பார்வையிடல்

கிட்டத்தட்ட விளம்பர நோட்டீஸ்போல்தான் இருந்தது அந்தக் கடிதம்:

அன்புடையீர்,

உங்கள் மகள் எப்படிப் படிக்கிறாள் என்று நீங்களே நேரில் பார்வையிட்டுத் தெரிந்துகொள்ள விருப்பமா? வரும் புதன்கிழமை மதியம் பன்னிரண்டே கால் மணியளவில் எங்கள் பள்ளிக்கு வருமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.

இப்படிக்கு,

பள்ளி நிர்வாகத்தினர்

நங்கையின் பள்ளியில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இப்படிக் கடிதம் அனுப்புவார்கள். ஒரு குறிப்பிட்ட சுபயோக சுபதினத்தில், காலை பத்தே கால், பதினொன்றே கால், பன்னிரண்டே கால் என்று மூன்று ‘பேட்ச்’களில் பெற்றோர் தங்களுடைய குழந்தைகள் படிக்கும் லட்சணத்தை நேரடியாகப் பார்வையிடலாம், கல்விமுறைபற்றிய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம்.

அதென்னவோ, ஒவ்வொருமுறையும் எனக்கென்று மதியம் பன்னிரண்டே கால் மணிக் கோட்டாதான் வாய்க்கும். அலுவலக நேரத்தில் வெளியே போக அனுமதி பெற்று, வேகாத வெய்யிலில் லொங்கடா லொங்கடா என்று ஓடவேண்டும்.

ஆயிரம்தான் இருந்தாலும், மகள் படிப்பு விஷயம், இதற்கெல்லாம் சலித்துக்கொண்டால் நான் ஓர் உத்தமப் பெற்றோன் ஆகும் வாய்ப்பை இழந்துவிடுவேனில்லையா? உச்சுக்கொட்டாமல் நேற்று மதியம் அவளுடைய பள்ளியைத் தேடி நடந்தேன்.

உச்சி வெய்யில் நேரத்தில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் தார்ச்சாலையில் வறுபடவேண்டும் என்று எனக்கொன்றும் வேண்டுதல் இல்லை. ஆனால் எ(பெ)ங்களூர் ஆட்டோ டிரைவர்களுக்கு இதுபோன்ற ‘குறைந்த’ தூரங்கள் அலர்ஜி, கெஞ்சிக் கேட்டால்கூட யாரும் வரமாட்டார்கள், அவர்களிடம் சண்டை போட்டு வாய் வலிப்பதற்கு, கால் வலி பரவாயில்லை என்று நடந்துவிடலாம்.

தவிர, உடற்பயிற்சிக்கென்று அதிக நேரம் ஒதுக்கமுடியாத என்னைப்போன்ற சோம்பேறிகளுக்கு, நடை பழக்கம் நல்லது. லேசாக வியர்க்கும்படி நடையை எட்டிப் போட்டால் இன்னும் நல்லது.

ஆனால், நேற்று எனக்கு வியர்த்தது நடையால் அல்ல, வெயிலால். தொப்பலாக நனைந்த நிலையில்தான் நங்கையின் பள்ளிக்குச் சென்று சேர்ந்தேன்.

பள்ளி வாசலில் ஒரு சிறு மண் குவியல், குழந்தைகள் விளையாடுவதற்கான இடம். அதற்குப் பக்கத்தில் பிளாஸ்டிக் ட்ரே வைத்துப் பிள்ளைகள் தவறவிட்ட கர்ச்சீப், பென்சில், இன்னபிற அம்சங்களை அடுக்கிவைத்திருந்தார்கள்.

அழகிய சிறு மரக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தால், நிர்வாக அதிகாரி கை குலுக்கி வரவேற்றார். என்னைப்போலவே இன்னும் சிலர் அங்கே காத்திருந்தார்கள். ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கிலத்தில் எல்லோரையும் குசலம் விசாரித்த அவரைச் சமாளித்து உள்ளே நடந்தால், தரையில் பாய் விரித்து எட்டுக் குழந்தைகள் அமர்ந்திருந்தார்கள்.

