கடனாளிகளை உருவாக்கும் சமூகம் கடன் வாங்கிப் படிக்கும் அளவு இஞ்சினீரிங் ஒர்த் இல்லை

காரில் லிப்ட் கேட்டு ஏறிய இளைஞன் இஞ்சினீரிங் முடித்து ஒன்றரை வருடங்களே ஆகிறது. இரண்டு லட்சம் ரூபாய் கல்விக் கடனை திருப்பச் சொல்லி வங்கி வீட்டுக்கு ஆளனுப்பி, கல்லூரி நிர்வாகிகளுக்குத் தொலைபேசியில் மிரட்டி தொல்லை கொடுக்கிறதாம். ஊரில் இருக்கும் பெற்றோர் இதனால் மன உளைச்சலில். இப்போது இருக்கும் வேலையை விட்டு அதிக சம்பளத்துக்காக புதிய வேலை தேடுகிறாராம். என்னுடைய பத்து நிமிட அறிவுரை இதுதான்:

- நானறிந்த வரை கல்லூரி முடிந்த நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் கல்விக்கடனை கட்டச்சொல்லி வங்கிகள் கேட்கமுடியும். விசாரியுங்கள்.
- ஒன்றரை வருட அனுபவத்துக்கு என்ன சம்பளமோ அதுதான் கிடைக்கும். ஏதாவது ஓரிரு நிறுவனங்களில் நிறையக் கொடுக்கலாம். ஆனால் அதையே விதியாக எடுத்துக் கொண்டு ஆசைப்பட வேண்டாம்.
- முதல் மூன்று வருடங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய காலம். அங்கே இங்கே தாவுவது சிறிதளவு உதவினாலும் பின்னால் அதுவே ஒரு கரும்புள்ளியாகி விடும்.
- புதிய வேலை உறுதியாகாமல் எந்த வேலையையும் விடாதீர்கள்.
- வங்கிகளின் பெயரால் விரட்டுபவர்கள் தனியார்களே. அவர்களுக்கு சட்ட ரீதியாக எந்த அதிகாரமும் இல்லை. யாராவது வந்தாலோ பேசினாலோ திருப்பி அனுப்புங்கள். மீறி தொல்லை செய்தால் காவல்துறையில் புகார் அளிப்பதாக சொல்லுங்கள்
- நியாயத்துக்கும் அவமானத்துக்கும் பயந்தவர்களே இவர்களின் இலக்கு. அப்படியானவர்களின் பின்னால் கமிஷனுக்காக விரட்டும் கூட்டங்கள் அதிகரித்தபடி இருக்கின்றன.
- அதையும் மீறி தொல்லை தொடர்ந்தால் ஒரு வழக்கறிஞரை நாடுங்கள். இறங்கி வந்து பேரம் பேசுவார்கள். நான் கட்டுகிறேன் ஆனால் அவகாசம் வேண்டும் என்று கேளுங்கள்.

இதற்குள் இறங்க வேண்டிய இடம் வந்ததால் இறங்கிக் கொண்டார் அவர். வேலைக்குச் செல்லும் முன்பாகவே கடனாளிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இத்தனை இளம் வயதில் அவர் முகத்தில் கவலை படர்ந்திருக்கிறது. இஞ்சினீரிங் படிக்காமல் வேறு தொழிலில் ஈடு பட்டிருந்தால் இந்த ஆறு வருடங்களில் இப்போதைய அளவை விட அதிகம் சம்பாதிக்கும் நிலைக்கு வந்திருப்பாரோ. குறைந்த பட்சம் கடனின்றி வாழ்ந்திருப்பாரோ? கடன் வாங்கிப் படிக்கும் அளவு இஞ்சினீரிங் ஒர்த் இல்லை என்றே தோன்றுகிறது.

எழுதியவர் : செல்வமணி - படித்தது பகிர்ந (12-Sep-15, 9:54 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 191

சிறந்த கட்டுரைகள்

மேலே