்து செல்லும் பறவையென
பறந்து சென்றாய்.

நெருங்கிப் பேசவில்லை.
கண்ணாடி மதிலின் கரையில் நான்.
செம்பருத்திக் கனவுகளைப்
பச்சை குத்தி..
என்னை ஒளித்துக் களிக்கும் உன்னை
உக்கிரத் தாண்டவமாடி
களிக்கிறது என் காதல்.

எழுதியவர் : rameshalam (8-Sep-15, 8:02 pm)
பார்வை : 46

மேலே