பாய் இல்லை, பாய்கள்.

ஒவ்வொருவருக்கும் குட்டிக் குட்டியான மிதியடி சைஸ் பாய். அதை அவர்களே விரித்து, அதன்மீது அமர்ந்து வேலைகளைச் செய்யவேண்டும், முடித்ததும், ஒழுங்காகச் சுருட்டி எடுத்துவைத்துவிடவேண்டும்.

நங்கை அந்த அறையின் மூலையில் இருந்தாள், என்னைப் பார்த்ததும் உற்சாகமாக ஓடிவந்து, ‘ஏன் லேட்?’ என்றாள்.

அவளுக்கு மணி பார்க்கத் தெரியாது. ஆனால் இன்று நான் பள்ளிக்கு வருவேன் என்று ஏற்கெனவே அவள் அம்மாவும், ஆசிரியர்களும் சொல்லிவைத்திருந்ததால், காலையிலிருந்து எதிர்பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறாள்போல. ஆகவே, அவளைப் பொறுத்தவரை நான் வந்தது தாமதம்தான். இந்தமுறைமட்டுமல்ல, ஒவ்வொருமுறையும்.

கடந்த ஒன்றிரண்டு ‘பார்வையிடல்’களின்போது நான் கவனித்த இன்னொரு விஷயம், நங்கை பள்ளியில் பேசுவதற்கும், வீட்டில் பேசுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது.

வீட்டில், அவள் ஒரு நவரச நாடகம். சாதாரணமாகத் ‘தண்ணி வேணும்’ என்பதைக்கூட உரத்த குரலில் கத்தி, அதிகாரம் செய்து வாங்கிதான் பழக்கம். அரை நிமிடம் தாமதமானாலும், ‘தண்ணி கேட்டேனே, மறந்துட்டியா?’ என்று அதட்டுவாள்.

இதற்கு நேரெதிராக, பள்ளியில் அவள் மிக மிக அமைதியானவளாகத் தெரிந்தாள். ’நங்கை ரொம்ப மெதுவாப் பேசறாங்க, எங்களைப் பார்த்துப் பேசினாலும், தனக்குள்ளேயே வார்த்தையை முழுங்கிடறாங்க, பல சந்தர்ப்பங்கள்ல அவங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு எங்களுக்கே புரியறதில்லை’ என்று அவளுடைய ஆசிரியர்களும் சொல்லியிருக்கிறார்கள், குறிப்பு எழுதி அனுப்பியிருக்கிறார்கள், அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

நங்கைமட்டுமில்லை, அவளுடைய பள்ளியில் பல குழந்தைகள், இப்படிதான் மெதுவாகப் பேசுகிறார்கள், பணிவாக நடந்துகொள்கிறார்கள். பின்னர் இதே பிள்ளைகள் (என் மகள்தான் இந்த கலாட்டாக் கூட்டத்தின் ’மினி’ தலைவி) பள்ளி வளாகத்தைவிட்டு வெளியே வந்ததும் வேனில் குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போட்டபடி டிரைவரை வம்புக்கிழுப்பதையும் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

இந்த வித்தியாசத்துக்கு என்ன காரணம்? எனக்கு நிச்சயமாகப் புரியவில்லை.

நங்கையின் பள்ளியில் மாணவர்களை அடிக்கிற, அதட்டுகிற வழக்கம் கிடையாது. ஏதேனும் தவறு செய்தால் அழுத்தமாகக் கண்டிப்பார்கள், மீண்டும் செய்தால், மூலையில் உட்காரவைப்பார்கள். அவ்வளவுதான். வேறு கடுமையான தண்டனைகள், மிரட்டுதல் இல்லை.

