சும்மா வருமா வேலை - 1

1. அத்தனை பேருக்கும் வேலை நிச்சயம்..!

'நல்ல வேலை'!
பெற்றோர்களின் பெருவிருப்பம்.
இளைஞர்களின் இலட்சியக் கனவு.

'சார்.., எனக்கு தெரிஞ்ச பையன் இருக்கான்.. நல்ல பையன். பி.காம் படிச்சுருக்கான். எதாவது வேலை இருந்தா சொல்லுங்களேன்.. பாவம்.. அவங்க ஃபேமிலி ரொம்ப கஷ்டப்படுது. இவன் எதாவது ஒரு வேலைக்கு போயி சம்பாதிச்சாதான் ரிலீஃபா இருக்கும். டைமிங், சம்பளம்.. எல்லாம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. அட்ஜஸ்ட் பண்ணிப்பான். கொஞ்சம் பாருங்களேன்.. ப்ளீஸ்.'

நமது மொபைல் போனில், கமர்சியல் விசாரிப்புகளுக்கு இணையான எண்ணிக்கையில் வருவன, வேலை வாய்ப்பு கேட்டு வரும், நண்பர்கள், தெரிந்தவர்கள், அண்டை அயலாரின் அழைப்புகள்தாம்.

'என்னடா இது.. ஒரே தொந்தரவாப் போச்சே..' என்று உதறி விட முடியாத கோரிக்கை இது. காரணம், கேட்கிறவரின் குரலில் உள்ள 'ஹெல்ப்லெஸ்னெஸ்', நம் மனதை ஒரு கணம், 'ஏதோ பண்ணும்'.

காதல், கல்யாணம், அழகு, ஆரோக்கியம், பிறருடன் சுமுக உறவு, சமூக அந்தஸ்து... எல்லாவற்றையும், நல்ல வேலை, அதாவது, கை நிறைய சம்பளம்தான் தீர்மானிக்கிறது. நல்ல வேலை இருந்தால், இப்போது சொன்ன அத்தனையும் கிடைத்துவிடுமா..? சொல்வதற்கில்லை. ஆனால், 'வேலை இல்லை' என்றால், இவை அத்தனையும் ஒன்றன்பின் ஒன்றாய், விலகிவிடும் என்பது மட்டும் உறுதி.

'டேய்.., நம்ம பிரபு இல்லை..? அவனை, ஆறு மாசம் கழிச்சு, நேத்து சென்ட்ரல்ல பார்த்தேன்டா.. ஆளு அடையாளமே தெரியலைடா..' என்று ஒருவன் சொல்கிறான். இதற்கு, முற்றிலும் எதிரான இரண்டு அர்த்தங்கள் இருக்க முடியும்.

அந்த 'பிரபு', பிரமாதமான வேலையில் சேர்ந்து, எக்கச்சக்க சம்பளம் வாங்குபவனாக இருந்தால், மேலே சொன்ன வாக்கியத்துக்கு அர்த்தம் - 'ஸ்செமையா இருக்கான்டா..!' ஒரு வேளை, எந்த வேலையும் கிடைக்காமல், 'திரிந்து கொண்டு' இருக்கிறான் என்றால்..? 'கேவலமா இருக்கான்டா. கேட்டா, பதிலே சொல்ல மாட்டேங்கறான்..'
இனம் புரியாத அச்சம்; அசைக்க முடியாத நம்பிக்கை; இரண்டும் கலந்த கலவைதான் வேலை தேடும் படலம்.

முதலில் ஓர் உண்மையை நம் மனதில் அழுத்தமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மிக நிச்சயமாக, அத்தனை பேருக்குமான வேலை இருக்கத்தான் செய்கிறது.
பிறகு ஏன் இப்படி..?

