இந்தியா எனும் கனவுற்பனை

முன்குறிப்புகள்:

Nandan Nilekani எழுதிய “Imagining India” நூலுக்கு ஒரு ’மிக எளிமைப்படுத்தப்பட்ட’ அறிமுகம் இது, விமர்சனம் அல்ல (Introduction, Not A Review), குமுதம் 31 12 2008 இதழில் இதன் சுருக்கமான வடிவம் வெளியானது
இந்தப் புத்தகம் பல நூறு பக்கங்கள் கொண்டது, அவற்றை 4 குமுதம் பக்கங்களுக்குள் அடுக்குவதற்காக, மிகவும் மேலோட்டமாகமட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆழம் தேடி உள்ளே நுழைவோர் ஏமாறுவீர்கள் (இது அநேகமாக என் எழுத்துகள் அனைத்திற்கும் பொருந்தும்)
சரி, அப்படியென்றால் இந்தப் புத்தகத்தை வாங்கலாமா, வேண்டாமா? நீங்கள் வெறித்தனமான நந்தன் நிலேகனி பிரியர் என்றால் வாங்கலாம், இல்லையென்றால், இவ்வளவு விலை கொடுக்காமல், மலிவு எடிஷன் வரும்வரை காத்திருக்கலாம், தப்பில்லை
இந்த அறிமுகக் கட்டுரை பிஸினஸ் பார்வையாளர்கள், பெரிய சிந்தனையாளர்களுக்காக அன்றி, பொது வாசகர்களுக்காக எழுதப்பட்டது. ஆகவே, சில Very Basic சமாசாரங்களைச் சொல்லாமல் தவிர்க்கமுடியாது, உதாரணமாக, முதல் சில பத்திகள்
பெங்களூரில் இந்நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது, அதுபற்றிய என் முந்தைய பதிவு இங்கே, விழாவில் எடுத்த புகைப்படங்கள் அங்கே, புத்தகம் வாங்க விரும்பினால் அது வேறெங்கேயோ
இனி, கட்டுரை …

*****************

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர், அதுவும் நடுத்தர வர்க்கத்தில் பிறந்து, ஒவ்வொரு பைசாவாகச் சேர்த்து முன்னுக்கு வந்தவர், மிகப் பெரிய தொழில் நிறுவனம் ஒன்றின் தலைவர், பெரிய அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், பிஸினஸ் பிரபலங்கள் எல்லோராலும் மதிக்கப்படுகிறவர், அவர் ஒரு புத்தகம் எழுதுகிறார் என்றால் எதைப்பற்றி எழுதுவார்?

அவர் தான் முன்னுக்கு வந்த கதையைச் சுயசரிதையாக எழுதலாம், அதுவும் ‘நான் ஜெயித்த கதை’ என்று பெயர் வைத்தால் கன்னாபின்னாவென்று விற்கும்.

ஆனால், நந்தன் நிலேகனி கொஞ்சம் வித்தியாசம், அவர் தன்னைப்பற்றியோ, தனது நிறுவனத்தைப்பற்றியோ புத்தகம் எழுதவில்லை, இந்தியாவைப்பற்றி எழுதியிருக்கிறார்.

நந்தன் நிலேகனி தெரியும்தானே? இந்தியாவின் பிரம்மாண்டமான வெற்றி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் தலைவர், உலக அரங்கில் நமது பிஸினஸ் அடையாளமாகத் திகழ்கிற ‘பக்கா’ ஜென்டில்மேன்.

சமீபத்தில் அவர் எழுதி வெளிவந்திருக்கும் ‘Imagining India’ (’Penguin Allen Lane’ வெளியீடு, விலை ரூ 699/-) புத்தகம், பரபரப்பாக விற்றுத் தீர்ந்துகொண்டிருக்கிறது. அளவிலும் விஷயத்திலும் மிகக் கனமான இந்நூலில் இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான பதினெட்டு சிந்தனைகள், யோசனைகளை விவரித்திருக்கிறார் நந்தன்.

‘Imagining India’ புத்தகத்தின் முக்கியமான சிறப்பு அம்சம், நூலாசிரியர் நந்தன் நிலேகனி எங்கோ உயரத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டு நமக்கெல்லாம் அறிவுரை சொல்வதில்லை, நம் தோளில் கையைப் போட்டுப் பேசுவதுபோன்ற தோழமையான தொனியில் விஷயங்களை விவரிக்கிறார்.