அப்படியானால், நாலரை வயதுக் குழந்தைக்குப் பெற்றோரிடம் அதிகாரம் செய்யலாம், ஆனால் ஆசிரியர்களிடம் பணிந்து(கொஞ்சம் ஜனரஞ்சகமாகச் சொல்லவேண்டுமென்றால், ‘பம்மி’)ப் போகவேண்டும், குறும்புகளைச் சுருட்டி ஓரமாக வைக்கவேண்டும் என்று எப்படித் தோன்றுகிறது. அடி, அதட்டல், மிரட்டல் இல்லாமல் அவர்கள் இதை எப்படிச் சாதிக்கிறார்கள்?

அன்பாலா? ம்ஹூம், என்னால் நம்பமுடியவில்லை :)

நான் வளர்ந்த சூழல் அப்படி. எங்கள் முனிசிபாலிட்டி ஸ்கூலில் பிரம்பு இல்லாத ஆசிரியர்களே கிடையாது. முரட்டு அடி, குட்டு, கிள்ளு, முட்டிபோடுதல் இன்னபிற தண்டனைகளால்மட்டுமே வழிக்குக் கொண்டுவரப்பட்ட ’தடிமாட்டுத் தாண்டவராயன்’கள் நாங்கள், எங்களிடம் அன்பெல்லாம் நிச்சயமாகச் சரிப்படாது என்பது அந்த ஆசிரியர்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும்.

இதனால், எங்களுக்கு ஆசிரியர்கள்மீது பக்தி வந்ததோ இல்லையோ, பயம் வந்தது. அந்த பயத்தால், மரியாதை(?)யால்மட்டும்தான் ஒருசிலராவது உருப்படியாகப் படித்தார்கள்.

ஆனால், நாங்கள் படித்த பள்ளிகளில் எந்தப் பெற்றோரையும் இப்படிப் ‘பார்வையிட’க் கூப்பிட்டு சேரில் உட்காரவைத்துக் குளிர்பானம் கொடுத்து உபசரிக்கிற வழக்கம் கிடையாது. ஒருவேளை அப்படிச் சில அப்பாக்கள், அம்மாக்கள் வந்திருந்தாலும்கூட, எங்களுடைய வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறிவிடுமோ என்கிற பயத்தில் நாங்கள் வகுப்பிலிருந்து தலைமறைவாகியிருப்போம்.

நிற்க. வழக்கம்போல் எங்கோ தொடங்கி எங்கேயோ போய்விட்டேன். மறுபடியும் உச்சி வெயிலில் நங்கையின் வகுப்பறைக்குத் திரும்பவேண்டும்.

நான் போனபோது நங்கை சில படங்களுக்குப் பொருத்தமான எழுத்துகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாள். அதாவது, அட்டையில் ஒரு மேஜையின் படம் இருக்கும், அதைப் பார்த்து பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்ட t-a-b-l-e எனும் எழுத்துகளை ஒவ்வொன்றாக அடுக்கிவைக்கவேண்டும்.

அதை முடித்ததும், அடுத்த படம், கப்பல், s-h-i-p என்று அடுக்கவேண்டும்.

பிரச்னை என்னவென்றால், இந்த பிளாஸ்டிக் எழுத்துகள் எல்லாம் சற்றுத் தொலைவில் இருந்த இன்னோர் அறையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு முறையும் அங்கே சென்று ஒவ்வோர் எழுத்தாகக் கொண்டுவந்து அடுக்கவேண்டும். பிறகு அதைப் பார்த்து நோட்டுப் புத்தகத்தில் எழுதும் பயிற்சி.

இரண்டு நிமிடத்தில், எனக்கு அந்த விளையாட்டு போரடித்துவிட்டது. ‘அடுத்து என்ன?’ என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

ஆனால், அங்கிருந்த குழந்தைகள் யார் முகத்திலும் சலிப்பைக் காணோம். ஒரு மொழிப் பாடம் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல் விளையாட்டாக, ஜாலியாக அனுபவித்துச் செய்துகொண்டிருந்தார்கள்.

இப்படி நான்கைந்து வார்த்தைகள் எழுதி முடித்தபிறகு, அதுவரை அடுக்கிய எழுத்துகளையெல்லாம் பழையபடி பெட்டியில் கொண்டுபோய்ப் போடவேண்டும். படங்களை எடுத்துவைக்கவேண்டும், பாயைச் சுருட்டவேண்டும்.