சிலருக்கு மட்டும், படித்துக் கொண்டு இருக்கும்போதே, அல்லது, படித்து முடித்த உடனே, நல்ல வேலை கிடைத்துவிடுகிறது. வேறு பலருக்கோ..? எத்தனை படிகள் ஏறி இறங்கி, யார் யாரையெல்லாமோ பார்த்துப் பார்த்து, முட்டி மோதி, அலைந்து திரிந்து, எவ்வளவுதான் முயற்சித்தாலும், வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகவே இருக்கிறது. இது ஏன்..?

இன்றைய இளைஞர்களில், 100 அல்ல, 1000 அல்ல; லட்சம் பேரைச் சந்தித்து, 'ஏன் வேலை கிடைக்கவில்லை..?' என்று கேட்டுப் பார்ப்போம். அவர்கள் சொல்கிற பதில், அநேகமாக இந்த இரண்டில் ஒன்றாகத்தான் இருக்கும்.

'தெரியல.. நானும் விடாம ட்ரை பணிக்கிட்டுதான் இருக்கேன். கிடைக்க மாடேங்குதே..' அல்லது,

'எங்க சார்..? பணம் குடுக்கணும்; இல்லைனா, ரெகமண்ட் பண்றதுக்கு, யாராவது 'பெரிய ஆளு' இருக்கணும்.. எங்கிட்ட ரெண்டுமே இல்லை..'

இது, முழுக்கவும் விரக்தியின் வெளிப்பாடு. உண்மை நிலவரம் அப்படி அல்ல. அப்படியானால்,

வேலையின்மைக்கு என்னதான் காரணம்..? சரியான அமைப்பு முறை இல்லை.

நம் நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் எத்தனை லட்சக்கணக்கானோர் வேலை தேடி சந்தைக்கு வருகின்றனர்..? அவர்களை, கல்வி, பயிற்சி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் இனம் பிரித்து, தகுதிப் பட்டியல் தயாரித்து, ஒவ்வொருவருக்கும் தகுதி வரிசை எண் தருகிறாற்போல் ஒரு மையம் செயல்படுமானால், எத்தனை உதவிகரமாக இருக்கும்..?

இந்த வரிசை எண் அடிப்படையில்தான் தேர்வு நடைபெறும். முன்-எண்காரர், தனக்கு வேண்டாம் என மறுக்கும் சூழலில், அவருக்கு அடுத்த எண்-காரருக்கு பணி வாய்ப்பு போகும் என்கிற நிலை வந்தால் எப்படி இருக்கும்..? அப்படியே, 100-க்கு 100 இதே போன்ற அமைப்பு முறைக்கு, நடைமுறையில் சாத்தியம் இல்லை.

ஆனால், இது போன்ற ஓர் அமைப்பு செயல்படுவது, பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். ஆனால் இல்லை. குறைந்தபட்சம், எங்கெல்லாம் வேலை இருக்கிறது..? எத்தனை பேர் அதற்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள்..? ஒரே கல்வித் தகுதி, பயிற்சி, பணி அனுபவம் உள்ளவர்களில் இருந்து, எந்த அடிப்படையில் ஒருவரைப் பணிக்குத் தேர்ந்து எடுக்கிறார்கள்..? எங்கு/ யாரிடம் சிறப்புப் பயிற்சி பெறலாம்..? இது போன்ற, வேலை சார்ந்த எந்தத் தகவலையும், கேட்ட மாத்திரத்தில் தருகிற, ஓர் அங்கீகரிக்கப்பட்ட மையம், இருக்கிறதா..?

இந்தியாவில் மட்டும் அல்ல; அநேகமாக அனைத்து நாடுகளிலுமே, தனிநபர்தான், தானாக முயன்று, தனக்கான வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும். இதனால்தான், 'வேலை தேடுவது' பெரும்பாடாக நிலவி வருகிறது.

சமீப காலங்களாக, பணி அமர்த்தும் 'சேவை' நிறுவனங்கள், ('ப்ளேஸ்மென்ட் சர்வீசஸ்') பெருகி வருகின்றன. இவை அனைத்தும், தனியாரால், வணிக நோக்கத்துடன் நடத்தப் படுகிற வியாபார மையங்கள்.