‘நான் என்னுடைய கருத்துகளை யார் மீதும் திணிக்க விரும்பவில்லை’ என்கிறார் நந்தன் நிலேகனி, ‘ஆனால், இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களைப்பற்றி இந்தியர்கள் பரவலாக விவாதிக்கவேண்டும், ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும், அப்படிப்பட்ட விவாதங்களைக் கிளறிவிடுவதுதான் இந்த நூலின் நோக்கம்’

இந்தியாவின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கான தனது யோசனைகளை, நந்தன் நிலேகனி நான்கு விதமாகப் பிரிக்கிறார்:

இதுவரை நாம் பின்பற்றிய, பின்பற்றிக்கொண்டிருக்கிற விஷயங்கள்
நாம் ஏற்றுக்கொள்கிற, ஆனால் இன்னும் செயல்படுத்தாத விஷயங்கள்
நாம் இன்னும் ஒரு முடிவுக்கு வராத, சண்டை போட்டுக்கொண்டிருக்கிற விஷயங்கள்
இனிமேல் நாம் யோசிக்கவேண்டிய விஷயங்கள்

முதல் வகை, அதாவது, இதுவரை நாம் பின்பற்றிய, பின்பற்றிக்கொண்டிருக்கிற விஷயங்கள் மிக முக்கியமானவை. இவை இல்லாவிட்டால், இந்தியா இத்தனை தூரம் முன்னேறியிருக்கமுடியாது, பத்தோடு பதினொன்றாக எப்போதோ அழிந்துபோயிருக்கும். இந்த வகையில் நந்தன் நிலேகனி குறிப்பிடும் ஆறு சிந்தனைகள்:

1. மக்களைச் சுமையாக நினைக்காமல், அவர்களையே நமது சொத்துகளாக எண்ணுவது. மனித வளத்தைப் பயன்படுத்தி இந்தியாவை முன்னேற்றுவது.

2. ஒருகாலத்தில், சொந்தமாக பிஸினஸ் தொடங்கி, முன்னேறுகிறவர்களைப் பார்த்தால், நம் மக்களுக்கு வெறுப்பாக இருக்கும், பொறாமை வரும், ஆனால் இப்போது ஒரு நாராயணமூர்த்தி, ஒரு லஷ்மி மிட்டல், ஒரு சுனில் மிட்டலைக் கண்டு நாம் கோபப்படுவதில்லை, அவர்களை லட்சிய பிம்பங்களாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டோம், தொழில்முனைவோர்களை மதிக்க ஆரம்பித்துவிட்டோம்.

3. இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைத்தபோது, ஆங்கிலம் வெளிநாட்டு மொழியாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது, அதுதான் நாம் உலக அரங்கில் முன்னேறுவதற்கான ஒரு கருவி என்பதை எல்லோரும் புரிந்துகொண்டுவிட்டார்கள், மிக எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்கூட ஆங்கிலம் படிக்க விரும்புகிறார்கள்.

4. முன்பெல்லாம், இந்தியர்களுக்குக் கம்ப்யூட்டர், இயந்திரங்களின்மீது வெறுப்பு இருக்கும், அவற்றை ஆள்குறைப்புக் கருவிகளாக நினைத்துக் கோபப்பட்டோம். ஆனால் இப்போது, தொழில்நுட்பம் நம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவிக் கிடக்கிறது, திறந்த மனத்தோடு அதனை ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டோம்.

5. நேற்றுவரை, ’உலகமயமாக்கல்’ என்பது கெட்ட வார்த்தை. ஆனால் இப்போது, நம் ஊரில் உள்ள சின்னச் சின்னத் தொழில்முனைவோர்கூடச் சர்வதேசச் சந்தையைப்பற்றிச் சிந்திக்கிறார்கள், அதனைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

6. ஒருவர் ராஜா, மற்றவர்கள் கூஜா என்பது அந்தக் காலப் பழக்கம். ஆனால் இப்போது, மக்கள் அனைவரும் தங்களால் ஒரு மாற்றத்தை உருவாக்கமுடியும் என்று நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அதிகாரம் பரவலாகியிருக்கிறது, நிஜமாகவே எல்லோரும் இந்நாட்டு மன்னர்களாகிக்கொண்டிருக்கிறோம்.

இரண்டாவது வகை, நாம் முழுமையாக ஏற்றுக்கொள்கிற, ஆனால் இன்னும் செயல்படுத்தாத விஷயங்கள். இந்தத் தலைப்பில் மொத்தம் நான்கு சிந்தனைகளைக் குறிப்பிடுகிறார் நந்தன் நிலேகனி:

7. எல்லோருக்கும் அடிப்படைக் கல்வி வழங்கவேண்டும் என்பதில் நமக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் இன்னும் நம் நாட்டில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களின் சதவிகிதம் கணிசமானது. இதில் நாம் செல்லவேண்டிய தூரம் நிறைய.

8. நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் என நமது நாட்டின் உள்கட்டுமானம் போதுமான அளவு வளர்ச்சி அடையவில்லை. இந்தத் தடையைச் சரி செய்யும்வரை, நமது தொழில் வளர்ச்சி, சமூக வளர்ச்சி இரண்டுமே வேகம் குறையும்.

9. இந்தியாவின் இதயம், இன்னும் கிராமங்களில்தான் இருக்கிறது. ஆனால் அதேசமயம், விரைவான வளர்ச்சிக்கு நகரங்களின் முக்கியத்துவம் அதிகரிக்கப்படவேண்டும், அதேசமயம், அதற்காகக் கிராமங்களைக் காவு கொடுத்துவிடக் கூடாது.