நான் இப்போது எல்லாக் குழந்தைகளையும் கவனிக்கத் தொடங்கியிருந்தேன். சிலர் பொறுமையுடன் ஒவ்வோர் எழுத்தாகப் பெட்டியில் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். இன்னும் சிலர், எல்லா ‘S’களையும் ஒரு நடை, எல்லா ‘a’க்களையும் ஒரு நடை என ஷார்ட் கட்டில் நேரம் மிச்சப்படுத்தினார்கள்.

அடுத்து, கணிதப் பாடம். கிட்டத்தட்ட சதுரங்கப் பலகைபோன்ற ஓர் அட்டை. அதன் சதுரங்களில் 1 முதல் 18வரையிலான எண்கள் குறிக்கப்பட்டிருந்தன. அதையும், சில உலோகப் பட்டைகளையும் வைத்துக்கொண்டு குழந்தைகள் சுலபமாகக் கழித்தல் கணக்குப் போடத் தொடங்கினார்கள்.

இதில் எனக்கு ஆச்சர்யமாகத் தோன்றிய விஷயம், பெரும்பாலான குழந்தைகள் எந்தவிதமான வழிகாட்டுதலையும் எதிர்பார்க்கவில்லை. எப்போதோ சொல்லிக்கொடுத்ததை நினைவில் வைத்துக் கச்சிதமாகக் கணக்குப் போட்டுக் குறிப்பேட்டில் எழுதிவிட்டன.

அதுமட்டுமில்லை. ஒவ்வொரு பயிற்சி முடிந்ததும், அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதையும் அவர்கள் குழந்தையின் முடிவுக்கே விட்டுவிடுகிறார்கள். குழந்தை என்ன செய்ய விரும்புகிறதோ, அதைச் செய்யலாம், தடுப்பதில்லை.

வழக்கம்போல், நேரம் ஓடியதே தெரியவில்லை. அரை மணி நேரம் முடிந்ததும், பள்ளியின் தலைமை ஆசிரியை திரும்பி வந்து நினைவுபடுத்தியபிறகுதான், நாங்கள் மனசில்லாமல் எழுந்துகொண்டோம்.

மீண்டும் நாங்கள் அலுவலக அறைக்குத் திரும்பியபோது, என் முன்னே நடந்துகொண்டிருந்த ஒருவர் சத்தமாகக் கேட்டார், ‘டெய்லி ஸ்கூல் இப்படிதான் ஒழுங்கா நடக்குமா? இல்லை, இன்னிக்கு நாங்க அப்ஸர்வேஷனுக்காக வர்றோம்ன்னு சும்மா செட்டப் செஞ்சிருக்கீங்களா?’

இப்படி ஒரு கேள்வியை, அந்த நேரத்தில் நாங்கள் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. பெரும்பாலானோர் சங்கடமாக நெளியத் தொடங்கினோம்.

அந்த ஆசிரியையின் நிலைமைதான் ரொம்பப் பரிதாபம். அவர் முகத்தில் அடிபட்ட பாவனை, இந்த நேரடிக் குற்றச்சாட்டு அவர் மனத்தைச் சுட்டிருக்கவேண்டும் என்பது புரிந்தது. சங்கடமாகப் புன்னகைத்து ஏதோ சொல்லி மழுப்பினார். பத்துப் பேர் மத்தியில் இப்படி அவமானப்பட்டுவிட்டோமே என்கிற உணர்வில், அவருடைய குரல் வெகுவாகத் தணிந்திருந்தது.

நல்லவேளை, அப்போது எங்களைப் ’பார்வையிட’ எங்களுடைய குழந்தைகள் யாரும் அங்கே இல்லை.

******************************************************

என். சொக்கன் …

05 02 2009

எழுதியவர் : செல்வமணி - (வலையில் படித்த (12-Sep-15, 8:42 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 123

மேலே