'வணிக நோக்கம்' என்பது, தன்னளவில் தவறானது அல்ல. தாங்கள் வழங்குகிற சேவைக்கு, அவர்கள் கட்டணம் கேட்பது முற்றிலும் நியாயம் ஆனதே. பிரச்னை அதுவல்ல. இவ்வகை நிறுவனங்கள், உண்மையிலேயே வேலை பெற்றுத் தருகிற ஆற்றல் பெற்றவைதானா..? எத்தனை பேருக்கு வேலை வாங்கித் தந்து இருக்கிறார்கள்..? சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சொல்வதைத்தான் நம்ப வேண்டி இருக்கிறது.

இந்த தகவல்கள் எந்த அளவுக்கு நம்பகமானவை..? யார் உறுதிப் படுத்துவார்கள்..? ஆக, எது உண்மையானது, எது போலி என்று பிரித்துப் பார்ப்பது மிகக் கடினம்.

இப்போதைக்கு, யார் வேண்டுமானாலும், 'ப்ளேஸ்மென்ட் சர்வீசஸ்' தொடங்கலாம். பதிவுக் கட்டணம் என்று வாங்கிக் கொள்ளலாம். யாருக்கேனும் வேலை வாங்கித் தந்தால், பெருத்த லாபம். இல்லையா..? பதிவுக் கட்டணம் மூலம் வரும் பணமே போதும் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். இந்த நிலை நீடிக்கக் கூடாது. என்ன செய்யலாம்..?

'ப்ளேஸ்மென்ட்' நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்ந்து பார்த்து, கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வந்து, அதன் அடிப்படையில், அரசாங்கமே தகுந்த அங்கீகாரம் வழங்குமானால், இளைஞர்களுக்கு, காலவிரயம் மற்றும் பண இழப்பில் இருந்து விடுதலை கிடைக்கும்.

போட்டித் தேர்வு முறை மூலம் மட்டுமே, அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்ய முடியும் என்கிற நிலை வந்துவிட்டது. (வரவேற்கத்தகுந்த முன்னேற்றம்தான்.) இதனால், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களின் பங்களிப்பு, குறுகிக் குறுகி, ஏறத்தாழ அறவே இல்லாமலே போய்விட்டது. ஆகவே, இவற்றுக்கு பதிலாக, நன்கு திட்டம் இடப்பட்ட, ஒருங்கிணைந்த அமைப்பு/ மையம் அமைக்கப்படுமானால், மிகவும் உதவிகரமாக இருக்கும். நடக்கும். நம்புவோம்.

இப்போதைக்கு நாம் பார்க்க வேண்டியது - 'பணம் (அதாவது, லஞ்சம்) குடுக்கணும்.. இல்லைன்னா, யாராவது பரிந்துரை ('ரெகமென்டேஷன்') பண்ணனும்.. அப்பதான் வேலை கெடைக்கும்' என்கிற குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மை..?

'தெரிஞ்சவங்க, ஒறவுக்காரங்க.. யாரோட தயவும் இல்லாம, தனியாதான் சென்னைக்கு வந்தேன். ஹாஸ்டல்ல ரூம் எடுத்துத் தங்கித்தான் வேலை தேடினேன். சின்னச் சின்ன வேலையா பார்த்து, இப்போ எக்சிக்யூடிவ் லெவலுக்கு வந்துருக்கேன்..' என்று சொல்கிற இளம் பெண்கள், ஏராளம். இவர்களில் யாரையேனும் சந்தித்து,

'வேலை தேடினது கஷ்டமா இல்லையா..?' என்று கேட்டால், பதிலுக்கு அவர் நம்மிடம் விடுக்கும் கேள்வி இதுதான்:

'சும்மா வருமா வேலை..?'

(தொடரும்)

எழுதியவர் : படித்ததில் பிடித்தது - விக (10-Sep-15, 10:22 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 265

சிறந்த கட்டுரைகள்

மேலே