10. தொழில்துறையில் உள்ளவர்கள், நம் நாட்டை இன்னும் தனித்தனி மாவட்டங்கள், மாநிலங்களாகதான் பார்க்கவேண்டியிருக்கிறது, அதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லாமல், இந்தியாவை ஒரே சந்தையாகப் பார்க்க ஆரம்பித்தால், நமது தொழில் வளர்ச்சி இன்னும் விரைவாகும்.

மூன்றாவது வகை, நாம் இன்னும் ஒரு முடிவுக்கு வராமல் சண்டை போட்டுக்கொண்டிருக்கிற, விவாதம் செய்துகொண்டிருக்கிற விஷயங்கள். இதில் நந்தன் நிலேகனி மூன்று அம்சங்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்:

11. இடதுசாரியா, வலதுசாரியா? சோஷலிஸக் கொள்கையா? அல்லது முதலாளித்துவக் கொள்கையா? அல்லது, இந்த இரண்டுக்கும் நடுவே நமக்கென்று ஒரு பாதை போட்டுக்கொண்டு, இரண்டிலும் உள்ள நல்ல விஷயங்களைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறமுடியுமா?

12. நமது தொழிலாளர் நலச் சட்டங்கள் போதுமானவையா? அவற்றின்மூலம் நிஜமாகவே உழைப்பவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றனவா? இந்த விஷயத்தில் நாம் இன்னும் என்னென்ன செய்யவேண்டியிருக்கிறது?

13. அடிப்படைக் கல்வியே இன்னும் முழுமையாகச் செயல்படுத்தப்படாத நம் தேசத்தில், உயர்கல்வி எப்படி இருக்கிறது? அரசாங்கம்மட்டும் உயர்கல்வியை வழங்கினால், அதன்மூலம் நமது மாணவர்கள் உலகத் தரத்திலான பாடத் திட்டங்கள், பயிற்சிமுறைகளைப் பெறமுடியுமா? இதில் தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டு அமைப்புகளின் பங்களிப்பைக் கொண்டுவருவது எப்படி?

கடைசியாக, இந்தியா இப்போது அதிவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு நாம் கொடுக்கப்போகும் விலை என்ன? அதற்காக நாம் முன்கூட்டியே சிந்திக்கவேண்டிய விஷயங்கள் எவை? இந்த வகையில் ஐந்து விஷயங்களை விவரிக்கிறா நந்தன் நிலேகனி:

14. சமூக வளர்ச்சிக்கு, அதன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கவேண்டும், அப்போதுதான், இன்னும் அதிக வசதிகள் மக்களுக்குக் கிடைக்கத் தொடங்கும்.

15. ஒருகாலத்தில் காலரா, வயிற்றுப்போக்கு, போலியோ போன்றவற்றை நினைத்து பயந்துகொண்டிருந்தோம். ஆனால் இப்போது, டயாபடிஸ், பிளட் பிரஷர், ஹார்ட் அட்டாக் என்று புதிய வில்லன்கள் முளைத்திருக்கிறார்கள், வருங்காலத்தில் நம் மக்களின் உடல் நலத்தை நாம் எப்படி உறுதி செய்துகொள்ளமுடியும்? அடிப்படை மருத்துவ வசதிகள் எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்வது எப்படி?

16. இப்போதைக்கு, நம் ஊரில் பென்ஷன் என்பது அரசாங்கத்தில் வேலை செய்கிறவர்களுக்குமட்டும்தான். ஆனால் இன்னும் இருபது, முப்பது வருடங்கள் கழித்து, தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஏராளமானோர் ஓய்வு பெறுவார்கள், அவர்களுடைய எதிர்காலத்துக்கு என்ன வழி? இந்த விஷயத்தில் அரசாங்கத்தின் பொறுப்பு என்ன?

17. நமது தொழில் வளர்ச்சியால், இயற்கை வளத்தை இழந்துவிடக்கூடாது. சுற்றுச்சூழலைப் பாதிக்காதபடி நமது முன்னேற்றம் இருக்கவேண்டும், அதற்கு என்ன வழி?

18. உலக அளவில் நிலக்கரி, பெட்ரோல், டீசல் என எல்லாம் குறைந்துகொண்டு வருகிறது. இந்தியாவின் எதிர்காலம், இவற்றை நம்பி இருக்கமுடியாது, நாம் நமது தொழில்துறைக்கான ஆற்றலைப் பெறுவதற்கு வேறு என்ன வழி? சூரிய மின்சாரமா? பேட்டரியா? ’பயோ’ எரிபொருள்களா? இன்னும் என்னென்ன வழிகள்? அதை நாம் இப்போதே யோசிக்கத் தொடங்கவேண்டும், ஆராய்ச்சிகளை முடுக்கிவிடவேண்டும்.

பதினெட்டு சிந்தனைகளின்மூலம், பல நூறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார் நந்தன் நிலேகனி. உடனடியாக இவைபற்றி யோசிக்க, விவாதிக்கத் தொடங்கினால் நமக்கும் நல்லது, நாளைய இந்தியாவுக்கும் நல்லது!

***

என். சொக்கன் …
02 01 2009

எழுதியவர் : செல்வமணி - (வலையில் படித்த (12-Sep-15, 7:51 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 406

சிறந்த கட்டுரைகள்

மேலே